Pages

Sunday, 1 November 2015

சங்க இலக்கிய அக, புற மரபும் அந்தாதி இலக்கியமும்

சங்க இலக்கிய அக, புற மரபும் அந்தாதி இலக்கியமும்


முனைவர் ப. தாமரைக்கண்ணன்
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
மாநிலக் கல்லூரி, சென்னை-600 005.

தமிழ் மொழியானது, தமக்கெனத் தனித்த மரபினைக் கொண்டு தொல்பழங்காலந்தொட்டே இலக்கிய இலக்கண நுhல்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தித் தம் புகழினை நிலைக்காட்டி வருகின்றது.

""தொன்று நிகழ்ந்த(து) அனைத்தும் உணர்ந்தி
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்(று) உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!""
என்று பெருங்கவிஞர் பாரதியார், தமிழ்த்தாயின் புகழினையும் தொன்மை இயல்புதனையும் போற்றுவார்.
ஏட்டில் எழுதாத இலக்கியங்களாகப் பாமர மக்களின் பட்டறிவினை விளக்கும் பான்மை வாய்ந்த பற்பல பாடல்களும் நாட்டார் வழக்காறுகளாக நிலைபெற்று வருவதனையும் காணமுடிகிறது.
உலக வழக்கு, நாடக வழக்கு ஆகியவற்றிலும் பாடல்சான்ற புலனெறி வழக்கிலும், பாடல்களைப் பாடலும் நினைவகற்றாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதும் காலங்காலமாகக் கண்கூடாகக் காணலாம்.
‘சான்றோர் கவி’ என்றும் ‘பதினெண் மேற்கணக்கு’ என்றும் ‘பாட்டும் தொகையும்’ என்றும் போற்றப்பெறும் சங்கச் செய்யுள்களை நாம் பொருளுணர்ந்து பயின்று வருகிறோம். ஆதிகால முதல் அந்தப் பாடல்களைப் பலப்பல காரணங்களுக்காகப் பாதுகாத்தும் வருகிறோம். பழந்தமிழர் வாழ்வின் கூறுகளைப் பாரெங்கும் பறைசாற்றுவன சங்க இலக்கியங்கள் எனலாம்.
சங்க இலக்கியப் பாடல்களை, அகப்பாடல் என்றும் புறப்பாடல் என்றும் பகுத்துப் பொருளிலக்கணம் படைத்துள்ளோம். வாழ்வின் இரு கண்களாகக் காதலையும் வீரத்தையும் கொண்டிருந்தவர் தமிழர் என்பதை இதன்வழி நன்கு உணர முடியும். இன்னொரு விதமாகக் கூறுவதென்றால் காதல் பாடல்களை, உள்ளத்தின் அகத்தே நடைபெறுவதால் ‘அகப்பாடல்கள்’ என்றும் உள்ளத்தின் புறத்தே வெளிப்படுத்தத்தக்க கொடை, வீரம் முதலாய பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியே ‘புறப்பாடல்கள்’ என்றும் தொடர்ந்து உணர்த்தி வருகிறோம். அவற்றுக்கான மரபுகளைத் தொல்காப்பியம் முதலாய இலக்கண நுhல்களில் நாம் விரிவாகக் கற்கலாம். பொருளிலக்கணத்துள், அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய இயல்களில் அக மரபுகைளயும் புறத்திணையியலில் புற மரபுகளையும் வகைதொகை செய்து வழங்குகிறது தொல்காப்பியம். அவற்றுள் சில அடிப்படைகள் மட்டும் இங்கு நினைவு கூறலாம்.
அகத்திணைஒ புறத்தினை
1. குறிஞ்சி ஒவெட்சி
2. முல்லை ஒ வஞ்சி
3. மருதம் ஒ உழிஞை
4. நெய்தல் ஒ தும்மை
5. பாலை ஒவாகை
6. பெருந்திணை ஒ காஞ்சி
7. கைக்கிளை ஒ பாடாண்
ஆகியவை விளக்கப் பெறுகின்றன. முதல் ஐந்து அகத்திணைகள் ‘அன்பின் ஐந்திணை’ எனப்பெறும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம், கைக்கிளை என்பது ஒருதலைக்காமம்.
அகத்திணை அடிப்படைகள்
முதற்பொருள் (பின்னணி)
நிலம் பொழுது
நானிலம்சிறுபொழுதுபெரும்பொழுது
   +(1 நாளின் பகுதி)(1 ஆண்டின் பகுதி)
பாலை(4 மணி நேரம்)(2 மாதம்)
கருப்பொருள் (சூழல்)
1. தெய்வம்
2. உணவு
3. மா (விலங்கு)
4. மரம்
5. புள் (பறவை)
6. பறை (தோற்கருவி)
7. செய்தி (தொழில்)
8. யாழ் (நரம்புக்கருவி)
9. பகுதி (பூ, நீர் முதலியன)
உரிப்பொருள் (ஒழுக்கம்)
குறிஞ்சி  புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை  இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல்  இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை  பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
என வரும் மரபுகளைப் பின்னணியாகக் கொண்டு தலைவனும் தலையியும் வாழ்ந்த, வாழ வேண்டிய முறைமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
புறப்பொருள் அடிப்படைகள்
""வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம் ;
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் ;  - உட்காது
எதிரூன்றல் காஞ்சி ;  எயில் காத்தல் நொச்சி ;
அதுவளைத்த லாகும் உழிஞை ;  அதிரப்
பொருவது தும்பையாம் ;  போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்"".

