Pages

Sunday, 1 November 2015

தொல்காப்பியரின் புலனும் பள்ளு இலக்கியங்களும்



1.தொல்காப்பியரின் புலனும் பள்ளு இலக்கியங்களும்


முனைவர் மா.கோவிந்தராசு
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி,
தஞ்சாவூர் - 613005.
முன்னுரை

செம்மொழித் தமிழ் நூல்களுள் காலத்தால் முந்தியதும் முதன்மையானதுமாகத் திகழ்வது தொல்காப்பியம் ஆகும். இஃது இலக்கண நூல் ஆகும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் மரபு. தொல்காப்பியத்திற்கும் முன்பே பல இலக்கியங்கள் தோன்றியிருந்தன. ஆனால் அவை இன்றைக்குக் கிடைக்கவில்லை. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய இலக்கணங்களையும் இலக்கியக் கொள்கைகளையும் செய்யுள் வழக்கு, பேச்சு வழக்கு நெறிகளையும் தாவரம், விலங்கு, பறவை, மக்கள் முதலான உயிரினங்கள் தொடர்பான மரபுப் பெயர்களையும் தொல்காப்பியம் விளக்குகின்றது.


தொல்காப்பியர் இலக்கியக் கொள்கைகளையும் இலக்கண வரையறைகளையும் விளக்கிச் செல்கின்றார். தமிழ் கூறு நல்லுலகத்தில் காணப்பெற்ற வழக்கு, செய்யுள் இவற்றில் காணப்பெற்ற எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவற்றைச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றார். 27 இயல்களைக் கொண்ட தொல்காப்பியத்தில் 26 ஆவது இயலாக அமைந்திருப்பது செய்யுளியல் ஆகும். இந்த இயல் செய்யுள் உறுப்புகள் 34 ஐயும் தொகை வகை விரியான் விளக்குகின்றது. இந்த 34 செய்யுள் உறுப்புகளுள் ஒன்று புலன் ஆகும். இதனை இக்கட்டுரை விளக்குகின்றது.
புலனெறி வழக்கு

புலம் என்பது நிலம். புலன் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் அவற்றால் பெறும் அறிவையும் குறிக்கும். பொறி என்பது உள்வாங்கி, வெளிவிடும் கருவி. இவற்றை மனம் உணரும்போது அறிவாக மாறுகின்றன. மனம் உணர்வதே ஆறாவது அறிவு ஆகும். இதனை,

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
.. .  
ஆறு அறிவதுவேஅவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
(தொல்.மரபியல், 27)
என்று தொல்காப்பியர் மொழிகின்றார்.

இயற்கை அறிவால் வளர்த்துக் கொண்ட நூலறிவு புலம் எனப்படும். இப்புலத்தை வளர்த்துக் கொண்டவன் புலவன். அவனால் படைக்கப்படுவன புலம் எனப்படும். ஒரு நூல் படைக்கப்படுவதற்குத் துணைக்காரணமே புலவன். நிமித்த காரணம் எழுதத் தூண்டுபவன் அல்லது அதற்கான சூழல். முதற்காரணம் முன்னைய இலக்கியப் படைப்புக்களே. எந்த ஒரு படைப்புக்கும் முன்னைய நூல்களே முதற்காரணம். தொல்காப்பியரும் புலன் நன்குணர்ந்த புலமையோரே (தொல்.அகத்திணையியல், 14) என்கிறார். பனம்பாரனாரும்,
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி
புலம்தொகுத் தோனே போக்கறு பனுவல்
(தொல்.சிறப்புப்பாயிரம், 7-8)
என்று பதிவு செய்துள்ளார்.

