Pages

Sunday, 1 November 2015

2.குழவி மருங்கினும் கிழவ தாகும் பிள்ளைத் தமிழ்





குழவி மருங்கினும் கிழவ தாகும்  பிள்ளைத் தமிழ்

முனைவர் மா.கோவிந்தராசு,
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி,
தஞ்சாவூர் - 613005.
முன்னுரை
தொல்காப்பியம் ஐவகை இலக்கணங்களைக் கூறுவதோடு, பல்வேறு இலக்கிய வகைகளையும் சுட்டிச் செல்கின்றது. பிற்காலத்தில் தோன்றி வளர்ந்த பிள்ளைத்தமிழ், தூது, உலா, அந்தாதி, பள்ளு முதலான பலவகை இலக்கியங்களையும் தொல்காப்பியர் கோடிட்டுக் காட்டுகின்றார். அங்ஙனம் சுட்டிக் காட்டுவதில் ஒன்று பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆகும். குழவி, பிள்ளை, குழந்தை என்பன ஒரு பொருள் குறித்த பல சொற்கள் ஆகும். எனவே தொல்காப்பியர் குறிப்பிடும் குழவி மருங்கினும் கிழவதாகும் என்னும் நூற்பாவோடு பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கியத்தினை ஒப்பிட்டு இக்கட்டுரை ஆராய்கின்றது.