எனும் திவாகரப் பாடல் நமக்குப் புறப்பொருள் திணைகளின் உட்பொருளைப் புலப்படுத்துவதாக அமைகிறது.
தொல்காப்பியத்துள் எழுதிணையாக அமைந்த புறத்திணைகள், பின்னர் வந்த இலக்கண நுhல்கள் விரித்துப் பன்னிரண்டாக உரைக்கும். கரந்தை, நொச்சி, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றைப் புறப்பொருளில் சேர்த்து இலக்கணம் வகுத்துப் பன்னிரு துறைகளாக வளர்ச்சியைக் காட்டும். ஆயின், கரந்தையை வெட்சியிலும், நொச்சியைக் கரந்தையிலும் அடக்கிவிடலாம். கைக்கிளை, பெருந்திணை ஆகியன தொல்காப்பியத்தைப் பொறுத்தவரையில் அகத்திணையுளே அடங்குகின்றன.
அந்தாதி மரபு
அந்தாதி என்பது அந்தம்+ஆதி ஆகிய சொற்களின் சேர்க்கையாகும். அந்தம் என்பது முடிவு: ஆதி என்பது முதல். ஆந்தத்தையே ஆதியாக உடையது அந்தாதி எனலாம். பல அடிகளைக் கொண்ட செய்யுளின் இறுதியிலுள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகிய இவற்றிலொன்று, அடுத்து வரும் அடியின் முதலாக அமையும்படி பாடுவதே அந்தாதி. இவற்றை எழுத்தந்தாதி, அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி என்பர். ஒரு பாடலில் பூ என முடிந்து, அடுத்த பாடல் மது என ஆரம்பித்தலும் (திருவாய்மொழி 6:1-2).
ஆகுபெயர் அந்தாதி தொடை என்று மாறனலங்கார உரை அதற்கும் இலக்கணம் கூறும். ஈட்டின் அரும்பொருள் உரைகளுள் பொருளிசை அந்தாதி என்று கூறும்.
 இந்த மரபினை நாம் நாட்டுப்புறப் பாடல்களிலேயே அதிகம் காணலாம்.
எடுத்துக்காட்டாக,
""முப்ப துடன்எடுத்து, மூங்கில் இலைமேலே. . . .
மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே!. . . .""
என்னும் பாடலைக் காட்டலாம்.
இலக்கணம்
தொல்காப்பியத்துள் அந்தாதி என்பது ‘புதுவது புனைந்த யாப்பின் மேற்ற’ தாகிய விருந்தினுள் அடங்குவதாகப் பேராசிரியர் எனும் உரையாசிரியர் உரைப்பர்.
""அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி""
-யாப்பருங்கலக் காரிகை  7
""ஈறு முதலாத் தொடுப்பது அந்தாதியென்(று)
ஓதினர் மாதோ உணர்ந்தசி னோரே""
- யாப்பருங்கலம் - 52
""அடியும் சீரும் அசையும் எழுத்தும்
முடிவும் முதலாச் செய்யுள் மொழியிஃது
அந்தாதித் தொடையென்(று) அறியல் வேண்டும்""
- யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்
என்று இலக்கணங்கள் உரைக்கும்.
அந்தம், ஆதி இரண்டும் வடமொழிச் சொற்கள்; ஆகவே, அந்தாதி என்பதனை ""இறுமுதல்"" என்றழைப்பது தமிழ்மரபு. கூடமொழியில் அந்தாதி நுhல்கள் இல்லை என்பர். நமக்குக் கிடைத்துள்ள ‘அற்புதத் திருவந்தாதி’ எனும் காரைக்காலம்மையாரின் அந்தாதி பழமை வாய்ந்தது. அந்த நுhலிலே அந்தாதி என்ற தொடர் அமைந்துள்ளது. (பதினொன்றாம் திருமுறை)