அறிவினால் படைக்கப்படும் இலக்கியத்தைப் புலன் என்று வழங்கியுள்ளனர். புலன் நாவில் பிறந்த சொல் (கலி.35), புலன் நா உழவர் (கலி.68), புலன் உழுது உண்மார் (புறம்.46) என்னும் தொடர்கள் இலக்கியத்தையும் அதனைப் படைக்கும் ஆசிரியரையும் குறிக்கின்றன. காலத்தைக் காட்டும் கண்ணாடி இலக்கியம் ஆகும். மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது இலக்கியம் ஆகும். மக்களின் வாழ்க்கையில் காணப்பெறும் பேச்சு வழக்கும் செய்யுள் வழக்கும் இலக்கியத்தில் பதிவாகின்றன. அக இலக்கியம் எழுதும் முறையைக் கூறும் தொல்காப்பியர்,
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரிய தாகும் என்மனார் புலவர்
(தொல்.அகத்திணையியல், 56)
என்று வரையறை கூறுகின்றார்.

புலன்
தொல்காப்பியர்க்கும் முந்திய காலத்தில் புலன் என்பது இலக்கியத்தைக் குறித்தது. ஆனால் அதுவே தொல்காப்பியர் காலத்தில் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் குறிக்கப்படுகின்றது. இந்த மாற்றம் செய்யுள் எழுதுவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் காட்டுகின்றது.

உலக வாழ்க்கையே இலக்கியத்திற்கு மூலப்பொருள் ஆகும். அதனால் இலக்கியத்தில் செய்யுள் வழக்கும் பேச்சு வழக்கும் கலந்து காணப்பெறுகின்றன. மேற்குறித்த சூத்திரத்திற்கு இளம்பூரணர், நாடக வழக்காவது சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். உலகியல் வழக்காவது உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது என்று உரை எழுதுகின்றார். உலகில் நடந்ததா, நடக்கக் கூடியதா என்று கூறாமல், உலகில் நடப்பதோடு ஒத்து வருவது எனக் கூறுவது சிறப்பாகும். இதுவே பாடல் சான்ற புலனெறி வழக்கம் - இதுவரை பாடப்பட்டு வந்த நூலெழுதும் நெறிமுறைகள் ஆகும். எனவே புலனெறி வழக்கு என்பது புலவர்கள் காலங் காலமாகப் பாடிவந்த இலக்கிய மரபு தழுவிய இலக்கியப் படைப்பாக்க வழக்கம் ஆகும்.

உலகியல் வழக்குத்தான் இலக்கியத்தின் அடிக்கருத்து. அந்தக் கருத்துடன் கால் பங்கு கற்பனை கலந்து பாடுவது இலக்கியம் ஆகும். இதனைத்தான் இளம்பூரணர், சிறப்புடையன எல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறல் என்றும், நச்சினார்க்கினியர், புனைந்துரை வகை என்றும் இயம்புகின்றனர். உலகில் இல்லாததைக் கூறுவது இலக்கியம் அன்று. உலகில் உள்ளதில் நல்லதைச் சிறந்ததைப் புனைந்து உரைப்பது இலக்கியம் ஆகும். ஐம்புலன்களால் உணர்ந்தவற்றை இலக்குடன் இயம்புவது இலக்கியம் ஆகும்.
புலன் என்பது அறிவையும் இலக்கியத்தையும் குறித்தது போய், அடுத்து 34 வகை செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகப் புலன் வைக்கப்பெற்றுள்ளது. தொல்காப்பியர்,
மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ
. . .. ..
விருந்தே இயைபே புலனே இழைபெனாஅப்
பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ
நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே
என்று செய்யுள் உறுப்புகளைத் தொகுத்துத் தருகின்றார்.
செய்யுள் உறுப்புகள் 34 ஐயும் விளக்கிவரும்போது, புலன் என்னும் செய்யுள் உறுப்பினைப் பின்வருமாறு வரையறுக்கின்றார்.
சேரி மொழியாற் செவ்விதின் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
புலனென மொழிப புலனுணர்ந் தோரே
(தொல்-செய்யுளியல், 233)
இந்த நூற்பாவிற்கு இளம்பூரணர், நிறுத்த முறையானே புலன் என்னும் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு, ஆராய வேண்டாமற் பொருள் தோன்றுவது புலனென்னும் செய்யுள் என்று உரைக்கின்றார். மேலும் இந்த நூற்பாவின் முதல் சீரினைத் தெரிந்த என்று அமைத்துள்ளார்.
இளம்பூரணர் தெரிந்த மொழியான்

என்று பாடங்கொண்டதைப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் சேரி மொழியான் என்று பாடங்கொள்கின்றனர். தேர்தல் வேண்டாது என்பதை நச்சினார்க்கினியர், ஓதல் வேண்டாது எனப் பாடங்கொள்கின்றார்.

