Pages

Tuesday 12 May 2015

சிற்றிலக்கியங்கள்முதுகலை முதலாண்டு – முதல்பருவம்

 (2013-2014 கல்வியாண்டு முதல்)

அலகு-5
        அ.சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
           (தால,வருகை)
       ஆ.அபிராமி அந்தாதி

சேக்கிழார் பிள்ளைத்தமிழ் தாலப் பருவம்


1.      வெண்ணந் துரறி வயிறுளைந்து
          
வீற்று வீற்றாக் கருவுயிர்த்த
      
வெண்ணித் திலத்தை அரித்தெடுத்து
          
வெள்வாய்க் களமர் கரைகுவிக்க
      
வண்ணம் துவர்என் றுவமிக்கும்
          
வாய்ஓ திமம்நீர் குடைந்தெழுந்து
      
மற்றக் குவியல் மேல்இவர்ந்து
          
மருவி முதிரா வெயில்காயக்
      
கண்ணந் துறஉண் டெழுதரும்அக்
          
களமர் மராள முட்டையினைக்
      
கதிர்நித் திலமென் றுறக்குவித்தோம்
          
கடையேம் மயங்கி எனநாணும்
      
தண்ணம் துறைசேர் குன்றத்தூர்த்
          
தலைவா தாலோ தாலேலோ
      
சகலா கமபண் டிததெய்வச்
          
சைவா தாலோ தாலேலோ

    [ அ. சொ. ]  நந்து-சங்கு, உரறி-ஒலித்து, உளைந்து-நொந்து, வீற்று வீற்றா-வரிசை வரிசையாக, கருஉயிர்த்த-தன் கருவை ஈன்ற, நித்திலத்தை-முத்தை, அரித்து-சல்லடை கொண்டு சலித்து, களமர்-உழவர், வண்ணம்-நிறம், துவர்-பவழம், ஓதிமம்-அன்னம், குடைந்து-முழுகி, இவர்ந்து-ஏறி உட்கார்ந்து, மருவி-பொருந்தி, கள்-கள்ளை, நந்துற-செருக்குற, மராள-அன்னத்தின், கதிர்-ஒளியுடைய, கடையேம்-கடைப்பட்டவராயினோம், நாணும்-நாணுதற்குக் காரணமான, தண்ணந்துறை-குளிர்ந்த நீர்க்கட்டம், சகல ஆகம பண்டித-எல்லா ஆகமங்களையும் பயின்ற அறிஞரே.
விளக்கம் :  தால் என்பது நாக்கு.  அந்நாக்கை அசைத்து ஓசை எழுப்பிக் குழந்தைகளை உறங்க வைக்க முயலுவதால் இப்பருவம் தாலாட்டுப் பருவம் எனப்பட்டது.  இஃது எட்டாம் மாதத்தில் நிகழ்த்தும் செயல்.   “ எட்டாம் திங்களில் இயல் தாலாட்டும் “ என்பது பிங்கலந்தை.
    முத்துக்கள் பிறக்கும் இடம் பலவாகும்.  இதனை,
தந்தி வராகம் மருப்புஇப்பி பூகம் தனிக்கதலி
நந்து சலஞ்சலம் மீன்தலை கொக்கு நளினம்மின்னார்
கந்தரம் சாலி கழைக்கன்னல் ஆவின்பல் கண்செவிகார்
இந்து உடும்பு கராமுத்தம் ஈனும் இருபதுமே
என்ற பாடலால் உணரலாம்.

 2.     நண்பால் எவரும் உறத்தரிக்கும்
           
நலம்கூர் நீற்றின் வெள்ஒளியால்
       
நாவால் எவரும் அரமுழக்கம்
           
நாளும் செயஆம் பேர்ஒலியால்
       
எண்பால் புலவர் அமுதுகொளற்
           
கெந்த இடத்தும் நெருங்குதலால்
       
ஏர்சால் அரம்பை எழுதலினால்
           
இயல்நா கேசன் வைகுதலால்
       
கண்பால் கரிதோய் திருமடந்தை
           
காமுற் றிடலால் மாளிகைமேல்
       
கருமால் கிடந்து கண்துயிலும்
           
காட்சித் திறனால் பொங்கிஎழும்
       
தண்பால் கடல்நேர் குன்றத்தூர்த்
           
தலைவா தாலோ தாலேலோ
       
சகலா கமபண் டிததெய்வச்
           
சைவா தாலோ தாலேலோ
    [ அ. சொ. ]  நண்பு-அன்பு, உற-பொருந்த, நலம்-நன்மை, கூர்-மிகுந்த, நீற்றின்-விபூதியின், அரமுழக்கம்-ஹரஹரமகாதோவா என்ற ஒலியை, எண்பால்-எட்டுத் திசையிலும் மதிக்குந் தன்மை, புலவர்-புலவர்கள், தேவர்கள், ஏர்-அழகு, சால்-நிறைந்த, அரம்பை-வாழைமரங்கள், தேவ மாதராம் அரம்பை முதலியோர், நாகேசன்-திருநாகேஸ் வரன், ஆதிசேடனும் பாம்பு, வைகுதலால்-வாழ்வதால், கரி-கருநிறமுடைய திருமால், தோய்-புணரும், திருமடந்தை, இலக்குமி, காமுற்றிடலால்-விரும்புவதால்.  மால்-மேகம், திருமால், நேர்-ஒப்பாகும.
    விளக்கம் : திருநீறு சைவ சமயத்திற்கே சிறப்புடைய சின்னமே ஆயினும், பிற சமயத்தவர்க்கும் உரிய பொருளாகும்.  பிறசமயத்தவரும் இதனை விருப்புடன் தரிக்கின்றனர்.  இதைக் கருத்தில்கொண்டே,  “ சமயத்தில் உள்ளதும் நீறு, “ என்று திருஞானசம்பந்தரும் திருவாய் மலர்ந்தனர்.  சமயத்தில் உள்ளது நீறு என்பதன் பொருள் எல்லாச் சமயங்களிலும் உள்ளது நீறு என்பதேயாகும். இக்காலத்திலும் முஸ்லீம்கள் பாத்தியா பண்ணும்போது முகத்தில் சாம்பலைப் பூசுவதைக் காணலாம்.  கிறிஸ்தவர்கள் வருடத்தில் ஒரு நாளைச் சாம்பல் திருநாள் எனக்கொண்டு அந்நாளைக் கொண்டாடுகின்றனர்.  திருமாலின் திருமேனியில் திகழ்வதும் இத்திருநீறே.  “கரியமேனிமிசை வெளியநீறு சிறிதே இடும் கோலத் தடங்கண்பெருமான் “ என்றே நம்மாழ்வார் குறிப்பிடுகிறார்.  இக்கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியே ஈண்டு, “நண்பால் எவரும் உறத்தரிக்கம் நலம்கூர் நீறு “  என்று கூறப்பட்டது.  “உள்மாசு கழுவுவது நீறு “  ஆதலின், நலம்கூர் நீறு எனப்பட்டது.  மேலும், “தென்னன் உற்றதீப்பிணி ஆயின தீர ‘  இது பயன் பட்டமையின்,  “நலம் கூர் நீறு “ எனப்பட்டது என்றலுமாம்.
தாலப் பருவம்
3.     முந்த எழுமாற் றுயர்பொன்னால்
          
