Pages

Wednesday 5 August 2015

அழகர் கிள்ளை -இலக்கிய நயம்




   ,
அழகர் கிள்ளை -இலக்கிய நயம்
இந்நூற் செய்யுணடை, எதுகை மோனை யமைந்து இனிமையும் எளிமையும்வாய்ந்து, ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் கெழுமியதாய்ப் படிக்கப்படிக்க இன்பந்தரும் பான்மையினமைந்து செல்கின்றது. தன்மை முதலிய பொருளணிகளும், மடக்குமுதலிய சொல்லணிகளும் பல விடங்களில் வந்துள்ளன. இராமாயணம், பாகவதம்,கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய புராணங்களிற் கூறப்படுங் கதைகள்

பல வரக் காண்கின்றோம். பழமொழி நாட்டுவழக்கம், மரபு, உலகியல்பு, இடையிடையே
வருகின்றன. எனவே இந்நூலாசிரியர், இலக்கணம் இலக்கிய
முதலிய பல நூல்கள் கற்றுணர்ந்தவர் என்பதும், உலகியல் வழக்கு, செய்யுள் வழக்கு பயின்று கவிபாடும் ஆற்றலுடையவர் என்பதும் கூறாமலே நன்கு விளங்கும். வெளிப் பொருள் ஒன்று, உட்பொருள் ஒன்று அமையப் பாடுவதே இவர் இயற்கைபோலும், நூலுட் காண்க.
பொருத்தம்
   ஆசிரியர் நூலின் தொடக்கத்திற் "கார்கொண்ட" என்ற சீர் எடுத்திருப்பது பாட்டுடைத்தலைவர் ஆகிய "அழகர்" என்ற பெயருக்குப் பொருத்தம் பார்த்து வைத்ததாகத் தோன்றுகிறது. மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம் என்ற பத்தும் பொருந்தியுள்ளது அச்சீரின்கண். பாட்டியல் கற்றவர் என்பதில் ஐயமுளதோ? ஆய்ந்தறிக.
பொருளணி
"துரி சற்றோர்,
இன்சொல்லைக் கற்பா ரெவர்சொல்லும் நீ கற்பாய்
உன்சொல்லைக் கற்கவல்லா ருண்டோகாண்"
(16, 17)

"வாளனைய கண்ணார் வளர்க்கவளர் வாயுறவில்
லாளனைநீ கண்டா லகன்றிடுவாய்"
என்று கிளியின் இயற்கைப் பண்பிணை எடுத்துரைக்குமிடங்கள் தன்மையணி யமைந்துள்ளன. அழகர் தெய்வப் பண்பினைச் செப்புமிடங்களிலும் அவ்வணி சேர்ந்துள்ளன.
"இந்திரன் போலு மிடபாசலம் அவன்மேல்
வந்தவிழி போலும் வளச்சுனைகள் - முந்துதிரு
மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம்
போலவரு நூபுரநதி யான்"
(102, 103)
எனவும்,"இயலுங் கரியுமதி லெற்று முரசும்
 
புயலு முருமேறும் போல"



எனவும் உவமையணி அமைந்துள்ளன.
"உண்ணின் றுருக்கும் .......
அத்துவிதா னந்தமென்ற களி யானையினான்"
(112 - 116)

"தானந் தவர்க்கத் துடனெழுந்து......வேதப்புரவியான்"
 
(116 - 119)
எனவும் அத்துவிதானந்தத்தை யானையாகவும், வேதத்தைப் புரவியாகவும் உருவகஞ் செய்திருப்பது காண்க.                    "வன்போரில்,
மேவுஞ் சிவன்விழியால் வேள்கருகி நாண்கருகி
கூவும் பெரிய குயில்கருகிப் - பாவம்போல்
நின்று மறுப்படுநாள் நீதா னடுப்படையிற்
சென்று மறுப்படா தேவந்தாய்"

 - 41)

எனவும்,
"பார்க்கும் பொழுதிலுனைப் பார்ப்பதியென் பாரென்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்"
(3)

"கைச்சிலைவே ளால்வருந்துங் காமநோய் தீர்ப்பதற்கோ
பச்சிலை ரூபம் படைத்திருந்தாய்" ;
(49)
எனவும் கற்பனை வந்துள்ள இடங்கள் காண்க. இன்னும் பல இடங்களில் இவ்வணிகள் வந்துள்ள பகுதிகளும் பிற வணிகள் வந்துள்ள பகுதிகளும் ஆய்ந்து காண்க.
சொல்லணி
"குருகூரத் தானேசங் கூர்கமுகி லேறும்
குருகூரத் தானேசங் கூர்" (காப்பு)