பேராசிரியர், இது புலனாமாறு உணர்த்துதல் நுதலிற்று. சேரி மொழியென்பது பாடிமாற்றங்கள். அவற்றானே செவ்விதாகக் கூறி, ஆராய்ந்து காணாமைப், பொருள் தொடரானே தொடுத்துச் செய்வது புலனென்று சொல்லுவர் புலன் உணர்ந்தோர். அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன என்பது கண்டு கொள்க என்று உரை விளக்கம் தருகின்றார்.

நச்சினார்க்கினியர், இது புலன் கூறுகின்றது. பாடி மாற்றங்களானே செவ்விதாகக் கூறப்பட்டு, ஆராய்ந்து காணாமை, பொருள் தானே தோன்றச் செய்வது புலனென்று கூறுவார் அறிவறிந்தோர். அவை விளக்கத்தார் கூத்து முதலிய வெண்டுறைச் செய்யுளென்று கொள்க என்று பேராசிரியரின் கருத்தை ஒட்டியே உரைக்கின்றார்.

க.வௌ;ளைவாரணன், இது, புலன் என்னும் வனப்பு உணர்த்துகின்றது. பலருக்கும் தெரிந்த வழக்குச் சொல்லினாலே செவ்விதாகத் தொடுக்கப்பட்டுக், குறித்த பொருள் இதுவென ஆராய வேண்டாமல், தானே விளங்கத் தோன்றுவது புலன் என்னும் வனப்புடைய செய்யுளாம் என்பர் இலக்கண நூலுணர்ந்த ஆசிரியர்கள் என்று ஆய்வுரை வழங்குகின்றார்.

உரையாசிரியர்கள் கூறும் பாடி மாற்றங்கள் என்பன சிற்றூர்ப் பேச்சு வழக்கு; இதனைக் கிராமிய வழக்கு என்பர் இக்காலத்தார். புலன் என்பது எல்லோர்க்கும் பொருள் தெரிந்த சொல்லால் அமைந்த இலக்கியம் ஆகும். உரிச்சொல்லோ கலைச்சொல்லோ அகராதியைப் பார்த்துப் பொருள் தெரியும் கடினமான சொல்லோ புலன் என்னும் இலக்கியத்தில் இடம்பெறக் கூடாது.
புலனென்பது, இயற்சொல்லாற் பொருள் தோன்றச் செய்யப்படும் பாட்டு என்று யாப்பருங்கலவிருத்தியாசிரியர் அமிதசாகரர் மொழிகின்றார். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிடும் விளக்கத்தார் கூத்து என்பது அவர்கள் காலத்தில் வழக்கிலிருந்த நாடகச் செய்யுள் நூலாகும். அது எல்லோர்க்கும் பொருள் இனிது புலனாகியுள்ளது. நாடகத் தமிழுக்குரிய வெண்டுறைச் செய்யுட்களால் இயன்றமையின் புலன் என்னும் வனப்பிற்கு இலக்கியமாயிற்று.