முழுச்செம் மணியால் மாளிகையும்
      
முதுசூ ளிகையும் தெற்றிகளும்
          
முகப்பும் பிறவும் அமைதலினால்
      
இந்த நகரம் பொன்னகரத்
          
தினும்மிக் கிமைத்தல் விதிஉளத்தில்
      
எண்ணி ஆடூஉம் மகடூஉவாம்
          
எல்லா உயிரும் விழிஇமைத்தல்
      
நந்த அருட்சம் பந்தர்மணம்
          
நண்ணி யவர்க்கும் கதிகொடுத்த
      
நலம்போல் இதுசார் புவிஅகத்து
          
நகர்க்கெ லாம்செய் தனன்என்று
      
சந்தத் தவர்சொல் குன்றத்தூர்த்
          
தலைவா தாலோ தாலேலோ
      
சகலா கமபண் டிததெய்வச்
          
சைவா தாலோ தாலேலோ
    அ. சொ. ]  முந்த-முதன்மையாக, சூ ளி கை-நிலா முற்றங்கள், தெற்றிகள்-திண்ணைகள், முகப்பு-முற்பகுதிகள், பொன்னகரம்-தேவலோகம், இமைத்தல்-ஒளிவிடுதல், விதி-பிரம்மதேவன், உளத்தில்-மனத்தில், ஆடூஉ-ஆண்களும் மகடூஉ-பெண்களும், நந்த-மிகுமாறு, தழைக்குமாறு, நண்ணியவர்கட்கு-கலந்து கொண்டவருக்கு, கதி-மோட்ச இன்பம், இது-இந்தக் குன்றத்தூர், புவியகத்து-பூமியில், சந்தத்தவர்-கவிகள், வண்ணச் செய்யுள்களைப் பாடுபவர்.
    விளக்கம் :  அணி வகைகளில் உயர்வு நவிற்சி அணியும் ஒன்று.  அவ்வணிக்கு ஓர் எடுத்துக்காட்டாக இப்பாடலின் முதல் நான்கு அடிகள் அமைந்துள்ளன.  குன்றத்தூரில் உள்ள மாளிகைகளும், நிலா முற்றங்களும், திண்ணைகளும், ஆகியவற்றின் முற்பகுதிகள் பொன்னாலும், மணியாலும் அமைந்துள்ளன என்று கூறப்பட்ட காரணத்தால், இஃது உயர்வு நவிற்சி அணியாயிற்று.  “வீறுகோள் அணிஎன்று கூறினும் அமையும்.  தேவலோகம் பொன்னுலகம் என்று கூறப்படுதல் மரபு.  அத்தேவலோகம்போல, இந்தக் குன்றத்தூரும், விளங்குகிறது. அத்துடன், அத்தேவலோகத்தை விடவும் ஒளிவிட்டுத் திகழ்கிறது.  அக்காரணம் கொண்டே தேவலோகத்தில் உள்ள ஆண், பெண் என்னும் இரு பாலாரும் கண் இமைத்தலைக் குறைத்துக்கொண்டனர் என்று கூறியிருப்பது தற்குறிப்பு ஏற்ற அணியின்பால் படும்.  விண்ணுலக ஆடவர் பெண்டிரும் இமையாது பார்த்த வண்ணம் இருந்தனர் என்று கூறினும் அமையும்.    திருஞான சம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர் யாவரும் வீடு பேறுற்றுப் பேரின்பம் எய்தினர். 
4.     முரிவில் வயிரம் கால்யாத்த
          
முழுமா ளிகையால் கடல்கடையா
      
முன்னம் திருமால் உருஒத்து
          
முயங்கும் எனவும் அதற்கருகே
      
பிரிவில் கருநீ லங்குயிற்று
          
பெருமா ளிகையக் கடல்கடைந்த
      
பின்னர் அன்னான் உருவொத்துப்
           
பிறங்கும் எனவும் அதற்கருகே
      
எரிவில் விடுசெந் துகிர்மாடம்
          
எயில்சூழ் காஞ்சி அடைந்தன்னான்
      
எய்தும் உருஒத் தஃதென்றும்
          
எந்நா வலரும் கொண்டாடச்
      
சரிவில் வளம்சால் குன்றத்தூர்த்
          
தலைவா தாலோ தாலேலோ
      
சகலா கமபண் டிததெய்வச்
          
சைவ தாலோ தாலேலோ
    அ. சொ. ]  முறிவில்-முறிக்கப்படமாட்டாத, கால்-தூண்கள், யாத்த-கட்டி அமைத்த, முயங்கும்-விளங்கும், பொருந்தும், நீலம்-நீலநிறக் கற்கள், குயிற்று-பதித்துள்ள காரணத்தால், அன்னான்-அத்திருமாலின், பிறங்கும்-விளங்கும், எரி-தீயைப்போல, வில்லிடு-ஒளிவிடும், துகிர்-பவழத்தால் இயைந்த, எயில்-மதில், காஞ்சி-காஞ்சிபுரத்தை, அன்னான்-அத் திருமால், அஃது-அந்தக் குன்றத்தூர், எந்நாவலரும்-எத்தகைய பெரும் புலவர்களும், சரிவில்-குறையாத, சால்-நிறைந்த.
    விளக்கம் :  திருமாலின் இயற்கைத் திருமேனி, வெண்ணிறமாகும்.  பின்னர் அது பச்சை வண்ணம் ஆயது.  இங்ஙனம் பச்சை வண்ணம் ஆயதற்குக் காரணம் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, அதனின்று எழுந்தவிடத்தின் கொடுமையே ஆகும். இந்த அழகிய கருத்துக்களையே இப் பாடலில் முன்னள் உள்ள அடிகள் அறிவித்து நிற்கின்றன.  குன்றத்தூர் எல்லா வளன்களும் ஒருசேரப் பெற்றிருப்பதால் சரிவில் வளம்சால் குன்றத்தூர் எனப்பட்டது. 
5.     சோறு மணக்கும் மடங்கள்எலாம்
          
தூய்மை மணக்கும் சிந்தைஎலாம்
      
சுவணம் மணக்கும் ஆடைஎலாம்
          
தொங்கல் மணக்கும் தோள்கள்எலாம்
      
சேறு மணக்கும் கழனியெலாம்
          
செல்வம் மணக்கும் மாடமெலாம்
      
தென்றல் மணக்கும் மேடைஎலாம்
          
தெய்வம் மணக்கும் செய்யுள்எலாம்
      
நீறு மணக்கும் நெற்றியெலாம்
          
நெய்யே மணக்கும் கறிகள்எலாம்
      
நெறுப்பு மணக்கும் குண்டமெலாம்
          
நேயம் மணக்கும் வீதிஎலாம்
      
சாறு மணக்கும் குன்றத்தூர்
          
தலைவா தாலோ தாலேலோ
      
சகலா கமபண் டிததெய்வச்
          
சைவா தாலோ தாலேலோ
    [ , சொ.  ]  மணக்கும்-விளங்கும், மணம்வீசும் ;  மடம்-அறச்சாலை தூய்மை-பரிசுத்தமான குணம், சிந்தை-மனம், சுவணம்-பொன்மயம், மணத்தல்-பொருந்துதல், கூடுதல்-கலத்தல், நேர்தல் ; தொங்கல்-மாலை, மாடம்- மாளிகை.  தென்றல்-தென்றல்காற்று, குண்டம்-ஓமகுண்டம்.  நேயர்-அன்பு, சாறு-விழாக்கள், தெய்வம்- தெய்வத்தன்மை.
    விளக்கம் :  பொதுவாக மடங்கள் உணவுக்குக் குறைவற்ற இடங்கள்.  எப்போது செல்லினும், சோறளிக்கும் பெருமை படைத்தவை.  இவற்றை நேரே காணவிழைவார் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், மதுரை, திருமைலம் முதலான மடங்களுக்குச்சென்று கண்டு தெளியலாம்.  உண்டும் உண்மைகளை உணரலாம்.  இதனை மனத்துள் கொண்டே திரு பிள்ளை யவர்கள் சோறுமணக்கும் மடங்கள் எலாம் எனப் பொதுப்படவே கூறியருளினர். திருப்பனந்தாள் திருமடத்தார் இன்றும் குன்றத்தூரில் சோறளித்து வருகின்றனர். 
 சேக்கிழார் மடமும் சோறளித்து வருகிறது.  குன்றத்தூர் வாசிகள் கள்ளம் கபட மற்றவர் என்பதை அவர்கள் மனம் தூய்மையாக இருக்கும் என்று கூறி விளக்கினர்.  ‘மனத்தின் கண் மாசிலனாதல் அன்றோ அறம்? அவ்வூரின் செல்வச்சிறப்பை அவ்வூரினர் அணியும் பொன்னாடை கொண்டு விளக்கினர்.  இப்படியே அவ்வூரின் பல சிறப்பியல்பைக் கவிஞர் பாடலால் கூறினர். அகல உழுவதிலும் ஆழ உழுஎன்பது பழமொழி. 