ஆய்வின் இன்றியமையாமை
தமிழ் இலக்கிய வகைமை பற்றிய சிந்தனை தொல்காப்பியர் காலத்திலேயே அரும்பிவிட்டதெனினும், தமிழ் இலக்கிய வகைமை பற்றிய ஆய்வு விளக்கமாகவும் மன நிறைவு தரும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழண்ணல் (தமிழ் இலக்கிய வகைகள், வையை, மலர்-1, ப.110) வலியுறுத்துகின்றார்.
ஸ்டெய்கர் என்னும் அறிஞர், ஓர் இலக்கியப் படைப்பு அப்படைப்புக்கு முன்னர் நிலவிய வகைகளிலிருந்து வேண்டிய கூறுகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு புதிய ஓர் இலக்கிய வகையாக உருப்பெறுகின்றது (றுநiளெவநin ருடசih (நுன)இ ஊழஅpயசயவiஎந டுவைநசயவரசநஇ P-263)  என்று செப்புகின்றார்.
அரசியல், ஆட்சியாளர், சமயம், மக்கள் சுற்றுச்சூழல் இவற்றிற்கு ஏற்ப இலக்கியத்தின் பாடுபொருளும் வடிவமும் மாற்றம் பெற்று வருகின்றன. எனவே இலக்கிய வகைமை பற்றிய ஒப்பீட்டு ஆய்வு மிகவும் இன்றியமையாததாக அமைகின்றது.
தொல்காப்பியம்
தொல்காப்பியம் பலவகை இலக்கியங்களுக்கு மூலமாக அமைந்துள்ளது. இதில் சிற்றிலக்கிய வகைகள் பலவற்றின் மூலங்கள் அல்லது கூறுகள் காணப்பெறுகின்றன. தொல்காப்பியத்தில் ஒரு கூறாக விளங்கிய சிற்றிலக்கியம் பிற்காலத்தில் தனி நூலாக மலர்ந்தது. சிற்றிலக்கிய வகைகள் இறைவன், மன்னன், வள்ளல், ஞானக்குரவர் என்ற நிலைகளில் மட்டுமன்றிச் சாதாரணக் குடிமக்களையும் கருத்திற்கொண்டு இயற்றப்பட்டுள்ளன.
முந்தைய இலக்கண - இலக்கியங்களில் உறுப்பாக அமைவனவற்றைத் தனி இலக்கிய வகையாகப் படைக்கும் நிலை வளர்ந்துள்ளது. சமய உணர்வை வெளிப்படுத்தச் சிற்றிலக்கிய வகைகளைக் கருவியாகக் கொண்டுள்ளனர். இறைவனின் அவதாரச் சிறப்பு, அரசனின் ஆட்சி, கொடைச் சிறப்பு முதலானவற்றை உயர்த்திக் கூறுவதற்குச் சிற்றிலக்கிய வகைகள் பயன்படுகின்றன. ஓர் இலக்கிய வகைக்குப் போட்டியாக இன்னோர் இலக்கிய வகையைப் படைக்க வேண்டும் என்ற புலவர்களின் போட்டி மனப்பான்மையாலும் சிற்றிலக்கிய வகைகள் பெருகியுள்ளன. இந்த அடிப்படையில், தொல்காப்பியர் கூறும்,
குழவி மருங்கினும் கிழவது ஆகும்
(தொல்.புறத்திணையியல், 24)
என்னும் நூற்பா பிற்காலப் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கிய வகையாக வளர்ந்துள்ளது.
குழவிப் பருவத்தினரிடத்தும் காமப்பகுதி உரியதாகும். புரைதீர்காமம் புல்லிய பகுதி கடவுளர் பாங்கினும் ஏனோர் பாங்கினும் அமைந்து வருதலேயன்றிக் குழவிப் பருவத்தினர் பக்கத்தும் உரிமையுடைத்தாக வரும்.
ஈண்டுக் குழவி என்றது உலகியலறிவு கிளைக்கப்பெறாத இளம் பருவத்தினரை. பால் பாகுபாடின்மை விளங்கக் குழவி என்றார். அவராவார் மக்கள் யாக்கையினராய்க் கடவுட்டன்மை உடையாரையும் குழவியாகக் கருதிக்கொள்ளப்பெறும் கடவுளரையுமாம்.
சமயநெறி பரப்பிய அருளாளர் கடவுளரைக் குழவிப் பருவத்தராக உருவகப்படுத்திச் செய்த இலக்கியங்களை நோக்கி ஆசிரியர் இவ்விதியை அமைத்தனர் போலும். ஆசிரியர் காலத்து இலக்கியங்கள் இக்காலத்துக் காணப்பெறாமையின் எடுத்துக் காட்டு அரிதாயிற்று.
இனி, இடைக்காலத்துத் தோன்றி வழங்கும் பாட்டியல் நூல் கூறும் பிள்ளைத் தமிழ் என்னும் கோட்பாடு, ஈன்றாளும் ஈன்றாளொடு ஒப்பாரும் குழவியிடத்துக் கொண்ட பேரன்பாகிய காதற்கேண்மையைப் புலப்படுத்த அமைந்ததாகும். ஈண்டுக் கூறியது காமப்பகுதி பற்றிய கேண்மையைப் புலப்படுத்துவதாகும். இவை இரண்டற்குமுரிய வேறுபாடு கருதாமல் இச்சூத்திரம் இக்காலப் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு மூலமாக அமைந்தது என்பார் கருத்துப் பொருந்தாதென்க.
இதனை மக்கட் குழவிக்கே கொள்க என்பார் நச்சினார்க்கினியர். கடவுட் பகுதி அதிகாரமாதலின் அவர் கருத்து ஏற்புடைத்தாக இல்லை என்க என்னும் ச.பாலசுந்தரம் (தொல்காப்பியம், தொகுதி-3, பகுதி-1, பொருளதிகாரம் - ஆராய்ச்சிக் காண்டிகையுரை, சூ.86 உரை விளக்கம், ப.221) கருத்தும் இங்கு நோக்கத்தக்கதாகும்.
பிள்ளைத்தமிழ் - தோற்றம், வளர்ச்சி..
சிற்றிலக்கியங்களுள் முதலிடத்தைப் பெறுவது பிள்ளைத்தமிழ். பிள்ளைத்தமிழ் என்னும் தொடரில் தமிழ் என்னும் சொல் அமைந்திருப்பது பிள்ளைத்தமிழின் தனிச் சிறப்பாகும். இது பிள்ளைக்கவி என்றும் வழங்கப்படுகின்றது.
பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்
தொண்ணூற்று ஆறெனும் தகைய.
(பிரபந்த மரபியல்)
தமிழறிஞர் ச.சுபாஷ் சந்திரபோஸ், பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கிய வகைக்குத் தொல்காப்பியத்திலேயே வித்து இருப்பதாகக் குறிப்பிடுவர். குழவி மருங்கினும் கிழவதாகும் (1030) எனத் தொல்காப்பியர் கூறுவதே அடிப்படை என்பர். மானுடப் பருவத்தில் இளமைப் பருவம் இயற்கையானது. உயர்வு  தாழ்வு, சூது  வாது அறியாத பருவம் - குழந்தையின் உருவமும் செயல்களும் ஐம்புலன்களால் நுகரக் கூடியவை  அப்படிப்பட்ட குழந்தைப் பருவத்தைப் பாடுவதே பிள்ளைத்தமிழ்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பிள்ளைத்தமிழ் காணப்பெறுகின்றது. பொதுவாகப் பிள்ளைத்தமிழ் பிறப்பு முதல் பூப்பு எய்தும்வரை பெண்பாலுக்குப் பருவங்கள் வகுக்கப்பெற்றுள்ளன. ஆண்பாலிற்கும் பெண்பாலிற்கும் பொதுப்படையாக அமைபவை ஏழு பருவங்கள், இரண்டிற்கும் இறுதி மூன்று பருவங்கள் வேறுபடுகின்றன. ஒவ்வொரு பருவத்திலும் பத்துப் பத்தாக நூறு பாக்கள் இருப்பது மரபு. பாடல்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தத்தில் அமையும்.