பள்ளு இலக்கியம்
உரையாசிரியர்கள் குறிப்பிடும் விளக்கத்தார் கூத்து முதலான நூல்கள் இன்றைக்குக் கிடைக்கவில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு. அந்த அடிப்படையில், பள்ளு இலக்கியம் புதியன புகுந்த இலக்கியம் ஆகும். 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று பள்ளு.
பண்டைக் காலந்தொட்டு வயல்களில் வேலை செய்வோர் ஏர்பூட்டி உழும்போது ஏர்மங்கலம் எனும் பாட்டும், நாற்று நடுகை, களைப் பறித்தல், அறுவடையின்போது பாடும் பாட்டுக்களும், நெற்போர் குவித்துக் கடாவிட்டுப் பொலி தூற்றி அளக்கும்போது பாடும் பொலிப்பாட்டு என்னும் முகவைப்பாட்டும், நெற் பரிசில் பெறுவோர் பாடும் கிணை நிலைப்பாட்டு எனப் பலவகையான பாட்டுக்களையும் நெற்போர்க்களத்தில் பாடுவது வழக்கம். இப்பாடல்கள் மருதநிலத்தில் குறிப்பாக நெல் வேளாண்மை செய்யும் களத்தில் அத்தொழில் செய்யும் உழவர்களான மள்ளர்களால் (பள்ளர்கள்) பெரிதும் பாடப்பட்டன. பிற்காலத்தார் இவற்றை ஒருங்கு சேர்த்து உழத்திப்பாட்டு அல்லது பள்ளிசை எனப் பெயரிட்டுப் பிள்ளைக்கவி முதல் பெருங்காப்பியம் ஈறாகக் கூறப்படும் 96 பிரபந்தங்களுள் ஒன்றாக்கினர். பெரும்பாலும் பள்ளன், பள்ளி இவர்களின் கூற்றுக்களே இப்பாடல்களில் அமையப் பெற்றிருத்தலின் இது பள்ளு என்னும் பெயர் பெற்றது.

பெயர்க் காரணம்


பள்  உகரச் சாரியை பெற்றுப் பள்ளு என வரும். இது நாடகப் பிரபந்த வகை ஆகும். எ-டு: முக்கூடற் பள்ளு. காளி முதலிய தெய்வங்கட்குப் பலி கொடுக்குங் காலத்துப் பாடப்படும் ஒருவகைப் பண்ணுக்குப் பள் என்று பெயர்.
பள்ளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவைபெறச் சொல்லும் சிற்றிலக்கியம் பள்ளு ஆகும். பள்ளரின் இரு மனைவியரே இந்நூலின் பெரும் பகுதியில் ஆட்சி செய்வதால் இதற்கு உழத்திப் பாட்டு என்றும் பெயர் உண்டு. நூலின் இறுதியில் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் ஏசிக்கொள்வதால் இதனைப் பள்ளேசல் எனவும் வழங்குவர். நூல் நாடகப் பாங்கில் அமைந்திருப்பதால் இதனைப் பள்ளு நாடகம் என்றும் கூறுவர்.

விளக்கத்தார் கூத்து அழிந்தாலும் அதனைப் போலவே புலன் என்னும் செய்யுளுக்குச் சான்று கூறுவதற்குச் சிறந்த புலன் இலக்கிய வகை பள்ளு இலக்கியம் ஆகும். பள்ளு நூல்கள் எண்ணற்றவை உள்ளன. நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது என்னும் நெல்லை மாவட்டப் பழமொழி பள்ளர்களின் சாதியைப் பற்றியது என்பர். எனினும், இப்பழமொழிக்குப் பள்ளு என்னும் நூல்களின் வகையை எண்ண முடியாது என்று பொருள் கொள்வது பொருந்தும். அந்த அளவு பள்ளு நூல்கள் வௌ;ளம் போலப் பெருகியுள்ளன.

பள்ளு நூல்கள்
முக்கூடற் பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, சிங்காபுரிப் பள்ளு, குருகூர்ப் பள்ளு, பொய்கைப் பள்ளு, கட்டிமகிபன் பள்ளு, மாவைப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, கண்ணுடையம்மன் பள்ளு, கதிரைமலைப் பள்ளு, வையாபுரிப் பள்ளு, செண்பகராமன் பள்ளு, செங்கோட்டுப் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு, கோட்டூர் நயினார் குளுவ நாடகமும் பள்ளும், கஞ்சமி செட்டி பள்ளு, வடகரைப் பள்ளு, நரசிங்கப் பள்ளு முதலான 74 பள்ளு இலக்கியங்கள் தமிழ்மொழியில் இயற்றப்பெற்றுள்ளன.
பள்ளு  கட்டமைப்பு