6.     துங்கம் மிகுந்த அருந்தவம் மேவிய
          
தோலா நாத்திரண
      
தூமாக் கினியருள் தெல்காப் பியமே
          
தோன்றும் இலக்கணமாப்
      
பங்கம் இலாச்சம் யாதி அடைந்து
          
பராம்சிவ சின்னமுறும்
      
பாக மரூஉம்பக் குவரே கேட்கப்
          
படும்அதி காரிகளா
      
அங்கம் எடுத்துழல் துன்பம் ஒழிந்தின்
          
படைவது வேபயனா
      
அற்புதம் மேவிய தொண்டர் புராணம
          
தருள்கரு ணைக்கடலே
      
சங்கம் மரீஇஅமர் குன்றைத் திருமுனி
          
தாலோ தாலேலோ
      
சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல்
          
தாலோ தாலேலோ
    [ அ. சொ. ]  துங்கம்-உயர்வு, பெருமை, தோலா-தோல்வியுறாத, நா-நாவினைப் படைத்த, திரணதூமாக்கினி-தொல் காப்பியர், தொல்காப்பியம் என்பது தமிழ் இலக்கண நூல்.  தோன்றிய-பொருந்திய, பங்கம்-குற்றம், சமயாதி - சமய தீட்சை முதலியவைகளை, அடைந்து - பெற்று, பராம்-பராவும், சிவ சின்னம்-சைவ அடையாளங்களாகிய திருநீறு, உருத்திராக்கம் முதலியன, மரூஉம்-சேரும், அங்கம்-உடல், சங்கம்-சற்சங்கங்கள், மரீஇ-நிறைந்து,குன்றைத்திருமுனி-குன்றத்தூரில் அவதரித்த சேக்கிழார் பெருமானார், புயல்-மேகமே, பாகம்-மலபரி பாகம், பக்குவர்-சத்தினிபாதத்து உத்தமர்.  சமயாதி என்பது சமயம் விசோடம், நிருவாணம் ஆகிய மூன்று தீட்சைகள்.
    விளக்கம் :  தவத்திற்கு இருக்கும் பெருமையும் உயர்வும் மிகுதி. இதனை வள்ளுவர் வகுத்த தவம் என்னும் அதிகாரத்தின் மூலம் நன்கு உணரலாம்.  தவம் என்பதற்குப் பொருள் கண்ட பரிமேலழகர்,
அஃதாவது மனம் பொறி வழி போகாது நிற்றல் பொருட்டு, விரதங்களால் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில் நிலைநிற்றலும், மாரியிலும் பனியிலும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பின் உயிர்களை ஓம்புதல்என்றனர்.  மணக்குடவரும் இக்கருத்தினைப் போலவே, “தவமாவது, ஊனும் உறக்கமும் குறைத்தலும், வெயிலும் பனியும் தாங்கலும் தேவர் வழிபாடு முதலியனவும் மேற்கொண்டு முயலல்என்றனர். 
7.     அடியார் பெருமையும் அருமையும் நாளும்
          
அறியம் பலவாணர்
      
அவர்வர லாறு விரித்துரை செய்பவர்
          
ஆரென உட்கருதிக்
      
கடியார் மற்றவர் அன்பத் தனையும்
          
கண்காண் படிசெய்து
      
காமரு முதலும் எடுத்தரு ளினர்இக்
          
கடல்சூழ் புவிஇடைஇப்
      
படியார் பெற்றார் தமிழ்மான் மியம்எப்
          
பாடைக ளுக்குளதிப்
      
பாக்கியம் நம்தவம் என்று பலோரும்
          
பகரப் படுவதீந்
      
தடியார் தடிசூழ் குன்றைத் திருமுனி
          
தாலோ தாலேலோ
      
சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல்
          
தாலோ தாலேலோ
    [அ. சொ.] அம்பலவாணர்-நடராசப் பெருமான், கடியார்-விளக்கம் அமைந்த, அருள் புரிந்த, கண்-ஞானக்கண், காண்படி-காணும்படி, காமரு-அழகிய, முதலும்-உலகெலாம் என்ற முதல் தொடரையும், புவி-பூமி, பாடைகள்-மொழிகள், பலோரும்-பலபேரும், பகரப்படுபவ-சிறப்பித்துக் கூறப்படுபவரே, தீம்-இனிய, தடி-கரும்பு, ஆர்-பொருந்திய, தடி-வயல்.
    விளக்கம் :  இறைவர் அடியார்களுடைய பெருமையையும் அருமையையும் நன்கு அறிந்திருந்தமையால்தான், அவ்வப்போது, அவர்கட்கு ஏற்பட்ட இன்னல்களை எல்லாம் போக்கி அருளினர்.  அடியார்களின் பெருமையும் அருமையும் அறிந்ததனால் அன்றோ, திருநாளைப் போவார்க்கும், தில்லைவாழ் அந்தணர்கட்கும் கீழ்வரும் கட்டளை இட்டருளினர்.
8.     பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப்
          
பாடிய கவிவலவ
      
பயனில தாகும் சிந்தா மணிவழி
          
படர்தல் எனப்போகித்
      
துத்திச் சுமையொரு தோள்வைத் திடுபுல்
          
உயர்த்தோன் மனம்அடியார்
      
உறுசெயல் நாடப் புரிமதி வலவ
          
ஒலாஅரு கந்தர்திறம்
      
முத்தித் திறம்அல என்றள விலர்பால்
           
முற்றிச் சிவமடைய
      
முயல்செயல் வலவ வயல்கண் மடைச்செறி
          
முத்தம் அனைத்தினையும்
      
தத்திப் புனல்பாய் குன்றைத் திருமுனி
          
தாலோ தாலேலோ
      
சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல்
          
தாலோ தாலேலோ
    [அ. சொ.]  நனி-மிகுதியும், கவிவலவ-கவியில் வல்லவரே, சிந்தாமணி-ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய நூல், படர்தல்-செல்லுதல் உத்தி-படத்தையுடைய ஆதி சேடன், புல்-புலிக் கொடி, உயர்த்தோன்-பிடித்தவனாகிய சோழன், உறு-பெரிய, புரி-செய்த, மதிவலவ-அறிவில் வல்லவரே, ஒலா-கூடாத, அருகந்தர்-சமணர், திறம்-வழி, முத்தி-மோட்சம், அளவிலர்பால்-அளவில்லாத பல்லோர் முற்றி-நல்வினை முற்றி, சிவம்-முத்தி, செறி-மிகுந்த, புனல்-நீர்.
    விளக்கம் :  பெரிய புராணத்தில் பக்திச் சுவை அமைந்த கவிகள் பல்கியுள்ளன என்பதைக் கூறவேண்டா.  நூல் முழுமையும் பக்திச் சுவை மலிந்தே காணப்படும்.  இந்தப் பக்திச் சுவை அமைந்த கவிகளை அடியார்களின் வரலாற்றில் தான் சேக்கிழார் அமைத்துப் பாடியுள்ளார் என்றும் கூற இயலாது.  இயற்கை நிகழ்ச்சியிலும் இந்தப் பக்திச் சுவைகனிந்த கவிகளைப் பாடியுள்ளார்.  நெற் கதிர்கள் நன்கு முதிர்ந்து தலை சாய்ந்து இருந்த நிலைமையினைக் கூறும்போது, அன்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தால் எப்படித் தலை குனிந்து தழுவி அன்புடைமையி்னை வெளிக் காட்டுவரோ அதுபோல நெற்கதிர்கள் முதிர்ந்து தலை சாய்ந்து காணப்பட்டன
9.     ஈற்றுத் தலையொரு மவுலி புனைந்தால்
          
என்னச் சொல்அணிஒன்
      
றெய்திப் பொலியப் பொருள் அணி ஆயின
          
எவ்விட னும்வீற்று
      
வீற்றுக் கிடைஇறை பட்டன அமைய
          
விளம்பு வனப்பினொடு
      
மேய முதற்பொருள் ஆகிய மூன்றும்
          
வேண்டும்இ டத்தெய்த
      
ஆற்றுப் புனல்நா மப்பொருள் கோள்முதல்
          
அறைமற் றுள்ளனவும்
      
அமையத் தொண்டர் புராணம் நவின்றவ
          
அடருபு சூழ்ந்தபசும்
      
தாற்றுக் கதலிக் குன்றைத் திருமுனி
          
தாலோ தாலேலோ
      
சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல்
          
தாலோ தாலேலோ
    அ. சொ. ]  ஈற்றுத்தலை-செய்யுளின் இறுதி, மவுலி-முடி, எய்தி-அடைந்து, பொலிய-விளங்க, வீற்று லீற்றுக்கிடை-தனித்தனியாகக் கிடந்து, இறைபட்டன-சிந்திப்பரந்தன வனப்பு-அழகு, மேய-பொருந்தமுதல் பொருள், ஆதிய-முதற் பொருள், கருப் பொருள், உயிர்ப் பொருள் முதலான, ஆற்றுப் புனல் நாமப் பொருள்கோள்-ஆற்றொழுக்குப் பொருள்கோள், என்ற பெயருடன் சொல்லப்படும் பொருள்கோள், அறை-சொல்லப்படும், மற்றுள்ளனவும்-வில்பூட்டு,அளைமறியாப்புமொழிமாற்றுநிரல்நிரைதாப்பிசை,   கொண்டு  கூட்டு  அடிமறி  மாற்று, பாவகைகள்சந்தங்கள்முதலியன என்பன.   நவின்றவ-பாடியவரேஅடருபு-அடர்ந்து, தாற்றுக் கதலி-குலைகளைக் கொண்ட வாழை.
    விளக்கம் :  அணி வகைகளுள் பெரும்  பிரிவாகப்  பொருள்   அணி சொல்லணி  என்பர் இலக்கணிகள்.  அச்சொல்லணிகள் பலவாகும். இவ்வாறு பல அணிகள் பெரிய புராணத்தில் தனித்தனியே சிந்திப் பரவி இருக்கின்றன.    ஆதலின்,   “வீற்று வீற்றுக் இறை பட்டனஎன்றனர்.
    இங்ஙனம் சொல்லணியும், பொருளணியும் கூறும்போதும், இறைவனைப்பற்றிய குறிப்பினையும் உடன் கூறிச் செல்லும் பண்பு இவர்பால் உண்டு.  இது குறித்தே இறைபட்டன என்னும் தொடரை ஆசிரியர் அமைத்தனர் என்று கூறினும் அமையும். 
10.      மண்டலை வேலைப் புவிவில் பத்திசெய்
           