இருபாலுக்கும் பொதுப்பருவங்கள்:-
1.காப்புப் பருவம், 2. தாலப் பருவம், 3. செங்கீரைப் பருவம், 4. சப்பாணிப் பருவம், 5. முத்தப் பருவம், 6. வருகைப் பருவம், 7. அம்புலிப் பருவம்.
ஆண்பாலுக்குரிய பருவங்கள் : -
8. சிற்றில் பருவம், 9. சிறுபறைப் பருவம், 10. சிறுதேர்ப் பருவம் ஆகும்.
பெண்பாலுக்குரியவை :-
8. ஊசல், 9. அம்மானை, 10. நீராடல் ஆகும்.
கால வளர்ச்சியில் இன்னும் சில புதிய பருவங்கள் தோன்றிப் பத்துப் பருவங்கள் என்பவை பதினொன்று (ஆண்டாள் பிள்ளைத் தமிழ்), பன்னிரண்டு (சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ்), பதின்மூன்று (பெரியார் பிள்ளைத்தமிழ்) என வளர்ச்சி அடைந்துள்ள நிலையையும் காணலாம்.
தமிழில் காணப்பெறும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் பல்வேறு வகையான பாடுபொருளைக் கொண்டுள்ளன.
1. தெய்வங்களைப் பாடுவது  திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.        2. தங்கள் வழிகாட்டியைப் பாடுவது  திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ், மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ். 3. வள்ளல்களைப் பாடுவது  திருவேங்கட நாதர் பிள்ளைத்தமிழ்.
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முதலான இருநூற்றுக்கு மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் தமிழில் காணப்பெறுகின்றன என்று (தமிழ் இலக்கிய வரலாறு, பக்.137-138) விளக்கியுள்ளார்.
இந்திரகாளியப் பாட்டியல், பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், பிரபந்த தீபிகை, சுவாமிநாதம் ஆகிய இலக்கண நூல்களில் பிள்ளைத்தமிழ் இலக்கிய வகையின் இலக்கணம் கூறப்பெற்றுள்ளது.
பிள்ளைப் பாட்டே தௌ;ளிதின் கிளப்பின் மூன்று முதலா மூவேழ் அளவும் ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே என்று பன்னிருபாட்டியல் (101) குழந்தையின் வயதையும் பத்துப் பருவத்தையும் கூறுகின்றது.
தா.ஈசுவரபிள்ளை, பாட்டுடைத் தலைமக்களைக் குழந்தையாகக் கருதிப் பாடப்படுவதும், வழிபடு கடவுளர், வள்ளல், ஞானக் குரவர், சமுதாய நலச்சான்றோர் ஆகியோரைப் பாட்டுடைத் தலைமக்களாகக் கொண்டு பாடப்படுவதும் தலைமக்களைப் பத்துப் பருவங்களில் சிறப்பித்துப் பாடப்படுவதும், ஒவ்வொரு பருவத்திற்கும் குறிப்பிட்ட வயதைக் கணக்கிட்டுப் பாடப்படுவதும் 100 அல்லது 90 அல்லது 80 அல்லது 70 அல்லது 60 பாடல்களால் பாடப்படுவதும், ஆசிரிய விருத்தம் அல்லது பஃறொடை வெண்பா அல்லது கொச்சகக் கலி அல்லது கட்டளைக் கலித்துறை யாப்பினால் யாக்கப்படுவதும் ஆகிய இலக்கிய வகையே பிள்ளைத்தமிழ் (தமிழில் சிற்றிலக்கிய வரலாறு, முதற்பகுதி, பக்.261-262) என்று பிள்ளைத்தமிழ் இலக்கணத்தை விளக்குகின்றார்.
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் குழந்தையின் வாயிலிருந்து அமுதூறும் எச்சில் வடியும் காட்சியும் அந்த எச்சில் அந்தக் குழந்தை அணிந்துள்ள அணிகலன்களை நனைப்பதும் காட்டப்பெறுகின்றன. இந்தக் காட்சிகள் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றன.
மணிபுரை செவ்வாய் நின் மார்பகல நனைப்ப
(கலித்தொகை, 79:8)
விளங்கு பூணனைதர
(கலித்தொகை, 81:2)
பூணனைத்திடும் அவ்வாய்
(கலித்தொகை, 86:4)
குழந்தை குறுகுறு நடந்துவரும் தளர்நடையானது பிள்ளைத் தமிழில் வருணிக்கப்படுகின்றது. இந்தக் காட்சி சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றது.
தளர்புநடை போடும் பூங்கட் புதல்வன்
(அகநானூறு, 66:11-12)
தேரொடு தளர்நடைப் புதல்வன்
(ஐங்குறுநூறு, 66:2-3)
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
(புறநானூறு, 188)
தளர்நடை வருத்தம்வீட
(பெரும்பாணாற்றுப்படை, 250)
இவற்றைப்போலவே அம்புலிக் காட்சியும் சிற்றில் காட்சியும் சிறுதேர் உருட்டலும் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றன.