பள்ளு இலக்கியம் 48 உறுப்புகளை உடையது. அவை: 1. கடவுள் வணக்கம் (காப்பு), 2. மூத்த பள்ளி வரல், 3. இளைய பள்ளி வரல், 4. குடும்பன் (பள்ளன்) வரல், 5. பள்ளியர் குடித்தரங் கூறல், 6. பள்ளியர் பெயர்ப் பெருமை கூறல், 7. நாட்டு வளங்கூறல், 8. நகர் வளங்கூறல், 9. குயில் கூவக் கேட்டு மகிழ்தல், 10. மழை வேண்டி கடவுட் பரவல், 11. மழைக்குறி ஓர்தல், 12. மழை பொழிதல், 13. ஆற்று வரவு (வௌ;ளம் பாய்ச்சல்), 14. அதன் சிறப்புக் காண்டல், 15. ஐந்திணை வளங்கூறல், 16. பண்ணைத் தலைவன் வரவு, 17. பள்ளிகள் முறையீடு, 18. இளையவளிடம் பண்ணைத் தலைவன் உரைப்பது, 19. பள்ளன் வெளிப்படல், 20. பண்ணைச் செயல் வினவல், 21. பள்ளன் அவை கூறல், 22. ஆயரை வருவித்தல், 23. ஆயர் வருகை, 24. ஆயர் பெருமை கூறல், 25. மூத்தப் பள்ளி முறையீடு, 26. பள்ளன் கிடையிலிருந்தான்போல் வரல், 27. அவனைத் தொழுவில் மாட்டல், 28. அவன் புலம்பல், 29. மூத்த பள்ளி அடிசில் கொண்டு வரல், 30. பள்ளன் அவளொடு கூறல், 31. அவன் அவளை மன்னிப்புக் கேட்க வேண்டுதல், 32. அவள் மறுத்தல், 33. அவன் துன்பப்படல், 34. அவள் அவனை மீட்க வேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல், 35. விதை முதலிய வளம் கூறல், 36. கிடை வளங் கூறல், 37. காளை வளங் கூறல், 38. ஏர்பூட்டி உழுதல் (ஏர்மங்கலம்), 39. காளை வெருளல், 40. காளை பள்ளனை முட்டல், பள்ளன் கீழே விழுதல், 41. பள்ளிகள் புலம்பல், 42. பள்ளன் எழுந்திருந்தல், 43. பண்ணைத் தலைவர்க்கு அறிவித்தல், 44. நாற்று நடல், 45. அருவி வெட்டல், கடாவிடுதல், 46. நெற்பொலி தூற்றல், அளத்தல் (முகவைப்பாட்டு), 47. மூத்த பள்ளி முறையீடு, 48. பள்ளிகளுள் ஒருவருக்கொருவர் ஏசல்.
இந்த உறுப்புகளில் சில குறைந்தும் கூடியும் திரிந்தும் பள்ளு இலக்கியம் அமைகின்றது.


பா வகை

மேற்குறித்த நாற்பத்தெட்டு உறுப்புகளில் ஊடும் பாவுமாகப் பாட்டுடைத் தலைவனின் பெருமைகளை ஆங்காங்கே எடுத்துக்கூறி, சிந்து, கலிப்பா, விருத்தம், தரு ஆகிய பா, பாவினங்களால் விரவப்பெற்று, நாடகத் தமிழால் வருவது பள்ளு என்னும் உழத்திப் பாட்டின் இலக்கணமாகும். பள்ளு நூல்களில் இடம் பெறும் சிந்துப்பாடல்கள் பெரும்பாலும் கதைமாந்தர் கூற்றாகவும், கலிப்பாக்கள் பெரும்பாலும் புலவர் கூற்றாகவும் அமைந்துள்ளன. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றினையும் தழுவியதாகவே பள்ளு இலக்கியங்கள் அமைகின்றன.

