Pages

Tuesday 14 April 2015

நன்னூல் எழுத்ததிகாரம்



நன்னூல் குறிப்பிடும் ஆசிரியரின் பண்புகள் யாவை?
பவணந்தியார், நன்னூலில் (நூற்.26-30) நல்ல ஆசிரியரின் பண்புகள், மாண்புகள் முதலியவற்றை விரிவாகவும் நுட்பமாகவும் தொகுத்துக் கூறியுள்ளார். ஆசிரியர், நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர் போன்ற மாண்புடையவர் என்கிறார்.

1.
நிலத்தின் மாண்புகள்:
நன்னிலமும் நல்லாசிரியனும்:

தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவம் முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே

ஒரு நிலமானது தன்னில் கணக்கிடமுடியாத பொருட்களை கொண்டு விளங்கும். அவ்வாறே எவற்றையும் தாங்கும் உறுதியினையும் பெற்று விளங்கும்.
மேலும் தம்மை மக்கள் எவ்வளவு தோண்டினாலும் அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் அவர்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் பெற்று இருக்கும். அவ்வாறே மக்களின் முயற்சிகளுக்கேற்ப தக்க தருணத்தில் அவர்களுக்குரிய பலனையும் தரும் இயல்பையும் உடையதாகவும் இருக்கும்(உதா. விவசாயம்). இவையே நல்ல நிலத்தின் குணங்களாம்.

அவ்வாறே நல்ல ஆசிரியரும், நிலம் எவ்வாறு தன்னுள் பல பொருட்களை கொண்டு பெருமைப் பெற்று விளங்குகின்றதோ அதைப் போன்றே, தாம் பல்வேறு நூல்களின் வாயிலாக கற்றறிந்த பொருள்களை செம்மையாக தம்மில் கொண்டு இருக்க வேண்டும். பின்னர் அப்பொருட்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்வாறே நல்ல ஆசிரியர் என்பவர் எந்த நிலை வந்தாலும் அதனைக் கண்டு வாடாத மனத் திண்மையையும் கொண்டு இருக்க வேண்டும். கூடவே மாணவர்கள் அறியாது செய்யும் தவறினை பொறுத்துக் கொள்ளும் தன்மையும், மாணவர்கள் கல்வியினை கற்கும் ஆர்வத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பலனினைத் தரும் தன்மையையும் உடையவராய் இருத்தல் வேண்டும்.

எவ்வாறு நாம் விதைத்த உழைப்பினை விளைச்சலாக ஒரு நல்ல நிலம் தருமோ அவ்வாறே மாணவர்கள் தாங்கள் கல்வியினைப் பெற மேற்கொள்ளும் முயற்சிக்குத் தகுந்த பலனைத் (அறிவினைத்) தருபவரே நல்ல ஆசிரியராவார்.
இவையே நிலத்தை உவமையாகக் கொண்டு ஒரு நல்லாசிரியனின் இயல்புகளை விளக்கும் நன்னூலின் கருத்தாகும்.
- நிலம் ஓரிடத்தில் நின்று அதை முழுவதும் பார்க்கவே முடியாதபடி பரப்பினால் பெருமையுடையது.
-
எவ்வளவு பாரத்தையும் சுமக்கும் திடமுடையது.
-
மனிதர்கள் அகழ்தல், பிளத்தல் முதலிய குற்றங்களைச் செய்தாலும், அவற்றைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையுடையது.
-
தக்க பருவதிலே உழவர்கள் செய்கின்ற உழவுத்தொழில் முயற்சிகளுக்குத் தகுந்தபடி அவர்களுக்குப் போதிய பலன்களைத் தரவல்லது.

ஆசிரியரின் மாண்புகள்:
-
தமது பரந்துபட்ட கல்வியறிவால் பெருமையுடையவர்.
-
தம்மிடம் வாதமிடுபவரைத் தாங்கும் திண்மை உடையவர்.
-
தம்மை இகழ்தல், எதிர்த்தல் போன்ற குற்றங்களையும் பொறுத்துக் கொள்பவர்.
-
தமது மாணவர்களுக்குத் தக்க பருவத்தில், தக்க அளவு, தகுந்த பயன்களைத் தருபவர்.

