Pages

Sunday, 1 November 2015

சங்க இலக்கியத்தில் பிரபந்தமரபு-



சங்க இலக்கியத்தில் பிரபந்தமரபு-

  முனைவர்.த.விஷ்ணுகுமாரன். தமிழ்த்துறை, திராவிடப்பல்கலைக்கழகம்.

   எந்தவொரு இலக்கிய வகையாயினும் திடீரென உருகொள்வதில்லை, அதற்கென  வரலாற்று, சமூகப் பின்புலம் இருக்கும் என்பதுடன் , அது தான் தோன்றிய காலகட்டத்திலுள்ள புதுமையையும் உள்கொண்டிருக்கும். இதன் மூலம் ஒரு  இலக்கியவடிவம் அது எழுந்த காலகட்டத்திற்கேற்ற புதுமைகளைக் கொண்டிருந்தாலும் அதன் இன்றியமையாத கூறுகள் அம்மொழியிலுள்ள பழமரபுகளைக் கொண்டிருக்கும் என்பது புலனாகும். எடுத்துக்காட்டாக, தற்கால திரையிசைப் பாடல்களில் சங்கஇலக்கியப் பாடல்களின் கருத்துக்கள் கையாளப்பட்டிருக்கும் பாங்கினைச் சுட்டலாம். இன்னும் ஓர் உதாரணமாக அண்ணாப் பிள்ளைத்தமிழ் என்ற இருபதாம் நூற்றாண்டு இலக்கியப்படைப்பினையும் கூறலாம். இது  அறிஞர் அண்ணாவைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் போற்றுவதாக இருந்தாலும் கூட அதன் அடிப்படை  அமைப்பு பிள்ளைத்தமிழ் எனும் பழமையான இலக்கியவடிவம் அல்லது பிரபந்தவகையைச் சார்ந்ததாகும். 