மூத்த பள்ளிக்கும் இளைய பள்ளிக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் பள்ளேசல் ஆகும். பள்ளேசல் பகுதியில் வரும் செய்யுள்களில் முதலிரண்டு அடிகளை இளைய பள்ளியும் பின்னிரண்டு அடிகளை மூத்த பள்ளியும் பாடுவார்கள்.

காலம்
பள்ளு இலக்கியத்தின் தோற்றம் பதினாறாம் நூற்றாண்டு ஆகும். ஆனால் அதன் வேர் தொல்காப்பியத்தில் புலன் என்று இருக்கின்றது. சங்க காலத்தில் வாழ்ந்த மள்ளர்களே, கி.பி.பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பள்ளர்கள் என அழைக்கப்பெறுகின்றனர். பள்ளு இலக்கியங்களில் மருதநில உழவர்கள் பள்ளர் என்றும் மள்ளர் என்றும் குறிக்கப்படுகின்றனர்.
போத மள்ளர் (திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு, பாடல்-137), மள்ளர் குலம் (முக்கூடற் பள்ளு, பா.13), மள்ளியர் (பொய்கைப் பள்ளு, பா.123), மூத்த மள்ளி (பொய்கைப் பள்ளு, பாடல்-123)- இந்தச் சான்றுகளிலிருந்து மள்ளரும் பள்ளரும் ஒருவரே; மருத நில உழவர்களே என்பதை அறிய முடிகின்றது. இந்த மள்ளர்களைக் குடும்பன், தேவேந்திரப் பள்ளன், பண்ணாடி என்றும் பள்ளு இலக்கியங்கள் இயம்புகின்றன. பள்ளியர்கள் மள்ளியர் என்றும் மள்ளி என்றும் பள்ளு இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தொல்காப்பியரின் புலனும் பள்ளும்
தொல்காப்பியர் குறிப்பிடும் 34 செய்யுள் உறுப்புக்களுள் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு ஆகிய எட்டும் வனப்பு ஆகும். இந்த எண்வகை வனப்புகளுள் புலன் என்பதன் வளர்ச்சியே பிற்காலத்துத் தோன்றிய பள்ளு இலக்கியங்கள். புலன் என்பது பள்ளு என்னும் இலக்கியத்தை நேரடியாகக் குறிக்காவிட்டாலும் வழக்குச் சொல்லால் தொடுக்கப்பட்ட ஏர்மங்கலம், உழத்திப் பாட்டு போன்ற இலக்கிய வகைமையைக்; குறிக்கின்றது.
தொல்காப்பியர் புறத்திணையியலில் வாகைத் திணையின் உட்துறைகளில் ஒன்றாகக் கூறியுள்ள, ஏரோர் களவழி (தொல்.புறத்திணையியல், 17:3) என்னும் தொடரும் செய்யுளியலில் கூறியுள்ள புலன் (செய்யுளியல், 233) என்பதற்குக் கூறியுள்ள விளக்கமும் பள்ளு இலக்கியத்தின் முதல் வித்துக்கள் ஆகும். தொல்காப்பியர் கூறும் ஏரோர் களவழி என்பது வேளாண்மைச் செயல்களை விரித்துப் பாடுவது ஆகும். பள்ளு இலக்கியங்களின் 48 உறுப்புகளும் தொல்காப்பியர் கூறும் ஏரோர் களவழி, புலன் ஆகிய இரண்டின் விரியாக அமைந்துள்ளன. தொல்காப்பியர்க்குப் பின் வந்த பன்னிரு பாட்டியல் நூல் பள்ளு இலக்கியத்தை உழத்திப் பாட்டு என்று உரைத்து இலக்கணமும் கூறுகின்றது.