ஐய! திங்கட் குழவி வருகென யானின்னை - அம்புலி காட்டலினிது
(கலித்தொகை, 80:18-19)
தெருவில் நாம்ஆடும்
மணற் சிற்றில் காலிற் சிதையா
(கலித்தொகை, 50:1-2)
தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நற்றேர் உருட்டிய புதல்வன்
(பெரும்பாணாற்றுப்படை, 247-248)
பெண்பாற் பிள்ளைத் தமிழின் இறுதி மூன்று பருவங்களில் வரும் சிற்றில் இழைத்தல், சிறுசோறு அடுதல், ஊசலாடுதல், கழங்காடுதல், நீராடுதல், பாவையாடுதல், பந்தாடுதல் முதலான காட்சிகளும் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன.
வரிமனை புனைந்த கிளவியர்
(அகநானூறு, 250:8)
வரிமனை சிற்றில் பரிசிறந்து
(நற்றிணை, 123:8)
சிறு சோறு மடுத்து
(கலித்தொகை, 59:20)
தழைவீழ் கயிற்றூசல் தூங்கி
(அகநானூறு, 20:6)
ஊசல் மேவல் சேயிழை மகளிர்
(பதிற்றுப்பத்து, 43:2)
கழங்காடு ஆயத்து
(அகநானூறு, 66:24)
பொலஞ்செய் கழங்கிற் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய
(புறநானூறு, 36:4-5)
அருவி ஆடியும்
(அகநானூறு, 302:4)
கடலாடு மகளிர்
(குறுந்.362:2; ஐங்-187:2)
கோதை வரிப்பந்து கொண்டெறிவாள்
(பரிபாடல், 9:47)
தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் முதலான பக்தி இலக்கியங்களிலும் பிள்ளைத் தமிழின் கூறுகள் காணலாகின்றன. மாணிக்கவாசகர் திருவம்மானை, ஊசல் என்னும் பதிகங்களைப் பாடியுள்ளார். பாடுதுங்காண் அம்மானை என்னும் தொடரைப் பலமுறை பயன்படுத்தியுள்ளார். திருப்பொன்னூசல் என்னும் பதிகத்தில் பொன்ஊசல் ஆடாமோ என்கிறார். இவரின் திருவெம்பாவையில் வரும் பாவையரின் நீராடல் முதலான செயல்கள் பிள்ளைத்தமிழோடு தொடர்புடையவை.
பதினோராம் திருமுறையில் அதிராவடிகளின் திருப்பாடல்களில் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் எனக் கூறப்படுவனவற்றுள் சப்பாணி, ஊசல், செங்கீரை ஆகியவை பற்றிய கருத்துக்கள் காணப்பெறுகின்றன.
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் கண்ணனின் குழந்தைப் பருவத்தினைப் புகழ்ந்து பாடுகின்றார்.
உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறை கறங்கு
தடந்தாளிணை கொண்டு சாரங்கபாணி தளர்நடை நடவானோ
(நாலாயி.86-96)
என்று கூறப்படுகின்றது.
ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே
(நாலாயி.64-75)
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரம்மன் விடுதந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ
என்று பெரியாழ்வார் தாலாட்டு பாடுகின்றார்.
பெரும்பான்மையான பருவங்களின் கருக்கள் அல்லது கூறுகள் சங்க இலக்கியத்திலும் இரட்டைக் காப்பியங்களிலும் காணப்படுகின்றன என்பதையும், திருவாசகத்தில் சில பருவங்கள் மட்டும் தனி இலக்கிய வகையாக உருப்பெற்றுள்ளன என்பதையும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் விரிந்த அளவிலும் தனியான பருவங்கள் எனக் கூறத்தக்க நிலையிலும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என்பதையும் அறியமுடிகின்றது. (தா.ஈசுவரபிள்ளை, தமிழில் சிற்றிலக்கிய வரலாறு, ப.277).
பிள்ளைத்தமிழ் வகைமை
வகை ஆய்வு வேறு என்றும் வகைமை ஆய்வு வேறு என்றும் கருதப்படுகிறது. காலந்தோறும் சூழலுக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் ஏற்பப் பிறக்கும் இலக்கியங்களில் பொருண்மையாலும் வடிவ அமைப்பாலும் ஒத்து விளங்கும் இலக்கியங்களைக் குறிப்பிட்ட ஒரே வகை இலக்கியங்கள் என்று ந.வீ.செயராமன் (பாட்டியலும் இலக்கிய வகைகளும், ப.99) மொழிகின்றார்.
ஓர் இலக்கிய மூலக்கூறு பல்வேறு பண்புகளை ஏற்று இலக்கிய வகையாக உருப்பெறுகிறது என்றும், இலக்கிய மூலக்கூறினை இலக்கிய வகையாக வளர்த்துக்காட்டும் பண்புக் கூறுகளே இலக்கிய வகைமைகள் என்றும் கி.இராசா (தொல்காப்பியமும் இலக்கிய வகை வளர்ச்சியும், ப.3) பாகுபடுத்துகின்றார்.