மார்க்கம் அறிந்தவர்ஆர்
       
வண்சுவை அமுத ஒழுக்கென வார்த்தை
           
வழங்கத் தெரிகுநர்ஆர்
       
கொண்டலை நேர்பக டூர்தரு கூற்றம்
           
குதித்துய்ந் திடவலர்யார்
       
கொற்றக் கைலைக் கணநா தர்களொடு
           
கூடுபு மகிழ்பவர்ஆர்
       
விண்டலை யாரும் பெறல்அரும் இன்பம்
           
விராவும் திறலினர்ஆர்
       
விமலா நீஅவ தாரம் செய்யா
           
விடின்என மேயவபைந்
       
தண்டலை சூழும் குன்றைத் திருமுனி
           
தாலோ தாலேலோ
       
சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல்
           
தாலோ தாலேலோ    
    [அ. சொ.] மண்டு-மிகுந்த, நெருங்கிய, தொடர்ந்து வருகின்ற வேலை-கடல், மார்க்கம்-வழி, வண்சுலை- வளமான சுவை, கொண்டல்-மேகம், நேர்-ஒத்த, பகடு-எருமைக்கடா, ஊர்தரு-ஏறி நடத்தும், கூற்றம்-இயமன், குதித்து-வென்று, கடந்து, தப்பி உய்த்திட-பிழைத்திட-வலர்-வல்லவர், கொற்றம்-வெற்றியுடைய, கூடுபு சேர்ந்து, விண்தலையார்-தேவலோகத்தில் உள்ளவர்களும் பெறல் அரும்-பெறுதற்கரிய,விராவும்-சேரும், திறலினர்வன்மையுடையவர், விமலா-குற்றமற்ற சேக்கிழார் பெருமானே, மேயவ-பொருந்தியவரே, பைந்தண்டலை-பசுமையான சோலை.
    விளக்கம்:  உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது என்பதைக் கவிஞர் கூறல் மரபு.  “வாராரும் கடல் புடைசூழ் வையம்என்பர் உமாபதி சிவம்.  “நீராரும் கடல் உடுத்தநிலமகள்என்பது மனோன்மணியம்.  ஆகவே, ‘மண்டலை வேலைப்புவிஎன்றனர்.  பத்தி மார்க்கத்தை நிலைநாட்டச் சேக்கிழார் அமைத்துள்ள கவிகள் பற்பல.
        செய்யுள் 1. வேளாளர் முத்துக்களைக் குவித்தல் ; அன்னங்கள் முத்துக் குவியலில் வீற்றிருத்தல் ; வேளாளர் அன்னத்தின் முட்டைகளையும் முத்துக்கள் எனக் குவித்தல் ;
இது  குறித்து அவர்கள் வருந்துதல் ;  சேக்கிழார் சகலாகம பண்டிதர் எனல்.  தலாப்பருவ விளக்கம். 
     செ. 2. குன்றத்தூர், திருப்பாற் கடல்போல் இருந்தமைக்குக் காரணம்திருநீற்றின் மாண்பு. பக்கம் 282-286 இது  குறித்து அவர்கள் வருந்துதல் ;  சேக்கிழார் சகலாகம பண்டிதர் எனல்.  தலாப்பருவ விளக்கம். 
         செ. 3. குன்றத்தூர் தேவலோகத்தினும் சிறந்தது என்பதற்குரிய காரணம் ;  திருஞான சம்பந்தர் தம் திருமணத்தில் எவர்க்கும் முத்தி தந்த திருப் பெருமாண நல்லூர் போன்றது குன்றத்தூர் எனல்.
      செ. 4. திருமாலுக்கு முன்னைய நிறமும், பின்னைய நிறமும் ஏற்பட்ட காரணம், குன்றத்தூர் வாசிகளின் மாண்பு.
      செ. 5. குன்றத்தூர் மடங்களின் மாண்பு;  திருப்பனந்தாள் மடம், சேக்கிழார் மடம், குன்றத்தூரின் பொருள்வள மக்கள் மாண்பு.
      செ. 6. பெரிய புராணத்திற்குத் தொல்காப்பியம் இலக்கணம் ;  இதற்குரிய காரணங்கள் ; பெரிய புராணம் கேட்கத் தக்க அதிகாரிகள் ;  பெரிய புராணம் படிப்பதன் பயன் ;  குன்றத்தூர் மாண்பு. 
      செ. 7. அடியார் பெருமைகளை அறிவிக்க வல்லவர் சேக்கிழாரே எனல்.  இறைவர் முதல் எடுத்துக் கொடுத்தது ; சேக்கிழார்க்கு இறைவர் எடுத்துக் கொடுத்த காரணத்தால் தமிழ் மாண்புடையது என வியத்தல் ; அன்பர்கள் பெரிய புராணத்தைப் புகழ்ந்து பேசுதல், குன்றத்தூர் சிறப்பு. 
      செ. 8. பத்திச் சுவை நனிச் சொட்டச் சொட்டக் கவி பாடியது, சேக்கிழார் அநபாயனை அடியார் வரலாற்றைக் கேட்கச் செய்தது, யாவரும் சிவம் அடையக் கவி பாடியது, குன்றத்தூர் நீர்வளன். 
. 9. சொல் அணி, பொருள் அணி விளக்கம், அவ்வணிகள் பெரிய புராணத்தில் அமைந்திருத்தல், பத்துவகை அழகுகள், முதல், கரு, உரிப் பொருள்கள், ஆற்றொழுக்கு முதலான எண் வகைப் பொருள்கள் விளக்கம். இவை பெரிய புராணத்தில் அமைந்திருத்தல், குன்றத்தூர் வளன்.      
   செ.10. சேக்கிழார் திருவவதாரம் செய்த சாரணத்தால்தான் மக்கள் பக்தி, ஒழுக்கம், நன்மொழி பகர்தல், எமனை வெல்லும் உபாயம், சிவனடியாரொடு கூடல், சிவனுடல் கூடல், பெறல் அரும் இன்பம் பெறல் ஆகியவற்றை உணர்ந்தனர் எனல், குன்றத்தூர்ச் சிறப்பு. 

       6. வாரானைப் பருவம்
1.     மண்டலம் மதிக்கும்மணி யாத்தஉச் சிப்பூவும்
          
வண்பட்ட முஞ்சுட்டியும்
      
வாகுவல யமும்மதா ணியும்உதய வெயில்செய
          
மகத்துவத் தொண்டர்சீர்த்தி
      
விண்டலம் மதிக்கஎழு செய்யவாய்ப் புகழெழுதல்
          
விழையஎழு குறுமுறுவலும்
      
வெண்ணீறு முத்தமா லிகையும்இள நிலவுசெய
          
வெய்யேம் மனத்தடத்துந்
      
தண்டல்அமை யாதலர் சரோருகப் பதமேல்
          
சதங்கையும் தண்டையும்ஒளி
      
தவாஞெகிழி யும்படீஇக் கலகல இரட்டஉயர்
          
சைவநிலை எங்கும்நிகழக்
      
கொண்டல்அமர் கொடைகொண்ட கரதலச் சேவையார்
          
குலசிகா மணிவருகவே
      
கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவிஎழு
          
குன்றைப் பிரான்வருகவே
    [அ. சொ.]  மண்டலம்-உலகம், மணி-இரத்தினக் கற்களால், யாத்த- பதித்த, உச்சிப்பூ - குழந்தைகட்கு அணியும் ஒருவகை அணிகலன், இஃது உச்சியில் அணியப்படுவது, வண்பட்டம்-வளமான நெற்றிப்பட்டம் என்னும் ஆபரணம், சுட்டி-நெற்றிச் சுட்டி என்னும் அணிகலம்.  வாகுவலயம் - தோள்வளை என்னும் நகை, மதாணி-மார்பில் அணியும் ஒருவகை கலம், வெயில்-ஒளி, சீர்த்தி-மிகுந்த புகழை விண்தலம்-தேவலோகம், விழைய-ஒப்ப, குறுமுறுவல்-சிறுநகை, மாலிகை-மாலை, வெய்யேம் - கொடுமை மிக்கவர்களாகிய எமது, தடம்-குளம்தண்டல்-தவா-நீங்காத சரோருகம்-தாமரை, ஞெகிழி-இதுவும் ஒருவகைச் சிலம்பு, இரட்ட-ஒலிக்க, கொண்டல்-மேகம், அமர்-விரும்பும், கொடை-வள்ளன்மைக் குணம், கரதலம்-கை, சேவையர் குலம்-வேளாளர் குலம், சிகாமணி-சிரோரத்னமே, சடாடவியர்-சடைக்காட்டையுடையவராம் சிவ பெருமான், மன்றை - பொற்சபையை, சடை+அடவி, பராவி போற்றி. 
   விளக்கம் :  குழந்தையைத் தம் அருகே அன்புடன் அழைக்கும் பருவமே வாரானைப் பருவமாகும். இது பன்னிரண்டாம் மாதம் நிகழும் நிகழ்ச்சி. ஆண்டு வரையின் ஈண்டு வருகஎன்பது பிங்கலந்தை.  இது வருகைப் பருவம் என்றும் கூறப்பெறும்.  வாரானை என்பது வா+ரு+ஆனை எனப்பிரியும்-ஆனை தொழிற்பெயர் விகுதி.  விரித்தல் விகாரம் வா-பகுதி.   இப்பாடல் குழந்தைகட்குப் பூட்டப்படும் அணிகள் இன்னின்ன என்பதைப் புலப்படுத்தி நிற்கறது.  இவ்வாறு குழந்தைகட்கு அணிகலன்களைப் பூட்டி அழகு பார்ப்பது பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் உவகையாகும். 
வாரானைப் பருவம்
2.     நிலவுவிரி மதியும்ஒண் பனியும்உவ வாஎனினும்
          