2.
மலையின் மாண்புகள்:
மாமலையும் நல்லாசிரியரும்:

அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே

இதன் அளவு இவ்வளவு தான் என்று அளந்துக் கூற இயலா வண்ணம் அளவும் பொருளும் ஒருங்கே பெற்று விளங்குவது மலையாகும். மேலும் எளிதில் துளையிடப்பட முடியாத உறுதியும், அத்தகைய உறுதியினை வெளிப்படுத்தும் தோற்றமும் ஒரு மலையின் தன்மைகளாகும். தொலைவில் இருந்து காண்பவர் வியக்கும் வண்ணம் ஓர் மலையின் தோற்றமும் உறுதியும் இருக்கப்பெறும். மேலும் வறுமையில் மக்கள் வாடுங்கால் அவர்களுக்கென்று வழங்க என்றும் வற்றாத கனிகளும் இன்ன பிற பொருட்களும் பெற்று விளங்குவதே மலையாகும். இத்தகைய இயல்புகளை உடைய மலையே சிறந்த மலையாக அறியப்படும்.
அவ்வாறே ஒரு நல்லாசிரியர் ஆனவர், ‘இவரின் கல்வி அளவு இவ்வளவு தான்என்று மற்றவர்களால் அளந்துக் கூற இயலா வண்ணம் ஆழ்ந்த கல்வி அறிவினை நூல்கள் பல கற்றுப் பெற்று இருத்தல் வேண்டும். மேலும் விவாதம் என்று வரும் பொழுது தன்னை மற்றவர்கள் கேள்விகளால் துளைக்க இயலாத வண்ணம் அவர்களின் கேள்விகள் அனைத்தையும் சமாளிக்கும் உறுதியினை வழங்கும் கல்வி அறிவினைக் கொண்டு இருத்தல் வேண்டும். மேலும் மக்களால் இவர் மிகுந்த கல்வி அறிவினை உடையவர்என்று கண்ட உடனேயே அறிந்துக் கொள்ளும் வண்ணம் தோற்றத்தையும் அறிவினால் பெற்று இருத்தல் வேண்டும். இந்த விடயங்களுடன் சேர்த்து மக்கள் அறியாமை இருளில் துயரப்படும் பொழுது தம்மிடம் இருக்கும் கல்விச் செல்வங்கள் மூலமாக மக்களின் அறியாமையை போக்கும் வண்ணம் ஆற்றலையும் அறிவையும் பெற்று இருத்தலும் நல்லாசிரியரான ஒருவரின் இயல்புகள் ஆகும் என்றே நன்னூல் கூறுகின்றது.
- உருவில் பெரியது. தன்னிடத்தில் பலவிதப் பொருள்களை உடையது.
-
எந்த வகையான பேராற்றலாலும் கொஞ்சமும் அசைக்க முடியாத அழுத்தம் உடையது.
-
தூரத்தில் இருப்பவரும், தன்னை எளிதில் காணக்கூடிய பெருமிதத் தோற்றமுடையது.
-
மழை பொழியாமல் வறண்டு போனாலும், எல்லா உயிர்களுக்கும் தன்னிடமுள்ளதைத் தரவல்ல கொடைப்பண்பு உடையது.

ஆசிரியரின் மாண்புகள்:
-
கல்வியறிவால் பெருமையுடையவர். புலமையுடைய எவராலும் தம்மை வாதத்தால் அசைக்க முடியாத அழுத்தமுடையவர்.
-
எண்ணற்ற நூற்பொருள்களை உணர்ந்தவர்.
-
அவரைக் காணாதவரும் (தூரத்தில் இருப்பவரும்) அவரது புகழைத் தெரிந்துகொள்ளக் கூடிய தன்மையுடையவர்.
-
மாணவர் தரும் செல்வம் குறைவாகவே இருந்தாலும் தம்மிடமுள்ள குறையாத கல்விச் செல்வத்தை அவர்களுக்கு அள்ளித்தரும் கொடையாளி.

3.
தராசின் மாண்புகள்:
-
தராசு ஐயம் இல்லாதபடி, பொருளின் அளவை நடுநிலைமையுடன் நிறுத்துக் காட்டும்.
தராசுக்கோலும் நல்லாசிரியரும்:

ஐயந் தீரப் பொருளைப் யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே

தராசுகோலானது எவர் ஒருவர் பக்கமும் சாராது நடுநிலையாக உண்மையின் பக்கம் நிற்க கூடிய தன்மைப் பெற்றதாகும். மேலும் ஒரு பொருளின் அளவுக் குறித்து சந்தேகங்கள் தோன்றினால் அதனை ஆராய்ந்து அந்த சந்தேகத்தினை தீர்த்து வைக்கும் தன்மையும் தராசுக்கோலுக்கு உண்டு.
அவ்வாறே ஒரு நல்லாசிரியர் ஆனவர், மாணவர்கள் சந்தேகங்களுடன் தம்மை அணுகினால் மாணவர்தம் ஐயங்களைத் தெளிவாகத் தீர்த்து வைக்கும் ஆற்றலையும், எந்த ஒரு சூழலிலும் மாணவர்களுள் வேற்றுமைகளைக் காணாது அனைவரையும் சமமாகக் கண்டு உண்மையின் வழியே நடுநிலையாக நிற்கும் பண்பினையும் கொண்டு இருத்தல் வேண்டும். அவ்வாறு இருப்பவரே நல்ல ஆசிரியர் ஆவர்.