இலக்கணம்
புரவலர் கூறியவன் வாழிய வென்று
அகவயல் தொழிலை யொருமை யுணர்ந்தனள்
எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே
(பன்னிரு பாட்டியல், 333)
மள்ளர்குல உழத்தியர்களிடம் உழவைப் புகழ்ந்து பாடும் பாடல்கள் இன்றும் வழக்கிலுள்ளன. மருதநில வேளாண் மக்களிடம் பண்டைக் காலந்தொட்டு வழக்கிலிருந்த ஏர்மங்கலம், உழத்திப் பாட்டு, விருந்திற்பாணி, முகவைப் பாட்டு, ஏரோர் களவழி, புலன் ஆகியவற்றின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டு எழுந்த எழுத்து இலக்கியமே பள்ளு இலக்கியம் என்னும் சிற்றிலக்கியம் ஆகும். பள்ளு நூல்கள் பெரும்பாலும் ஏதேனும் ஓர் இறைவனுடன் இறைத் தளத்துடன் தொடர்புபடுத்தியே பாடப்பட்டுள்ளன.
பள்ளு நூல்களில் மூத்த பள்ளி ஒரு சமயத்தவராகவும் இளைய பள்ளி வேறொரு சமயத்தவராகவும் அமைந்து தங்களின் கடவுளே சிறந்தவர் என்று பேசும் ஏசல் முறை சுவையாக இருக்கும். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் சைவம் - வைணவ சமயத்திற்குள் நடந்த சமயப் பூசல்கள் பள்ளு நாடகங்களின் மூலம் மக்களிடம் நடத்திக் காட்டப்பட்டுள்ளன.

நாட்டுப்புற வழக்காறுகள்
பள்ளுப் பாடல்களில் இடம்பெறும் சிந்து வகைப்பாடல்கள், கும்மிப் பாடல்கள் எல்லாமே நாட்டுப்புறப் பாடல் இசை வடிவம் கொண்டவை ஆகும். நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாது, பழமொழிகள், சடங்குகள், வட்டாரப்பேச்சு வழக்குகள் முதலான நாட்டுப்புறக் கூறுகளும் பள்ளு இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.
நாட்டுப்புறங்களில் மனிதர்களின் மேல் தெய்வம் இறங்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கை பள்ளு இலக்கியங்களில் காணலாகின்றது. மள்ளர்கள் மழை வேண்டி வழிபாடு செய்யும்போது பள்ளன்மீது தெய்வம் வந்து இறங்குகிறது.
சங்கிலிக் கருப்பண்ண வந்திறங்கிக்கோ
சகலமான பேச்சி தாயே வந்திறங்கிக்கோ
விந்தை இருளப்பன் வந்திறங்கிக்கோ
எங்கள் வீரபத்திர அய்யனாரே வந்திறங்கிக்கோ
(பஞ்சமி செட்டியார் பள்ளு, பாடல், 42)
இப்பாடலைப் பாடும்போது உடுக்கை அடித்து அருள்வர வேண்டுவர். வந்திறங்கிக்கோ என்ற தொடர் திரும்பத் திரும்ப வருவது நாட்டுப்புறப் பாடல் மரபு.
அந்தமில்லா ஆதியில்லா ஆண்டவனே மழை தருவீர்
நந்தலறும் அலங்கார நாயகியே மழைதருவீர்
(செண்பகராமன் பள்ளு, பாடல்-33)
பள்ளு இலக்கியங்களில் தொல்காப்பியர் கூறும் சேரிமொழி
புலன் என்பது சேரி மொழியாற் செவ்விதிற் கிளத்தல் ஆகும். பேச்சுவழக்குச் சொற்களால் அமைந்த இலக்கியம் புலன் ஆகும். பள்ளு இலக்கியங்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேல் பேச்சுவழக்கு மொழிகள் அமைந்துள்ளன.
தொல்லுலகு எல்லாம் புகழும் சுவாமி முனிப்பெருமாள்
நல்லபுகழ் ஓங்கும் நரசிங்கப் பள்ளிசைக்க
எல்லனும் சந்திரனும் ஈசுரனும் வாசவனும்
வல்லபை யிடத்தமைந்த வாரணனும் காப்பாமே
(நரசிங்கப் பள்ளு, பாடல்-1)
மஞ்ஞ்சள் மணம் வீசிய மெய்யும்
கொஞ்ஞ்சிப் பேசி ஆடிய கையும்.
(பள்ளி அழகு, வையாபுரிப் பள்ளு, பாடல்-4)
நெற்றியில் வெண்ணீறுமிட்டு
மற்றொரு சந்தனப் பொட்டும்
நேர்த்தியாய் அணிந்து அசைந்து லாத்தி நடந்து
மெத்தவே குறும் சிரிப்பும்
முற்றிடுங் கிடாய் மருப்பின்
மீசை முறுக்கி ..
(பள்ளன் வருகை, செங்கோட்டுப்பள்ளு, 25)
அட வாடா கொலுக்காரா. பள்ளன் பள்ளியர் பிறப்பு வளர்ப்பு பேரு பெறுபலம் எல்லாம் சொல்லிக் கொண்டு வந்ததினாலே மெத்தவும் சந்தோஷமாச்சுது. மூத்த பள்ளியைத் தன்னுடைய நாட்டு வளப்பம் நகர் செழிப்பும் எல்லாம் சொல்லிக்கொண்டு வரச்சொல்லும் கொலுக்காரா.
அப்படியே சொல்லுரேனய்யா. அடி மூத்த பள்ளக்கா, உன்னுடைய நாட்டு வளப்பம் நகர் செழிப்பு மெல்லாம் சொல்லச்சொல்லிப் பண்ணையாண்டவன் கேட்குறார்கள் சொல்லடி பள்ளி. அப்படிக்கே சொல்லுரேன் கொலுக்காரண்ணே.
(வசனம், கஞ்சமி செட்டியார் பள்ளு, நாட்டுவளம்)
முண்டை முறையிட்டதென்ன
முக்கூடற்பள்ளி  உங்கள்
மூப்புச்சொம் மெனக்குத் தந்தால்
மூதலியடி
தொண்டை கட்டக் கூப்பிடாதே
கூப்பிட்டு என்னை  வைது
சொன்ன பேச்சைப் பன்ணையார்க்குச்
சொல்லுவேண்டி
(முக்கூடற் பள்ளு, பாடல் - 152)
ஆமோடி இதெல்லாம்இவ் ஊரறியா தோடி  சொன்னால்
அத்தனையும் வெட்டவெளி யாக்குவே னடி
ஓமெடி யுன்னோடு உரைக்கலா மோடி  வௌ;ளை
உப்புங் கர்ப்பூரமும் ஒக்கமோ போடி
(கதிரைமலைப் பள்ளு)