நெஞ்சம்எப் பொழுதும்நெக்கு
      
நெக்குருகு வார்மதியும் அத்தகையர் கண்பனியும்
          
நேரேஉ வத்தல்செய்வ
      
கலவுசெம் மையும்மணமும் உடைமைக் கிணங்கஎவர்
          
கடையின்அவை உள்ளவேனும்
      
காமுறுவ அளிவிரா வுறமலர்வ ஆயகோ
          
கனகநறு மலர்இரண்டும்
      
உலவுதலின் அன்புசெறி யுந்தலைப் பெயராமை
          
உள்ளவே னும்பெயர்த்தே    
      
உவகையெங் கட்குவர மறுசம யருக்கெலாம்
          
உட்குவர முறுவலித்துக்
      
குலவுபுக ழேபோர்வை யாக்கொண்ட சேவையார்
          
குலசிகா மணிவருகவே
      
கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழு
          
குன்றைப் பிரான்வருகவே
    [ அ. சொ. ]  நிலவு-ஒளி, மதியம்-சந்திரனும், உவவா-விரும்பா, மகிழமாட்டா, மதியும்-அறிவும், அத்தகையர்-அத்தன்மையர், அன்பர்கள், கண்பனியும்-பனிபோல் ஒழுகும் கண்ணீரும், உவத்தல்-மகிழ்தலை, எவர்கடையும்-எவரிடத்தும், அவை-செம்மையும் மணமும், காமுறுவ-விரும்புவன, அளி-வண்டு, விராவுற-கலப்பதனால், கோகனகம்-தாமரை, (திருவடித் தாமரை) உலவுதல்-மாறுதல், செறியும்-நிரம்ப நெருங்கியுள்ள, தலை-இடத்தை விட்டு, பெயராமை-நீங்காமை, நறுமலர்-நல்ல மணமுள்ள மலர், செறி-நிறைந்த, உவகை-மகிழ்ச்சி, மறு-மற்றைய, உட்கு-அச்சம், முறுவலித்து-நகைத்து, சேவையார்-தெண்டராம் வேளாளர், சடை அடவியர்-சடைக்காட்டை யுடையவராம் சிவபெருமானார், (சடாடவியர்) மன்றை-பொற்சபையை, பராவி-போற்றி.
விளக்கம் : மதி பொதுவாக எல்லா மக்களுக்கும் உவகை செய்யவல்லதாயினும், காதலர் பிரிந்திருக்கையில் அவர்கட்கு அஃது உவகை ஊட்டுவதில்லை.  இதனைச் சேக்கிழார் பெருமானாரே தடுத்தாட்கொண்ட புராணத்தில், “சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதிஎன்றும், “ நிலவு உமிழும் தழல் ஆற்றாள் (ஈண்டு நிலவினைத் தழல் எனக் கூறியதைக் காணவும்) என்றும் பாடினர்.  சொக்கநாதப் புலவர்,
    ஊரைச் சுடுமோ உலகம்தனைச் சுடுமோ
   
ஆரைச் சுடுமோ அறியேன்-நேரே
   
பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த
   
நெருப்புவட்ட மான நிலா
என்றும், புகழேந்தியார்திங்கள் சுடர்பட்டுக் கொப்புளங்கொண்ட குளிர்வானைஎன்றும் பாடியுள்ளனர்.  “அத்திக் காய், ஆலங்காய் வெண்மதியேஎன்று ஒரு புலவர் சந்திரனை வெறுத்துக் கூறினர். ஆகவே, இத்தருணத்தில் நிலவுவிரி மதி உவவா ஆயிற்று.  பனி எவர்க்கும் உவப்பைத் தராது என்று கூற வேண்டுவதில்லை.  “பனிக்கு ஆலம் மிக நல்லதுஎன்று திரு பிள்ளை அவர்களே, தாமும் தம் நண்பர் திரு ஆறுமுக நாவலரும் மார்கழித் திங்களில் வைகறையில் நீராடுகையில் கூறியுள்ளார். 
3.     நீடும்இன் பரிவையர் புணர்ப்பென்ம ரும்ஐந்து
           
நிகழ்கந்த மும்கெடுதலே
      
நிலவும்இன் பென்மரும் குணம்மூன்றும் ஒழிதலே
          
நிரம்பல்உறும் இன்பென்மரும்
      
நாடும்இன் பிருவினைக் கேடென்ம ரும்மலம்
          
நசித்தலே இன்பென்மரும்
      
நவில்விக்கி ரகநித்தம் இன்பென்ம ரும்தோன்றும்
          
ஞானமே இன்பென்மரும்
      
பாடும்இன் புயிர்கெடுதல் என்மரும் பகுதிமேல்
          
கெடுதலே இன்பென்மரும்
      
படுசித்தி இன்பென்ம ரும்பிறரும் வாதம்
          
படர்ந்துவரு திறன்அறவளம்
      
கூடுசெந் தமிழ்அருமை அறிபெருஞ் சேவையார்
          
குலசிகா மணிவருகவே
      
கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழு
          
குன்றைப் பிரான்வருகவே
    [அ. சொ.]  இன்பு-இன்பம், முத்திஅரிவையர்-மாதர்களதுபுணர்ப்பு-புணர்ச்சி  இன்பம், என்மரும்-என்று சொல்பவரும், ஐந்துநிகழ் கந்தம்-பஞ்சகந்தம், ஸ்கந்தம்-கூட்டம், குணம் மூன்று-ராஜச, தாமச, சாத்வீக குணங்கள், இருவினை கேடு-நல்வினை தீவினைகள் இரண்டும் கெடுதலே, மலம்-ஆணவம், கன்மம் மாயை என்னும் மூன்று மலங்களும், நசித்தலே-ஒழித்தலே, நவில்-கூறப்படுகின்ற, விக்கிரக நித்தம்-உடல் அழியாதிருத்தல், பாடும்-உண்டாகும்விக்கிரகம்-சுத்தமாயா சரீரம், சித்தி-அட்டமா சித்திகளைப் புரிதல், பசுகரணம் கெட்டுச் சிவகரணம் ஆதலும் ஆம்.  படு-தோன்றும் திறன்-கூறுபாடுகள், அற-ஒழிய, பகுதி-பிரகுருதிகள், வாதம் கூர்ந்து-வாதம் பேசி, வளம்கூடுதல்.  உண்மை முத்தி கூடுதல்.  வளம் கூடுசெந்தமிழ்-சைவத் திரு முறைகள், அருமை-பெருமை.
    விளக்கம் :  உலகில் மக்கள் ஒரே தன்மையராக இலர்.  வைதீகர்களாயினும் சரி ;  லௌகீகர்களாயினும் சரி ;  இரு வகையினரும் தாம் தாம் இன்பம் துய்ப்பதனைக் குறித்துத் தம் தம் கருத்தினைக் கூறி வருவர்.  மாதர்களோடு கூடி இன்புறுதலே சிறந்தது என்பர் ஒரு சிலர்.  இவர்களை உலகாயதர் என்று சைவ சித்தாந்த நூல் கூறும். 
4.     செற்றசெங் கன்னல்படு தரளமும் கந்திச்
          