ஆசிரியரின் மாண்புகள்:
-
மாணவர்களிடம் சற்றும் சந்தேகம் எழாதபடி பாடங்களைத் தெளிவாகக் கற்பிப்பவர். எல்லோரிடமும் நடுவுநிலைமையுடன் பழகுபவர்.

4.
மலரின் மாண்புகள்:
மலரும் நல்லாசிரியரும்:
மங்கல மாகி யின்றி யமையாது
யாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே
மலரானது அனைத்து நல்ல காரியங்களுக்கும் உரித்தான ஒன்றாக அறியப்பெறும். மலர்கள் இன்றி எந்த ஒரு நற்காரியமும் நிகழ்வதில்லை. மக்கள் அனைவரும் மலரினை விரும்பி ஏற்றுக்கொள்வர். மேலும் சரியான பொழுதில் மலர்ந்து இருக்கும் தன்மையையும் பெற்று இருப்பது மலராகும்.

அதனைப் போன்றே ஒரு நல்லாசிரியரும், நல்ல செயல்கள் நடைப்பெறும் இடங்களில் தவறாது இடம்பெறுபவராய், அவரின்றி எந்த ஒரு நல்ல காரியமும் நடைபெற முடியாத வண்ணம் மக்கள் இடையே நற்பெயர் உடையவராய் இருத்தல் வேண்டும். மேலும் மலர்ந்து இருக்கும் மலரானது எவ்வாறு மக்கள் மனதிற்கு மகிழ்ச்சியினைத் தருமோ அதனைப் போன்றே ஒரு நல்லாசிரியரும் எப்பொழுதும் முக மலர்ச்சியோடு (மகிழ்ச்சியாய் சிரித்த வண்ணம்) மாணவர்களுக்கு பாடத்தினை கற்றுத் தர வேண்டும்.
- மங்கலமானது.
-
எல்லாக் காரியங்களிலும் தேவையானது.
-
எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஏற்பது.
-
மென்மையானது.
-
குறித்த பொழுதில் மலர்வது.

ஆசிரியர் மாண்புகள்:
-
மங்கல காரியங்களில் பங்கேற்பவர்.
-
எல்லாக் காரியங்களும் நிறைவேற முன்னிற்பவர்.
-
எல்லோராலும் ஏற்கத்தக்கவர்.
-
மென்மையான பண்புகளைக் கொண்டவர்.
-
பாடங்களைக் கற்பிக்கும்போது மகிழ்ச்சியுடன் இருப்பவர்.

இவ்வாறு நிலம், மலை, தராசு, மலர் ஆகிய நான்கு உவமைகளின் வாயிலாக, நல்லாசிரியரின் நற்பண்புகளை எடுத்துக்கூறி, அவர்கள் நன் மாணாக்கர்களை உருவாக்க வழி வகுத்துள்ளார் பவணந்தியார்.




ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் செதுக்குவதில் இன்றியமையாத பங்கு என்றுமே ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை தோற்றுவிப்பதோடு நில்லாமல் நல்லதொரு சமுகத்தையும் தோற்றுவிக்கின்றனர். நல்ல ஆசிரியர்கள் இல்லாத சமுகம் நிச்சயம் நல்லதொரு சமுகமாக இருத்தல் இயலாது. நல்ல கருத்துகளையும் பண்புகளையும் மாணவர்களுக்கு ஊட்டி அதன் வாயிலாக அவர்களை நெறிப்படுத்தி அவர்களின் வாயிலாகவே சமூகத்தினை சீர்படுத்தும் ஒரு அளப்பரிய பணியைச் செய்பவர்கள் தாம் ஆசிரியர்கள். அத்தகைய பணியினைச் செய்யும் ஆசிரியர்களைக் குறித்தும் அவர்கள் எவ்வாறு கற்பித்தல் பணியைச் செய்ய வேண்டும் என்பன குறித்தும் தமிழ் இலக்கியங்கள்  கூறுகின்றன. இத்தகைய இயல்புகளை உடையவரே நல்லாசிரியர் ஆவார் என்று நன்னூல் கூறுகின்றது.
 

No comments:

Post a Comment