"பாத கமலம் பரவுமலை யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன்"
(141)

"திருப்பாது கைக்கும் செழுங்கருடனுக்கும்
திருப்பாது கைக்குமர சீந்தோன்....."
(137)
எனவும்,
"பார முதுகடைந்த பாயலான் விண்ணவர்க்கா
ஆரமுது கடைந்த வங்கையான் - நாரியுடன்
வன்கான கங்கடந்த வாட்டத்தான் வேட்டுவற்கு
மென்கான கங்கடந்த வீட்டினான்"
(73, 74)

"அரணாம் புயங்க ளுறுமம்ப ரீடற்கும்
சரணாம் புயங்க டருவோன்"
(138)
எனவும் யமகம், திரிபு என்ற சொல்லணிகள் வந்துள்ளன.
 "
தம்பியர் மூவருக்கும் தானே யரசீந்த, நம்பி" (216) எனவும், "கும்பமுனி
வாயி னுரையடங்க வந்த கடல" (132, 133) எனவும், அரவணையானென்பது
முண்டண்ணலரன்போல, இரவணையானென்பது முண்டு (170) எனவும், "மேவுஞ் சிவன்
விழியால் வேள்கருகி நாண்கருகி" (40) எனவும் புராணக்கதைகள் புகுந்திருக்கும்
இடங்களை நோக்குக.   பால் குடிக்கும் பச்சைக் குழந்தை (48) கிளிப்பிள்ளை சொன்னத்தைச் சொல்லும்(46, 47), அவனசையாமல் அணுவசையாது (1-3), இபமுண்ட வெள்ளிற்கனி (187, 188)
(
யானையுண்ட விளங்கனி) யானேன் எனப் பழமொழிகள் சில பார்க்கின்றோம்.

நம்மாழ்வார் காப்பு முன் அமைத்திருப்பதும், கருடனைப் பெரிய திருவடிகள் (23)என்றும், அழகர் வாகனம் ஆகிய குதிரையைக் "குதிரை நம்பிரான்" (152) என்றும்,பள்ளியறையைச் "சேர்த்தி" (230) என்றும் இவர் செய்யுளில் அமைத்துப் பாடியதும்வைணவமத மரபு குறித்தவையே. புதுமனை புகுவோரும், பகைவர் நாட்டை வென்றுதனக்குரியதாக்கிப் புதிதாக அந்நாட்டில் நகரிற் புகுவோரும், அவற்றைப் புதுக்கிமாவிலை தோரணங்கட்டி, வாழை கமுகு நாட்டிப் புகுவது தமிழ்நாட்டு வழக்கமாகும்.அது குறித்து, "வீடணன் போய்த் தொல்லிலங்கை கட்டு புதுத் தோரணமோ?" என்றுநாட்டு வழக்கத்தை நாட்டினர். ஒருவர்பால் ஒருவரைத் தூது விடுப்போர், தூதுசொல்லும் ஆற்றல் உடையவரென வறிந்து அவரைப் பெரிதும் புகழ்ந்து வேண்டும்உதவி புரிகின்றேன் என்று மனமகிழ்வுண்டாக்கிப் பின் தூதுவிடுத்தல் உலகியல்பு. அவ்வியல்பினையறிந்தேஆசிரியர் "கிளியரசே !" என விளித்துப் பலவாறு புகழ்ந்து "ஊட்டுவேன், நலம்காட்டுவேன்" என்று பலபடப் பாராட்டித் தலைவி தூது விடுப்பதாகப்பொருளமைத்துள்ளார், உலகியலுணர்வை இந்நூலுட் பலவிடங்களில் உய்த்துணர்க. இருபொருள் படச் சொற்றொடர் அமைப்பதே இக் கவிஞர்க்கியற்கை என்பதை இந்நூல்காட்டும். "சீர்கொண்ட வையம் படைக்கு மதனையு மேற்கொண்டு" என்ற தொடரில்,சிறப்பாகிய பூமியைப் படைக்கும் அத்தொழிலையும் தனக்குரியதாகக் கொண்டு என்பது
வெளிப்பொருள். சிறப்பாகிய ஐந்து அம்புகளை யடைத்து வைத்திருக்கும்மன்மதனையும் தன் மேல் ஏற்றிக்கொண்டு என்பது உரிய பொருள். இவ்வாறுவந்துள்ள இடங்கள் பல ஆதலால் அவற்றை உரைவிளக்கம் பார்த்துக் கண்டுகளித்துச் சொற்சுவை பொருட்சுவை துய்த்து இன்புறுக.