செழுஞ்சோலை படுதரளமும்
      
திண்மருப் புக்கடாக் களிறுமறை யப்போய
          
செஞ்சாலி படுதரளமும்
      
துற்றபைங்  கதலியில் படுதரள மும்பாலி
          
துறைதொறும் எடுத்துவீசுஞ்
      
சுடர்மணிக ளுங்கரும நடவுவோர் வாருபு
          
சுமந்துகொடு வந்துதூய
      
முற்றமெங் கணுநிறை தாக்குவித்  திடல்கண்டு
          
மோகமுற் றோடிஆடி
      
முகந்திடறி ஏற்றியொன் றாக்கிவிளை யாடுசிறு
          
முண்டகத் தாள்பெயர்த்துக்
      
கொற்றவன் தருமுதன்மை கொண்டுமிளிர் சேவையார்
          
குலசிகா மணிவருகவே
       
கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழு
          
குன்றைப் பிரான்வருகவே.
    [அ. சொ.]  செற்ற-நெருங்கிய, கன்னல்-கரும்பு, படு-தோன்றுகின்ற, தரளம்-முத்து, கந்தி-பாக்கு மரம், திண்மருப்பு-வன்மைமிக்க தந்தம், கடாக்களிறு-மதசலம் ஒழுக்கும் யானை, போய-மிகவளர்ந்த, செஞ்சாலி-செந்நெற் கதிர், துற்ற-நெருங்கிவளர்ந்த, கதலியில், வாழையில், பாலி-பாலாறு, துறை-கரைதோறும், கருமம் நடவுவோர்-வயலில் வேலை செய்பவர், சுடர்மணி-ஒளிவிடும் முத்து, வாருபு- வாரிக்கொண்டு, தூய-சுத்தமான, மோகமுற்று-ஆசை கொண்டு, ஏற்றி-உதைத்து, முண்டகத்தாள்-தாமரைப் பாதம், கொற்றவன்-அனபாய சோழமன்னன், முதன்மை-முதல் அமைச்சர் பதவி, மிளிர்-உத்தமசோழ பல்லவன் என்னும் பெயருடன் விளங்கும்.
    விளக்கம் : இப்பாடல் மூலம் முத்துக்கள் தோன்றும் இடங்களை அறியலாம்.  முத்துக்கள், கரும்பு, பாக்கு மரம்யானை தந்தம், நெற்கதிர், வாழை முதலான இடங்களில் உண்டாதலை,
தந்தி வராகம் மருப்புஇப்பி பூகம் தனிக்கதலி
நந்து சலஞ்சலம் மீன்தலை கொக்கு நளினம்மின்னார்
கந்தரம் சாலி கழைக்கன்னல் ஆவின்பல் கட்செவிகார்
இந்து உடுப்பு கராம்முத்தம் ஈனும் இருபதுமே
என்ற பாடலால் அறியலாம்.
    இங்ஙனம் எல்லாம் பிறக்கும் முத்துக்கும் விலையுண்டு. மணி எனப் பொதுப்படக் கூறியதனால் முத்துக்களே அல்லாமல், ஏனைய மணிகளையும் கொள்க.  ஆறு பல இடங்களையும் கடந்து வருதலின், அவ்வவ் இடங்களின் மணிகளை அது வாரிக்கொண்டு வருகின்றது- முத்துக்கள் பிறக்கும் இடங்கள் பலவாக இருத்தலின், அவை அங்கங்குப் பரந்து கிடக்க உழவர் அவற்றை வாரிக் குவிக்க நேர்ந்தது.  குழந்தைகள் நூதனப் பொருள்களைக் காணின், அவற்றை நாடி ஓடித் தொட்டு விளையாடுதல் மரபாதலின், சேக்கிழாராம்குழந்தையும் முற்றத்தில் குவிக்கப்பட்ட முத்துக் குவியலைக் கண்டதும் ஓடி காலால் இடறி எற்றி விளையாடியது.
    இரண்டாம் குலோத்துங்கன் நம் சேக்கிழார் பெருமானார்க்குத் தம் அரச அவையில் முதல் அமைச்சர் பதவி ஈந்து, உத்தமச் சோழப் பல்லவர் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்தனன். 

5.     மாயா மலம்கரும மலம்இவைக் கேதுவாம்
          
மலம்வே ரொடும்கழன்று
      
வலியதன் சத்திகெடு மாறுதிரு அருள்பதிய
          
வந்துபதி செம்மலர்த்தாள்
      
ஆயாத எம்மனமும் அகலாத தாள்அடியர்
          
அவிர்புதல்வர் தோழர்தாங்கள்
      
அடைந்தமார்க் கம்பொலிய எண்ணும் திருத்தாள்
          
அராவுரி நிகர்த்ததூசு
      
காயாத கால்நீத்த மலரொடு விரித்தஇக்
          
கடையில்பெ யர்த்துவைத்துக்
      
கருங்கொண்டல் போல்வானும் மிகையெனக் கடல்சூழ்ந்த
          
காசினிஉ ளாரைஎல்லாம்
      
கூயா தரிக்குங் குணம்தழுவு சேவையார்
          
குலசிகா மணிவருகவே
      
கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழு
          
குன்றைப் பிரான்வருகவே.
 [அ. சொ.] மாயாமலம்-மும்மலங்களில் ஒன்று, கரும மலம்-இதுவும் மும்மலங்களில் ஒன்று, ஏதுவாம்மலம்-எல்லாவற்றிற்கும் காரணமாகிய ஆணவமலம், தன்சத்தி-ஆணவத்தின் வன்மை, திருவருள்-சிவசக்தி, பதிய-நிபாதமாக, அதாவது சத்தினிபாத நிலை அமைய ஆயாத-ஆராயாத எம் மனம்-எம்முடைய சிறுபுத்தி, அடைந்த-விசேடணமாக கொண்ட, அடியர்-தாசமார்க்கம் சார்ந்த அடியவர், அவிர்-விளங்கும், புதல்வர்-சத்புத்ரமார்க்கத்தர், தோழர்-சக மார்க்கத்தவர், தாங்கள் அடைந்த மார்க்கம்-சன்மார்க்கம், பொலிய-விளங்க, அராவுரி-பாம்புத் தோல், நீத்த-நீக்கிய மலர்-மல்லிகை முல்லை போல்வன இக்கடை-இவ்விடத்தில் ;  கடை-இடம், வாசல் தூசு-ஆடை, கால்-காம்பு கொண்டல்-மேகம் போன்ற நிறமுடைய திருமால், மிகை-வீண்.  காசினி-பூமி, கூய்-கூப்பிட்டு, சேவையார்-வேளாளர்.
    விளக்கம் : இப்பாடலில் சேக்கிழார் திருவடிச்சிறப்பும், அவர் உலகைக் காக்கும் பண்பும் கூறப்பட்டுள்ளன.  உயர்களைப் பந்தித்து நிற்பவை ஆணவம் கன்மம் மாயை என்பனவாகும்.  பசுவாகிய உயிர்கள் பாச பந்தங்களினால் கட்டுப்பட்டிருக்கும் காரணங்களாலேயே பசு என்னும் பெயரைப் பெற்றது.  அவற்றுள் மாயாமலமாவது இப்பிரபஞ்சமாகிய காரியப் பொருளுக்கு ஆதி காரணமாகியும், உயரின் அனாதியாகவே பற்றிநிற்கும் ஆணவத்தோடும் சேர்ந்து அதனைப் பக்குவப்படுத்துவதாகியும், எதையும் நினைக்கவிடாமல் எல்லா உலகங்களையும் மயக்கித் தொழில் படுத்தும் தன்மையது.  இம்மலம் அஞ்ஞானத்தை உண்டுபண்ணும், பொய்கூறச்செய்யும், மேலும் காமவசம் ஆக்கல், மயங்குதல், பொறாமைப்படுதல், பயப்படுதல், ஆசையுண்டாதல் ஆகிய செயல்களுக்கும் காரணமானது.
6.     நலத்தின் உயரும் பழையனூர்
          