             இது குறித்து தமிழுலகில் அமைப்பியல்வாதியாக அறியப்படும் தமிழவன் இவ்வாறு கூறுகிறார்.ஒவ்வொரு இலக்கியவரலாறும் பழைய வரலாற்றை(பழைய கதையை) மீண்டும் எழுதுவதுதான். இதிலிருந்து சங்க இலக்கிய அழகியல் பற்றிய புதுப்பரிமாணம் கிடைப்பதாகக் கூறலாம் அல்லது மொத்த தமிழிலக்கிய வரலாறும் பிள்ளைத்தமிழ்,தூது, கோவை, பள்ளு, அகம், புறம்( கண்ணதாசன் வரை தொடர்கிறது)  என்பன போன்றனவையே மீண்டும் மீண்டும் எழுதப்படுகின்றன எனலாம். ஒரு பிள்ளைத் தமிழைத் தொடர்ந்து பல பிள்ளைத்தமிழ்கள்-ஒரு கோவை இலக்கியத்தைத் தொடர்ந்து எத்தனை கோவைகள்? இந்தத் தொடர்ச்சி ஒருவித அழகியலை எடுத்துச் செல்கிறது-
     எனவே   ஆராயும்போது இலக்கியவடிவங்கள், கருத்துக்கள், வகைமைகள் மரபார்ந்தத் தொடர்ச்சியைப் பெற்றிருப்பது தெரியவரும். அவ்வகையில் தமிழிலுள்ள பிரபந்த இலக்கியங்களை மாதிரி ஆய்வுக்கு ( Sample Research) உட்படுத்தும் போதும் இதே முடிவு நமக்குக் கிடைக்கிறது.
                  தமிழில் 96 வகையான பிரபந்தஇலக்கியங்கள் உள்ளன என்றும் அவை சிற்றிலக்கியம் என்றும் தமிழிலக்கியவரலாற்றில் குறிக்கப்பெறுகின்றன. இவற்றின் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, முடிவேந்தர்கள் எனப்படும் சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பின்னரே சிற்றிலக்கியம் அதிகம் எழுந்தன என்றும் சிற்றிலக்கியங்கள் அடிவரையறையால் குறைந்தவை எனவும் கூறுகின்றனர். ஆயினும் இது ஏற்புடையதாக இல்லை. ஏனெனில் கலம்பகத்தாலான நந்திக்கலம்பகம் நூல் கி.பி. 9 ஆம்நூற்றாண்டிற்கு முன்னரே முடிமன்னனாகத் திகழ்ந்த மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருப்பதோடு அதிக அடிகளைக் கொண்டுள்ளது. கலிங்கத்துப்பரணி எனும் பிறிதொரு பிரபந்தவகையைச் சார்ந்த நூல் அதிக அடிகள்  கொண்டிருப்பதுடன் சோழப்பேரரசின் வெற்றியைப் பேசுகின்றது. எனவே பேரரசுகள் வீழ்ந்த காலத்திற்குப் பின்னர் குறிப்பாக 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் பிரபந்தங்கள் தோன்றின என்பதை ஏற்கவியலாது. ஆனால் இந்த காலகட்டத்தில் அதிகளவு பிரபந்த  இலக்கியங்கள் தோன்றின எனக் கூறுவதில் தவறில்லை.
       காலத்தால் பிந்தையவை என பல பிரபந்தங்கள் சுட்டிக்காட்டப்பட்டாலும் காலத்தால் அவை மிகவும் பழைமை வாய்ந்தவை என்பதே உண்மை. இன்னும் சொல்லப்போனால் தொல்காப்பிய காலத்திலேயே அவை இருந்துள்ளன. நமக்குத் தொல்காப்பிய காலத்தில் வழக்கிலிருந்த பிரபந்தங்கள் கிடைக்காவிட்டாலும், அது தரும் இலக்கணக்குறிப்புகளே பழங்காலத்திலேயே பிரபந்தங்கள் தோன்றிவிட்டன என்பதற்கான சான்றுகளாக விளங்குகின்றன. அவ்வகையில் பரணி, ஆற்றுபடை எனும் இரண்டு பிரபந்த இலக்கியவகைகளைச் சான்றுகளாகக் கொண்டு ஆராயலாம்.
பரணி
பரணி இலக்கியங்களுள் முக்கியமானவையாக முன்னிறுத்தப்படுபவை கலிங்கத்துப்பரணி மற்றும் தக்கயாகப்பரணி ஆகியனவாகும். இவற்றுள் கலிங்கத்துப்பரணி பாடல்களின் அமைப்பை நோக்கும்போது பொருள்நிலையில் சில கருத்துகளைப் பேசுவதன் மூலம் தமக்கான அடையாளத்தைக் கொண்டுள்ளன. அவைகளுள் முதன்மையானவையாகக் கடைதிறப்பு, பேய்பாடியது போன்றவற்றைச் சுட்டலாம். இவற்றுள் பேய்பாடும் பகுதியின் மூலத்தைத் தொல்காப்பியத்திலும் புறநானூற்றிலும் காணமுடிகிறது. தொல்காப்பியத்தில் பேய்க்காஞ்சி, களவேள்வி, மறக்களவழி, மறக்களவேள்வி, பேய் ஓம்பிய பேய்ப்பக்கம் போன்ற துறைகள் போர்க்களத்தில் பேய்மகளிர் செயல் பற்றியும் மனித உடலைக் கொண்டு, வேள்விசெய்தலைப் பற்றியும் பேசுவனவாக உள்ளன. புறநானூற்றுப் பாடல்கள்(368,369,370,371 வெற்றி பெற்ற மன்னர்கள் இறந்துபோன வீரர்களின்   உடல்களை வைத்து சமையல் செய்வதாகவும், உடல்களை பேய்மகளிர் விரும்புவதாகவும் குறிப்புகள் தருகின்றன. காட்டாக புறநானூறு -371 ஆம் பாடலைத் தரலாம்.
விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி,
ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்,
பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின்,
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்,
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்,
ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த,
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்கஎனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய்! நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே-.புறம்-371

