Pages

Tuesday 14 April 2015

அணியிலக்கணம்



4.பின்வருநிலையணி 
பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது.
இது மூன்று வகைப்படும்:
  • சொல் பின்வருநிலையணி
  • பொருள் பின்வருநிலையணி
  • சொற்பொருள் பின்வருநிலையணி
சொல் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது.
எ.கா:
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்                                --திருக்குறள (592)
இக்குறட்பாவில் உடைமைஎன்ற சொல் பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி ஆகும்.

பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.
எ.கா:
அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை
இப்பாடலில் மலரதில் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்
சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.
எ.கா:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
                             --திருக்குறள் (299)
இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

5.வஞ்சப்புகழ்ச்சியணி
 வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.
புகழ்வது போல் இகழ்தல்
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
திருக்குறள் - திருவள்ளுவர்
கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்என்பது இக்குறட்பாவின் பொருள்.
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)
இகழ்வது போல் புகழ்தல்
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
புறநானூறு பாடியவர்: கபிலர்
புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றதுஎன்பது இப்பாடலின் பொருள். இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.(இகழ்வது போல் புகழ்தல்)

 6.வேற்றுமை அணி  
தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை அணி என்பது இரு பொருள்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் கூறி, பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும்.
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் திங்கள்
மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒரு மாசுறின்
இச்செய்யுளில் சான்றோருக்கும் திங்களுக்கும் முதலில் ஒற்றுமை கூறிப் பின்னர் வேற்றுமைப் படுத்தியுள்ளது.

7.இல்பொருள் உவமையணி  
மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.
அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை
வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று
அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது.
இங்கே வலிமையான பாலைவனத்தில் பட்டமரம் தளிர்ப்பது என்பதே அன்பில்லா வாழ்க்கைக்கு உவமையாகக் காட்டப்படுகிறது. வலிமையான பாலைவனத்தில் பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அப்படியொரு நடக்க முடியாத அல்லது இல்லாத ஒரு விடயத்தை உவமையாகக் காட்டுவதே இல்பொருள் உவமையணி

8.எடுத்துக்காட்டு உவமையணி நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது.உவமையும் உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வரும். உவம உருபு வெளிப்பட வருவதில்லை.
உதாரணம்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும். இங்கு மணற்கேணி தோண்டப்படுவது உவமையாகும். மனிதர் கற்பது உவமேயம் ஆகும். போல என்னும் உவம உருபு வெளிப்பட வரவில்லை.
 

No comments:

Post a Comment