நாளும் பொலியும் அவையகத்து
      
நலிவு புரிநீ லியைக்கண்டு
          
நடுங்கா நின்ற வணிகனுக்கு
      
நிலத்தில் இயல்நின் உயிர்க்கிறுதி
          
நேரு மாயி னியாமெல்லாம்
      
நெருப்பில் முழுகி உயிர்துறப்போம்
          
நீஓ ருதிஎன் றுரைத்தபடி
      
வலத்தின் உயரச் சொல்தவறா
          
வண்ணம் எழுநாக் குழிமுழுகி
      
வடஆ ரணியத் தாடொருவர்
          
மலர்த்தாள் அடைந்த எழுபதின்மர்
      
குலத்தில் உதித்தார் அருள்மழைபெய்
          
கொண்டல் வருக வருகவே
       
குன்றைப் பொருமா ளிகைக்குன்றைக்
          
கோமான் வருக வருகவே.
    (அ. சொ.) பழையனூர் என்பது திருவாலங்காட்டிற்குக் கிழக்கே ஒரு கல் தொலைவில் உள்ள ஓர் ஊர்.  பொலியும்விளங்கும், அவையகத்து-மன்றத்தில், நலிவுபுரி-போவார் வருவாரைத் துன்பம் செய்யும், நீலி-பேயாய் மாறிய ஒருத்தியின் பெயர், நடுங்காநின்ற-நடுங்கிய, இறுதி-அழிவு, ஓருதி- உணர்க, வலத்தில்-வெற்றியில், எழுநா-ஏழுநாவினைப் பெற்ற அக்கினி, வடஆரணியம்-திருஆலங்காடு, ஆடுஒருவர்- நடனமிடும் இரத்தின சபாபதியாம் ஒப்பற்ற இறைவர், ஆர் அருள்-அருமையான அருளை, கொண்டல்-மேகமே, குன்றைப் பொரு-சிறுமலைகளைப் போன்ற, குன்றைக்கோமான்-குன்றத்தூரில் அவதரித்த தலைவராம் சேக்கிழார் பெருமானே.
    விளக்கம் :  பழையனூர் என்பது திருஆலங்காட்டிற்குக் கிழக்கே ஏறக்குறைய ஒருகல் தொலைவில் உள்ள ஊர்.  இப்பழையனூர் கங்கைகொண்ட சோழனால் திருவாலங்காடுடைய மகாதேவர்க்குத் தானமாகக் கொடுக்கப் பட்டது என்பதும், முதல் முதல் இவ்வூர்த் தென்னையும் பனையும் ஈழவரால் கள் இறக்கப்படாததாகவும் இருந்தது என்பதும் செப்பேடுகளால் அறிய வரும் செய்திகள்.  இதனால் மது விலக்கிற்கு முன்பே அடிகோலிய ஊர் பழையனூர் என்பது பெற்றாம்.
 7.     அண்டம் அளவும் வரைநாட்டில்
          
அரசர் கலகம் ஆதலினால்
      
ஆங்காங் கொருவி வணிகர்எலாம்
          
அயல்நாட் டகம்புக் கினிதமர்ந்து
      
விண்ட கலகத் திறம்தெரிந்து
          
மேய தத்தம் இடம்புக்க
      
விதம்உள் உணர்ந்து தம்சரணா
          
மேவி இருந்த மடக்கொடியை
      
மண்ட அழைத்துக் கொடுசென்றிம்
          
மடமா தினைக்கொள் ளுதிர்என்ன
      
மயங்கல் கண்டு தங்கைஎனும்
           
வாய்மை கொடுமைத் துனக்கேண்மை
      
கொண்ட குலத்தில் உதித்தருள்பெய்
          
கொண்டல் வருக வருகவே
      
குன்றைப் பொருமா ளிகைக்குன்றைக்
          
கோமான் வருக வருகவே
    [அ. சொ.]  அண்டம்-வானம், அளவும் - அளாவி உயரும், வரைநாட்டில்-மலை நாட்டில், சேரநாட்டில், ஒருவி-விட்டு நீங்கி, நாட்டகம்-நாட்டில், விண்ட-நீங்கிய, திறம்-கூறுபாட்டை, மடக்கொடியை-இளமையான பூங்கொடி போன்ற மாதினை, கேண்மை-முறைமை, உறவு, மண்ட-விரைந்து.
    விளக்கம்:  மலைகள் அண்டம் அளவும் அளாவியது என்றது உயர்வு நவிற்சி அணியின் அமைப்பாகும்.   இப்பாடலில் அமைந்த வரலாறு பின் வருவது :  ஒரு காலத்தில் சேர நாட்டில் கலகம் ஏற்பட்டது.  அதனால் சேர வணிகர்கள், வெவ்வேறு நாடுகளில் சென்றனர்.  அவ்வாறு சென்ற வணிகர்களுள் ஒரு பெண் தவறித் தொண்டை நாட்டு வேளாளர்களைச் சரண் அடைந்தனள்.  அவளைத் தம் மகளாகவே ஏற்று வேளாளர்கள் வளர்த்து வந்தனர்.
    பல நாட்களுக்குப் பின் கலகம் நீங்க மீண்டும் தம் சேர நாட்டை அடைந்தனர்.  அங்ஙனம் அடைந்த அவர்கள் தம்மைவிட்டு நீங்கிய பெண் தொண்டை நாட்டுக் காஞ்சி புரத்தில் வேளாளர்களிடம் வளர்வதை அறிந்து அவளை அழைத்துப் போக வந்தனர்.  அதுபோது வேளாளர்கள் நாங்கள் இப் பெண்ணை எங்கள் தங்கைபோல வளர்த்தோம்.  அவளை நீங்கள் குறைவாக எண்ணாமல் உங்கள் மரபினன் ஒருவனுக்கு மணம் செய்து கொடுப்பதானால் அனுப்புவோம்என்றனர்.  வணிகர்கள் அவ்வாறே அவளை வணிகன் ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேளாளர்கள் அப்பெண்ணிற்குச் சீதனம் முதலியவற்றைத் தந்தனர்.  அத்துடன் இன்றி அவ்வணிகர்கள் அவ்வேளாளர்களை மைத்துன முறைமை கொண்டாடும்படியும் செய்தனர் என்பதாம்.
 8.     விற்றங் கியவி பூதியினால்
          
விளர்ப்புற் றன்பின் வழிஇயங்கி
      
வேறு வேறாம் பரசமய
          
வெய்ய கோடை முழுதொழியச்
      
சிற்றம் பலநா யகர்கருணைத்
          
திரைவா ரிதியில் படிந்துண்டு
       
திசைஎங் கணும்தோற் றிடமின்னித்
          
தீய ஒழுக்கம் தபக்கறுத்துக்
      
கற்றங் கமையார் மலத்துன்பம்
          
கழல அரமா முழக்கெழுப்பிக்
      
கருதா நின்ற திருத்தொண்டர்
          
காமர் வாய்ந்த சரித்திரமாம்
      
கொற்றம் பொலியும் மழைபொழிந்த
          
கொண்டல் வருக வருகவே
       
குன்றைப் பொருமா ளிகைக்குன்றைக்
          
கோமான் வருக வருகவே8                 
[அ. சொ.]  வில் - ஒளி, வில்+தங்கிய, விளர்ப்புற்று - வெண்ணிறமுற்று, இயங்கி-நடந்து, பரசமய வெய்ய கோடை-பிறமதங்களாகிய வெம்மைமிக்க கோடை, சிற்றம் பல நாயகர்-தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் நடனம் புரியும் தலைவர் நடராசப் பெருமானார், கருணைத்திரை-கருணையாகிய அலை, வாரிதி-கடல், தப-கெட, அமையார்-கற்றபடி அமையாதவர், மலத்துன்பம்-மும்மலங்களால் வரக்கூடிய துன்பம், அரமாமுழக்கு :  அர, அர என்று கூறும் சிறந்த ஒலி, காமர்-அழகு, கருதா நின்ற-கருதப்பட்ட, கொற்றம்-வெற்றி, பொலியும்-விளங்கும்.
    விளக்கம் : நீற்றிற்கு ஒளியுண்டு ஆதலின் வில் தங்கிய விபூதிஎன்றனர்.  சேக்கிழாரும் நீற்றின் ஒளிக்கு சந்திரனைக் கூறி இருப்பதையும் நாம் அறிதல் வேண்டும்.  “அண்ணல் வெண்ணீற்றின் ஒளி போன்றது நீள் நிலாஎன்ற தொடரைக் காணவும்.  வேறு வேறாம் பரசமயம் என்பன உலகாயதன், சௌத்திராந்திகன், யோகாசாரன், மாத்தியமிகன், வைபாடிகன், நிகண்டவாதி, ஆசீவகன், பட்டாசாரியன், பிரபாகரன்சத்தப்பிரம்பவாதி: மாயாவாதி, பாற்கரியன்நிரீச்சுரசாங்கியன், பாஞ்சராத்திரிகள், மேற்கொண்டவை.  இம்மதங்கள் வெம்மை செய்து நன்மை செய்யாத காரணத்தால் கோடையாக உவமித்தனர் ஆசிரியர்.
9.     விள்ளும் மலர்ஆ தனத்தானும்
          