          இப்பாடல் போர்க்களத்தில் இறந்தோரின் உடல்களைக் கொண்டு வேள்வி செய்வதைக் குறிப்பிடுகிறது. மேலும் திருமுருகாற்றுப்படையில் சூரரமகளிர் மனித உடல்களைச் சிதைக்கும் காட்சியும் கருதத்தக்கது. இந்த பின்னணியில் கலிங்கத்துப் பரணியில் இடம்பெறும் பேய்களின் செயல்களை ஆராயும்போது, தொல்காப்பியம் மற்றும் புறநானூறு, திருமுருகாற்றுப்படையில் இடம்பெறும் கூறுகளையே  பிரதிபலிப்பது தெளிவாகிறது. எனவே பரணி அமைப்பிலுள்ள முக்கியமான அடிப்படை அமைப்புக்கூறுகள் தொல்காப்பிய காலத்திலும் புறநானூறு பாடப்பட்டக் காலகட்டத்திலேயே இருந்துள்ளன என்பது உறுதிபடும்.
           இது போலவே ஆற்றுபடைப் பாடல்களும். ஆற்றுபடையைப் பிரபந்தத்தில் ஒன்றாக வைத்து போற்றும் மரபு தமிழில் உண்டு. அதேவேளை ஆற்றுபடை பற்றிய துறையும் ஆற்றுபடையில் அமைந்த நெடும்பாடல்களும் பழந்தமிழில் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக துாது இலக்கியங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை. தமிழிலக்கியத்திற்கு வளம்சேர்த்த பெருமையுடையதும் பிற்காலத்தில் பல்கிப்பெருகியதுமான  தூது இலக்கியங்களுக்கு முன்னுதாரணமாக சங்க இலக்கியத்திலேயே பல பாடல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, புறம் 67 ஆம் பாடலான-“அன்னச்சேவல்!அன்னச்சேவல்!
ஆடுகொள்வென்றிஅடுபோரண்ணல்” எனத் தொடங்கும் பாடலைக் குறிக்கலாம். அன்னச்சேவலிடம் பேசுவது போன்று அமையும் இப்பாடல் கி.பி,15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னெரெழுந்த தூது இலக்கியங்களான கிள்ளைவிடுதூது, மேகம்விடுதூது என்பன போன்ற புகழ்பெற்ற தூது இலக்கியங்களை நினைவு படுத்துகின்றன.
        அவ்வாறே சூதர் ஏத்திய துயிலெடைநிலை எனும் தொல்காப்பிய சூத்திரம் பிள்ளைத்தமிழின் ஒரு சிறுபாகத்தைக் குறிப்பிடுவனவாகும்.
  மேற்கூறிய விளக்கங்கள் வழி சங்ககாலத்திலேயே பிரபந்தநூற்கள் வேறொருவடிவில் இருந்திருக்கவேண்டும் என்பதை உறுதிபடுத்துகின்றன.  ஆனால் அறிஞர்கள் சிலரது கருத்துப்படி, பிரபந்தம் அல்லது சிற்றிலக்கியவகைகள் தோன்றுவதற்கான தொடக்கநிலை குறிப்புகளே இவை என்றும் , பின்னாளில் காலஓட்டத்தில் அவை  தனித்ததொரு இலக்கியவகைமையாக உரவெடுத்தன. ஆனால் அமைப்பியல் நோக்கில் பார்க்கும்போது, பழங்காலத்திலேயே சிற்றிலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தஏற்புடையதாக உள்ளது. அமைப்பியலாளரான லெவிஸ்ட்ராஸ் மொழிக்கும் நிலத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு என்கிறார். நிலத்தில் நாம் பார்க்கும் மாற்றங்கள திடீரென உருவாகுவதில்லை. அதற்கு ஏதோ காரணம் இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறியளவில் தரையில் அரிப்புக் காணப்பட்டால் சில நாட்களுக்கு முன்னால் மழைபொழிந்திருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறோம். அவ்வண்ணமே மொழியில் உருவாகும் சொற்கள் திடீரென உருவாகுவதில்லை. அதற்கான சமூக இயங்கியல் நிகழ்ந்திருக்க வேண்டும். மொழியிலுள்ள சில கூறுகளை வைத்து முழுமையாக ஆராய்ந்து பார்த்தால் அந்த சமூகத்தின் நுணுக்கமான வரலாற்றை அறிந்துகொள்ள முடியும் என்பார் லெவிஸ்ட்ராஸ்.
    அதன்படி பார்க்கும்போது தொல்காப்பியத்திலும் சங்ககால இலக்கியங்களிலும் காணப்படும் பிரபந்தத்தின் கூறுகள் அதாவது சிற்றிலக்கியத்தின் கூறுகள் வெறுமனே தோற்றக் காரணியாக இருக்கமுடியாது. ஏற்கனவே அவை தமிழில் மரபுரீதியாகவே இருந்துள்ளன என்பதும் அவையே தொல்காப்பியத்திலும் சங்கஇலக்கியங்களிலும் பதிவாகியுள்ளன என்பதும் விளங்கிவிடும்.

No comments:

Post a Comment