சங்க இலக்கியங்களில்
சங்க இலக்கியங்களில் அந்தாதிப் பாக்களையும் அந்தாதித் தொடை அமைந்த பாடல்களையும் பார்க்க முடிகிறது.
அந்தாதிப் பாடல்கள் அமைந்த தொடர்ந்து பத்துச் செய்யுள் அகப்பொருள் நுhலாகிய ஐங்குறுநுhற்றில் நெய்தல் திணையில் தொண்டிப் பத்தில் இருக்கக் காணலாம்.
மேலும், புறப்பொருள் நுhலாகிய பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தும் அந்தாதிப் பாக்களே.
அந்தாதித் தொடையமைந்த பாடலாகப் புறநானூற்றின் இரண்டாம் பாடல் அமைகிறது.
""மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரு மென்றாங்கு"" (புறம் 2:1-5)
இந்தப் பாடலில் நிலன், விசும்பு, வளி, தீ, நீர் ஆகியவை கலந்த மயக்கமாகிய உலகத்தை அந்தாதியாகக் கோவைப்படுத்தி அணிநலம் பெற அமைத்துள்ள பாங்கு எண்ண இன்புறத்தக்கது.
நற்றிணை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகியவற்றிலும் இந்த அமைப்பினைக் காணலாம் என்பர் தமிழண்ணல். (புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு ப.155) ஆக, அந்தாதிப்பாவும், அந்தாதித் தொடை அமைந்த பாக்களும் சங்க இலக்கியத்தே தோன்றிவிட்டன என்ற முடிவுக்கு வரலாம்.
காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதியினை அடுத்துத் திருமூலரின் திருமந்திரத்தில் நான்காம் தந்திரம் முழுவதும் அந்தாதித் தொகையினதே.
நாலாயிரத் திவ்விய பிரபந்த இலக்கியங்களில் பன்னிரு ஆழ்வாருள் எண்மர் அந்தாதி இலக்கியம் படைத்திருக்கக் காண்கிறோம்.
ஆழ்வார்- படைப்பு
பொய்கையாழ்வார்-முதல் திருவந்தாதி
பூதத்தாழ்வார்-இரண்டாம் திருவந்தாதி
பேயாழ்வார்-மூன்றாம் திருவந்தாதி
திருமழிசையாழ்வார்-நான்காம் திருவந்தாதி
நம்மாழ்வார்-திருவிருத்தம்
நம்மாழ்வார்-பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார்- திருவாசிரியம்
நம்மாழ்வார்-திருவாய்மொழி
மதுரகவியாழ்வார்-கண்ணிநுண் சிறுத்தாம்பு
பெரியாழ்வார்-‘பேய்ப்பாட்டு’ எனத் தொடங்கும் திருமொழி
திருமங்கையாழ்வார்-‘மன்னிலங்கு’ எனத் தொடங்கும் திருமொழி.
(வைணவ இலக்கிய வகைகள் ப.146)
இந்த அந்தாதிகளைத் தொடர்ந்து இராமாநுச நுhற்றந்தாதி, கம்பரின் சடகோபரந்தாதி, சரசுவதி அந்தாதி முதலியன வந்துள்ளன.
பதினொன்றாம் திருமுறையினைப் பார்க்கின் எட்டு அந்தாதிகள் உள்ளன. பொதுவாக அதனைப் ‘பிரபந்த மாலை’ என்றே குறிப்பர். சிறப்பாக ‘அந்தாதி மாலை’ என்றே குறிக்கலாம். திருவாசகத்துள் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம் முதலியன அந்தாதி வடிவம் பெற்றவையே.