மூலக் கூறுகளிலிருந்து வளர்ச்சியுறும் இலக்கிய வகைமைகளைப் பல நிலைகளில் பகுத்துக் காட்டுவர். படைப்பாளன் பின்பற்றும் நெறியாளரை நோக்கியும் இலக்கியத்தின் பயன் கருதியும் சுவைப்போரின் தரத்தைப் பொறுத்தும் படைப்பின் நோக்கத்தை அடியொற்றியும் இலக்கிய வகைமைகள் பகுக்கப்படுகின்றன. இலக்கியம் படைத்த ஆசிரியரின் நோக்கம் அறிந்து அதற்கேற்ப இலக்கியங்களை வகைமைப்படுத்த வேண்டும் என்பது பிளேட்டோவின் கருத்தாகும்.
பிள்ளைத்தமிழ் நூல்களைத் திரட்டித் தொகுத்தும் வகுத்தும் தருவது வகை ஆய்வு. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி முதலியவற்றை விளக்குவதும் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை உய்த்துணர்வதும் வகைமை ஆய்வு. இவ்வாறு வகை, வகைமை ஆய்வினைத் தமிழண்ணல் (இலக்கிய வகைமை ஒப்பாய்வு, ப.15) விளக்குகின்றார்.
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழும்
மேற்குறித்த வகைமை நோக்கில் அரசர், இறைவன், இறைவி, வள்ளல், சமூகத் தொண்டர் முதலானோரைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பிள்ளைத்தமிழ் பாடப்படுகின்றது. கி.பி.12ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் அரசரைப் பாடியது. அதுவே தமிழ் இலக்கிய வரலாற்றில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
குமரகுருபரர்
இருநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தோன்றியிருந்தாலும் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழே மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகின்றது. 17ஆம் நூற்றாண்டில் குமரகுருபரர் பாண்டிநாட்டுத் திருவைகுண்டத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர்க்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் ஐந்து வயது வரை பேசாமலிருந்தார். பிறகு திருச்செந்தூர் முருகனின் அருளால் பேசத் தொடங்கினார். பிறகு, பிள்ளைத்தமிழ், குறம், கலம்பகம், கோவை, மாலை முதலான பல சிற்றிலக்கியங்களைப் பாடினார்.
மதுரையை ஆட்சிபுரிந்த திருமலை நாயக்கர் தலைமையில் குமரகுருபரர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் ஆனது. அதனைத் தொடர்ந்து கயிலைக் கலம்பகம், கந்தர் கலிவெண்பா நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட் கோவை, இரட்டை மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், பண்டார மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை, காசிக் கலம்பகம் முதலான இலக்கியங்களைப் படைத்துள்ளார்.
நூல் கட்டமைப்பு
குமரகுருபரரால் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பெண்பாற் பிள்ளைத்தமிழ் ஆகும். பாட்டுடைத் தலைவியின் பெயரால் நூல் பெயர் பெற்றுள்ளது. இந்நூலுள் விநாயகர் வணக்கம் ஒருபாடல், காப்புப் பருவம் 12 பாடல்கள், ஏனைய பருவங்கள் 10 பாடல்கள் வீதம் நூலில் 103 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் வரும் வருகைப்பருவத்தில் உள்ள தொடுக்கும் கடவுட் பழம்பாடல் என்னும் பாடலைப் பாடும்போது மீனாட்சியம்மையே குழந்தையாக உருவெடுத்து வந்து, முத்துமாலையை அருளியதாக அருளாளர்கள் அறைகின்றனர். அம்மானை, நீராடல், ஊசல் ஆகிய மூன்றும் இறுதிப் பருவங்கள் ஆகும்.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் விநாயகர் வணக்கம் ஒரு பாடல், காப்புப் பருவம் முதல் சிறுதேர்ப் பருவம் ஈறாகப் பருவத்திற்குப் பத்து பாடல்கள் வீதம் 100 பாடல்கள் ஆகமொத்தம் 101 பாடல்களைக் கொண்டுள்ளது. இஃது ஆண்பாற் பிள்ளைத்தமிழ் ஆதலால் இறுதி மூன்று பருவங்களாகச் சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகியவை அமைந்துள்ளன. பாடல்கள் அனைத்தும் ஆசிரிய விருத்தங்களால் யாக்கப்பெற்றுள்ளன.