வெய்ய சுதரி சனத்தானும்
      
விரும்பும் அதிகா ரக்கதையா
          
விளம்பா நின்ற கோல்கொள்ள
      
நள்ளும் பிரம சரியர்எலாம்
          
நாடும் பலாசக் கோல்கொள்ள    
      
நான்காம் ஆச்சி ரமத்தமைந்தார்
          
நயந்து முந்தூழ்க் கோல்கொள்ளத்
      
தெள்ளும் வணிகர் குலம்எல்லாம்
          
தேற்றும் துலாக்கோல் அதுகொள்ளச்
      
செம்பொன் மோலி அரசர்எலாம்
          
செங்கோல் கொள்ளச் சிறுகோல்கைக்
      
கொள்ளும் குலத்தில் உதித்தஅருள்
          
கொண்டல் வருக வருகவே
      
குன்றைப் பொருமா ளிகைக்குன்றைக்
          
கோமான் வருக வருகவே
    (அ. சொ.) விள்ளும்-மலரும், மலர் ஆதனத் தான்-தாமரை மலராகிய ஆதனத்தில் உள்ள பிரமதேவன், வெய்ய-கொடுமை மிக்க, சுதரிசனத்தான் - சுதரிசனம் என்னும் சக்கரம் படைத்த திருமாலும், கதை-தண்டு என்னும் ஆயுதம், விளம்பாநின்ற-விளம்புகின்ற, நள்ளும்-வேத வேதாந்தத்தை விரும்புகின்ற, பலாசக்கோல்-முள்முருக்கம் கொம்பு, நான்காம் ஆச்சிரமத்து அமைந்தார்-நான்காம் நிலையாகிய சந்நியாச நிலையில் அமர்ந்தவர், ஆச்சிரம்-நிலைமுந்தூழ்-மூங்கில், தெள்ளு-தெளிவான அறிவுடைய, துலாக்கோல்-தராசுக் கோல், மோலி-கிரீடம், முந்தூழ்க் கோல்-ஏகதண்டம், திரிதண்டம் என்பன.  சிறுகோல்-சிறிய தாற்றுக்கோல், குலத்தில்-வோளார் குலத்தில்.
    விளக்கம் :  இப்பாடலில் திரு பிள்ளை அவர்கள் வேளாளர் சிறுகோல் பிடித்து ஏர் உழுவதினால்தான் பிரம்மாதி விஷ்ணுக்களும் தாம் தாம் தாங்கவேண்டிய கோலுடன் திகழவேண்டி உள்ளது.  அவ்வேளாளர் அச்சிறு கோலைத் தம் கையில் பிடித்திலரேல், எவரும் கோலைத்தாங்க இயலாது என்பதை எடுத்து இயம்பியுள்ளனர்.
    ஆதிகாரம் நடத்துவோர் தம் கோல் கையில் வைத்திருத்தல் மரபு. இதனைப் பரஞ்சோதி முனிவர், நந்தியம் பெருமானுக்கு வணக்கம் செலுத்தும் பாடலில் இனிதுற,
வந்திறை அடியில் தாழும் வானவர் மகுட கோடி
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பை ஆக்கும்
நந்தியம் பெருமான்பாதம் நகைமலர் முடிமேல்வைப்பாம்
என்று பாடிக்காட்டியுள்ளதை ஈண்டு நினைவு படுத்திக் கொள்ளவும்.    பிரம்மன் கையில் யோகதண்டமும், திருமால் கையில் அம்பாகிய கோலும், பிரமசரியர் கையில் கல்யாண முருக்கங்கோலும், நான்காம் ஆசிரமத்தார் ஆகிய சந்நியாசிகள் கையில் மூங்கில் கோலும் பிடிப்பதற்குக் காரணம் வேளாளர் தம் கையில் தாற்றுக் கோல் பிடிப்பதனால் என்பதை ஆசிரியர் திறம்பட விளக்கியுள்ளனர்
10.    எள்ளும் திறத்துப் பரசமயர்
          
ஏறு வருக தேறுதலில்
      
எங்கள் உணர்வின் கணும்மதுரித்
          
தினிக்கும் இருங்கோல் தேன்வருக
      
தெள்ளும் புலத்தர் பெறுகாம
          
தேனு வருக அருகந்தர்
      
சிந்தா மணியைப் பொருட்படுத்தாச்
          
செல்வச் சிந்தா மணிவருக
      
உள்ளும் அவருக் கெய்ப்பிடைவைப்
          
பொத்துள் எழும்ஒள் ஒளிவருக
      
ஒழியாப் பத்திக் கடல்வருக
          
உலவா தமைந்த சிவபோகம்
      
கொள்ளும் சைவப் பயிர்வளர்க்கும்
          
கொண்டல் வருக வருகவே
      
குன்றைப் பொருமா ளிகைக்குன்றைக்
          
கோமான் வருக வருகவே
    அ. சொ. எள்ளும்-இழிவாகப் பேசும், திறந்து-தன்மையுடைய ஏறு-சிங்கமே உணர்வின்கணும்-உணர்வினிடத்தும், மதுரித்து - இன்பம் செய்து, இருக்கோல்தேன் - பெரிய கொம்புத்தேனே, தெள்ளும் புலத்தார்-தெளிந்த அறிவுடையோர், ஞானிகள் அருகந்தர்-அருகர்களுடைய, சிந்தாமணியை-சீவக சிந்தாமணி என்னும் நூலை, சிந்தாமணி-தேவலோகத்தில் உள்ள சிந்தாமணியே, உள்ளுமவர்க்கு-நினைப்பவர்களுக்கு, எய்ப்பிடைவைப்பு-தளர்ந்த காலத்து உதவும் சேமநிதி, போகம் - விளைவு, சிவபோகம் - ஆன்மாவின் ஆனந்தானுபவ நிலை, உலவாது-குறையாது.
    விளக்கம் :  பரசமயத்தவர் ஈண்டுச் சமணர்கள், பௌத்தவர்கள்.  அவர்கள் செயல் நற்செயலாகப் புலனாகவில்லை.  அவர்கள் சம்பந்தர் இருந்த இடத்திற்குத் தீயிட்டனர் என்றால், அவர்தம் கொடுமைக்கு வேறு யாது கூற இயலும்? ஆகவே, அவர்களைச் சேக்கிழார் எள்ளும் திறத்தினர் என்பதில்குற்றம் இல்லை.  இவர்களை இருள்போல வந்து தந்தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர்என்றும், “கருமுரட்டு அமண்கையர்என்றும், “மால்பெருக்கும் சமண் கையர்என்றும், “புல்லறிவில் சாக்கியர்கள்என்றும், அஞ்சாது உண்மையைக் கூறியதால் சேக்கிழாரைபரசமய ஏறுஎன்றனர்.
செய்யுள் 1. வாரானைப் பருவ விளக்கம், சேக்கிழாராம் குழந்தை அணிந்த அணிகலன்கள், வேளாளர் ஈகை, பண்பு, பராவி எழும் என்னும் தொடரின் அரிய குறிப்பு,
செ. 2.  தாமரை மலரைவிடச் சேக்கிழாரின் பாத தாமரைகள் சிறப்புடையன எனல்.  இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகள் ;  வேளாளர் புகழ் வாய்ந்தவர் ; சேக்கிழாரின் புன்முறுவல் அன்பர்கட்கு மகிழ்வையும், எனைய சமயத்தவர்கட்கு அச்சத்தையும் தரும். ஆறு சமயத்தவர். 
     செ. 3. முத்தி அடைதற்குரிய பல்வேறு வழிகளைப் பல்வேறு மதங்கள் கூறும் கருத்துக்கள், ஐந்துவகைக் கந்தம், இவற்றின் விளக்கம், மூவகைக் குணங்கள், இவற்றின் விளக்கம். இருவினை, சேக்கிழார் செந்தமிழ்ப் பெருமை அறிந்தவர். (இப்பாடல் சிவப்பிரகாசத்தில் வரும் முத்தி பேதங்களின் இயல்பு கூறப்பட்ட குறிப்புக்களைக் கொண்டது.  பல மதங்களைப் பற்றிய குறிப்புக்களையும் கொண்டது)
    செ. 4. முத்துக்கள் பிறக்கும் இடங்கள், முத்துக்களைக் குவித்தல், சேக்கிழார்  குழந்தை அக்குவியலில் ஆடல், அனபாயன் சேக்கிழார்க்குச் செய்த சிறப்பு.
     செ. 5. மலங்களின் வகை, மலபரிபாகம், சத்தினிபாதம் பற்றிய விளக்கம்.  புத்திர, தாச, சக சன்மார்க்க விளக்கம், ஆடையின் மென்மை, வேளாளர் மேன்மை.
   செ. 6. பழையனூர் நீலி வரலாறு ;  வேளாளர் சொல் தவறாமை, வேளாளர் மாண்பு, வேளாளர் தீயில் பாய்தல், திருவாலங்காட்டுக் குறிப்பு.   
  செ. 7. சேர நாட்டு வணிகர் வேற்று நாடு புகுதல், வணிகர் மகளை வேளாளர் காத்தல், இவ்விரு மரபினரும் உறவு கொண்டாடல், வேளாளர்கள் மாண்பு.   
    செ. 8. சேக்கிழாரை மேகமாக உருவகம் செய்திருத்தல் ;    அதற்குரிய காரணம்.  குன்றத்தூர் மாளிகை மாண்பு. 
செ. 9. வேளாளர் மாண்பு, வேளாளர் தம் கையில் தாற்றுக்கோல் பிடிப்பதனால்தான் ஏனையவர்களும் தம் தமக்குரிய கோல் கொண்டுள்ளார் எனல். 
     செ. 10. சேக்கிழாரைப் பலவாறு சிறப்பித்து வருக என அழைத்தல் ;  அவ்வாறு விளிப்பதன் கருத்து. 
 


No comments:

Post a Comment