பெருங்கதை  எனப்பெறும் ‘கொங்குவேளிர் மாக்கதை’ முழுவதும் அந்தாதியாக அமைத்து 132 காதைகளையும் படைத்திருப்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். பெரிய புராணமும் ‘உலகெலாம்’ எனத் தொடங்கி, ‘உலகெலாம்’ என முடிந்திருக்கும் பான்மையைப் பார்க்கலாம். ஆயின் பெரிய புராணம் முழுவதும் அந்தாதி வடிவினைக் கொண்டதன்று.
இலக்கணத்துள், வெண்பாப் பாட்டியல், சுவாமிநாதம், வரையறுத்த பாட்டியல் முதலியன அந்தாதித் தொடையி அமைந்தவை.
சிற்றிலக்கியங்கள்
கலம்பக உறுப்புகளில் ஒன்றான அம்மானை என்பதில் இந்த அந்தாதி நடை இடம்பெற்றுள்ளது. மகளிர் மூவர் ஆடும் அம்மானையில் முதற்பெண்ணின் கூற்றுக்கு இரண்டாமவள் தொடுக்கும் வினாவும் மூன்றாமவள் முடிக்கும் விடையுமாக அந்தாதியாக அமைகிறது.
இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற அந்தாதிகள் காலப்போக்கினில் தலைவன், குரு, தலம், இறைவி ஆகியவற்றில் வரும் முறையிலும் அமைந்தன.
(எ.டு)
இறைவன் - திருமால் அந்தாதி
இறைவி  அபிராமி அந்தாதி, சரசுவதி அந்தாதி, திருமகள் அந்தாதி
குரு  சடகோபரந்தாதி
தலைவன் - பந்தனந்தாதி
தலம் - திருப்புல்லை அந்தாதி
(வைணவ இலக்கியவகைகள் ம.பெ. சீனிவாசன்)
எண்ணிக்கையிலும் யாப்பிலும் அமைந்தவை
பதிற்றந்தாதி, நுhற்றந்தாதி, (பதிற்றுப் பத்தந்தாதி) அந்தாதி ஆயிரம் என்று எண்ணிக்கை அடிப்படையில் பெருகிய அந்தாதிகளைக் காணலாம்.
மண்டலித்தல்
அந்தாதியாகப் பாடப்பெறும் நுhலின் முதல் செய்யுளின் ஆதியே (தொடக்கமே) ஈற்றுச் செய்யுளின் இறுதியில் அமைத்துப் பாடல் ‘அந்தாதி மண்டலி’ எனப்பெறும். மண்டலம் - வட்டம். ஒரு பூமாலையைத் தொடுப்பவர் இறுதியில் கயிற்றின் இரு முனைகளையும் இணைத்து மாலை போலத் தொடுப்பதைக் காணலாம். அதுபோல முதல் பாடலின் முதல் சீரும் இறுதிப் பாட்டின் இறுதிச் சீரும் இணைந்திருப்பதைக் காணலாம். இறைவனுக்குப் பாமாலை சாற்றும் முறையாக இஃது அமைந்துள்ளது. (எ.டு) அபிராமி அந்தாதியில், முதற்பாடல், ‘உதிக்கின்ற’ எனத் தொடங்கி, இறுதிப் பாடல் ‘உதிக்கின்றனவே’ என முடிவதனைக் காணலாம்.
உதிக்கின்ற செங்கதிர் ; உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் ; மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுந்துணையே
குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கை வல்லி
கழைப் பொருத்திரு நெடுந்தோளுங் கரும்பு வில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையும்
உழையப் பொருது கண்ணும் நெஞ்சில் எப்போதும்
உதிக்கின்றனவே.
பாட்டியல் நுhல்கள், அந்தாதித் தொகை, நுhற்றந்தாதி, பதிற்றந்தாதி, கலியந்தாதி, ஒலியந்தாதி என்று ஐவகை அந்தாதியாகச் சுட்டுவதாக அரங்க. நலங்கிள்ளி உரைப்பார். (பாட்டியல் ஓர் அறிமுகம் ப.54)