முடிவுரை
இலக்கணத்தின் - இலக்கியத்தின் ஒரு கூறு பரிணாம வளர்ச்சியடைந்து தனி ஒரு நூலாக மாறுகின்றது. இம்மாற்றம் மொழி வளர்ச்சிக்கும் இலக்கிய வகை வளர்ச்சிக்கும் உறுதுணையாய் அமைகின்றது. தமிழ்மொழியில் உள்ள இலக்கிய வகைகளுள் தமிழ் என்னும் சொல்லைப்பெற்ற ஒரே இலக்கியம் பிள்ளைத்தமிழ் ஆகும். பிள்ளைத்தமிழின் வித்து குழவி மருங்கினும் என்னும் தொல்காப்பிய நூற்பாக் கருத்து. இதனைப் பாவலரேறு ச.பாலசுந்தரம் மறுத்தாலும் பலர் உடன்படுகின்றனர்.
சிற்றிலக்கியங்களுள் பிள்ளைத்தமிழ் வகையே மிகுதியான எண்ணிக்கையில் உள்ளது. சில மரபினை மாற்றித் தஞ்சைப் பெருவுடையார் பிள்ளைத்தமிழ், எம்.ஜி.ஆர்.பிள்ளைத்தமிழ், கலைஞர் பிள்ளைத்தமிழ், சிவாஜி பிள்ளைத் தமிழ் முதலானவை இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்துள்ளன. இவை போல் இன்னும் பல வெளிவரும். காரணம் குழந்தையை விரும்பாதவர் இலர். குழந்தையையும் அதன் செயலையும் காண்பது மகிழ்ச்சியைத் தரும்.
துணைநூல்கள்
1.இராசா, கி.,
இலக்கிய வகைமை ஒப்பாய்வு,
பார்த்திபன் பதிப்பகம், மதுரை. 1984