முடிவுரை
தொல்காப்பியர் கூறும் சேரிமொழிகளான சட்டித்தலை, முண்டை, ஓட்டுச் சாய்ப்பு, மிஞ்சிப் பேசில் நெஞ்சறுப்பேன், அஞ்சிப் பேசடி, போருமடா பள்ளா, கூத்தியார், மூதலி, புருசன், கெட்ட பேச்சு, சிறுக்கி, ஞாயம், கள்ளி, சொள்ளை மூக்குப் பண்ணையார், சாராயம், கள், பழிகாரி, சக்களத்தி முதலான பற்பல சொற்களும் தொடர்களும் பள்ளு இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.

துணைநூல்கள்
1.ஈசுவரபிள்ளை, தா.,
தமிழில் சிற்றிலக்கிய வரலாறு  முதற் பகுதி,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர். 2005

2.ஞானசேகரன், தே., (தொ.ஆ.),
பள்ளு இலக்கியத் திரட்டு,
சாகித்திய அகாதெமி வெளியீடு,
புது தில்லி. 2013

3.தமிழண்ணல்,
தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள், பாகம்-2,
செல்லப்பா பதிப்பகம்,
மதுரை. 2012

4.பூவண்ணன்,
தமிழ் இலக்கிய வரலாறு,
வர்த்தமானன் பதிப்பகம்,
சென்னை. 1992

5.வௌ;ளைவாரணன், க., (ப.ஆ.)
தொல்காப்பியம் - செய்யுளியல் - உரைவளம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை. 1989

No comments:

Post a Comment