உயிரெழுத்தந்தாதி, ஓரெழுத்தந்தாதி, பஞ்சாட்சர அந்தாதி, ஆறெழுத்தந்தாதி என எழுத்தின் அடிப்படையிலும் ஏகபாத அந்தாதி என அடியமைப்புக் கருதியும் இகழகலந்தாதி (நிரொட்டக அந்தாதி) என ஒலியமைப்புக் கருதியும் சிலேடையந்தாதி எனப்பொருண்மை கருதியும், யமக அந்தாதி, திரிபு அந்தாதி எனச் சொல்லணி அடிப்படையிலும் 4க்கும் மேற்பட்ட பல்வகை அந்தாதிகள் உள்ளன என்று ச.வே. சுப்பிரமணியன் குறிப்பர் (தமிழ் இலக்கிய வகையும் வடிவும்)
சங்க இலக்கியங்களின் அகப்பாடல், புறப்பாடல்களில் கால்கொண்ட அந்தாதி இலக்கிய வடிவம் பின்னாளில் பெருவரவிற்றாகப் பல்கிப் பெருகி வளர்ந்தமைக்கு அடிப்படைக் காரணமாக, நினைவாற்றல் பயிற்சிக்கு அவை உதவுவதனைக் கருதமுடியும். ஒரு பாடல் தொடங்கிவிட்டால் அடுத்தடுத்த பாடல்களைத் தடுமாற்றம் இன்றித் தொடர்ந்து சொல்லுவதற்கும், நினைவில் அமைத்துக் கொள்வதற்கும் வாய்ப்பாக அந்தாதி நுhல்கள் அமைந்து நம் நினைவுகளில் நீங்கா இடம் பெறுகின்றன.
******
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் புறத்திணையியலுள் கூறப்பெற்றுள்ள நுhற்பாக்களின் வழியே பின்னாளில் பல்வகைச் சிற்றிலக்கியங்கள் கால்கொண்டன. பிள்ளைத்தமிழ், உலா, திருப்பள்ளியெழுச்சி முதலியனவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
""புறப்பொருள் இலக்கண நுhல்களில் காணப்பெறும் புறத்திணைகனையும் புறத்துறைகளையும் கருவாகக் கொண்டு முப்பது இலக்கிய வகைகள் வளர்ச்சியுற்றன என்பதைப் பாட்டியல் நுhல்களால் அறிகின்றோம்"" என்பர், சிற்றிலக்கியத் திறனாய்வில் ந.வீ. செயராமன் (ப.53)
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகியனவற்றில் பெரும்பான்மையும் பொருளியல், உவமவியல், மெய்ப்பாட்டியல் ஆகியனவற்றில் சிறுபான்மையும் அகப்பொருண்மை கூறுவனவும் உள்ளன. உலா, தூது, வேனில்மாலை முதலிய பல்வகைச் சிற்றிலக்கியங்கள் தோன்றக் காரணமாக அப்பகுதிகள் அமைவதனை விரிவாகத் தம் சிற்றிலக்கியத் திறனாய்வு நுhலில் ந.வீ. செயராமன் எடுத்தியம்பியுள்ளனர். (ப.54-56)
மதுரைக்கலம்பகம், அழகர் கலம்பகம், திருவருணைக் கலம்பகம், திருவெங்கைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம், திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் ஆகிய ஆறு கலம்பகங்கள் குறித்து மே.வீ. வேணுகோபாலனார், ஆ. சிவலிங்கனார், வே. சுப்பிரமணியன் ஆகிய தமிழறிஞர் மூவர், லெ. கரு. இராமநாதன் அவர்கள் தலைமையில் உரையாற்றிச் ‘சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள்’ எனக் கழகத்தாரால் (1971) வெளியிடப் பெற்றுள்ளது.


No comments:

Post a Comment