2.இராசா, கி., தொல்காப்பியமும் இலக்கிய வகை வளர்ச்சியும்,
பார்த்திபன் பதிப்பகம், திருச்சி. 1991

3.இராசாராம், துரை, (உ.ஆ.)
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்,
சிட்டு நூலகம், சென்னை. 2003

4.ஈசுவரப்பிள்ளை, தா.,
தமிழில் சிற்றிலக்கிய வரலாறு  முதற்பகுதி,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 2005

5.கதிர்முருகு (உ.ஆ.)
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,
சாரதா பதிப்பகம், சென்னை. 2009

6.சுபாஷ் சந்திரபோஸ், ச.,
தமிழ் இலக்கிய வரலாறு,
இயல் வெளியீடு, தஞ்சாவூர். 2012

7.செயராமன், ந.வீ.,
பாட்டியலும் இலக்கிய வகைகளும்,
இலக்கியப் பதிப்பகம்,
சென்னை. 1981

8.தமிழண்ணல்,
சங்க இலக்கிய ஒப்பீடு,
(இலக்கிய வகைகள்)
சோலை நூலகம், மதுரை. 1979

9.பாலசுந்தரம், ச.,
தொல்காப்பியம் - பொருளதிகாரம் - ஆராய்ச்சிக் காண்டிகையுரை, (தொகுதி-3, பகுதி-1)
பெரியார் பல்கலைக்கழகம்,
சேலம். 2012

No comments:

Post a Comment