திருமாலுக்குரிய பத்துறுப்புகள் யாவை?
1.மலை
  முன் நின்று புகழ் கூறித் துதிக்கும் பிரமன் அரன் என்னும் இருவரும்
நீங்காமல் இருப்பக் கேசவாத்திரி என்னும் அழகு பெற்று, இனமாகிய விரும்பத்தக்கஉடலைப் பெறுதற்குரிய பிறவியாகிய விலங்குகளைக் கெடுத்தலாற் சிங்காத்திரி என்றசிறப்புப் பெற்று எம்பெருமானாகிய திருமால் கண்ணனாக வந்தபோது மேய்த்த பசுக்கூட்டங்கள் போலச் சிறுமலைகளெல்லாம் அருகில் சூழ்ந்து நிற்க, அப்பசுக்கூட்டத்தில்ஒரு பெரிய காளைபோல யாவரும் பார்க்கும்படி தோன்றுவதால் இனிய வாத்தியங்கள் முழங்கும் இடபகிரி என்றபெயர் பொருந்திய சோலைமலையை யுடையவன்.
2.ஆறு
   எஞ்ஞான்றும் பொன் மலையிலிருந்து வீழ்ந்து ஓடுகின்ற சாம்பூநதம்
என்ற ஆறுபோலத் திருமால் திருவடியில் அணிந்த நல்ல மாணிக்கச் சிலம்பிலிருந்துவழிந்தோடுகின்ற நதியாகிக் கற்கள் நிறைந்த மலைகளில் இடபமலைஇந்திரனைப்போலத் தோன்றவும். அதிலுள்ள வளம்பொருந்திய சுனைகள்அவ்விந்திரன் மெய்ம்மேல் உள்ள கண்களைப்போலத் தோன்றவும் பழைமையான திருமால் தோளினும் மார்பினும்அணிந்த முத்து மாலைபோலத் தோன்றி வருகின்ற சிலம்பாறுடையவன்.
3.நாடு
  நல்லொழுக்கமுள்ள செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த கொடுந்தமிழ்நாடுகள் பன்னிரண்டும் பூமகட்கு முறையே நினைக்கும் இருகைகள், இருசெவிகள், இருகொங்கைகள், முகம், இரு கால்கள், கூந்தல் ஆகும். அவற்றுள் இமயமலைமேல் தமதுபுகழை எழுதப்பட்ட சோழனாடும் பாண்டிய நாடும் இரு கண்களாம் ; அவ்விரண்டில்
கருணையுடைய வலக்கண் என்று சொல்லப்படுகின்ற தென்பாண்டி நாட்டினையுடையவன்.
4.ஊர்

  
தங்கமாகிய சந்திரன் வடிவத்தையுடைய சோமச்சந்திர விமானத்தை
இந்திரவிமானமே இஃது என்றும் மந்திரத்தோடு கூடிய வெற்றிக்கொடி ஏறுகின்ற
கொடிமரத்தைக் காமவல்லி படரும் கற்பகமரமே இது வென்றும், அறிவிற்
சிறந்தவர்கட்கு ஒப்பற்ற வாழ்வாக வீற்றிருக்கும் திருமாலை உபேந்திரனே என்றும்,
உடையாழ்வாரை ஆண்ட குருவாகிய திருமாலையாண்டான் என்பவரை வியாழபகவான்
என்றும், பொருந்திய புகழ்பெற்ற திருமலை நம்பி முதலிய கோயிற் பணியாளர்களைத்
தேவர்களே என்றும் பெரியோர்கள் கருதும்படி அழகுநிறைந்த ஊர் ஆகிய
அமராவதியைப்போன்ற திருமாலிருஞ்சோலை என்ற சிறந்த ஊரினையுடையவன்.
5.தார்
  மார்பின்கண் அணிந்துள்ள மதிக்கப்பெற்ற பல ஆபரணங்களின்
நிறத்தொடு கலந்து வானவில்லைப் போலப் பச்சை நிறம் காட்டும் துழாய்மாலை
யுடையவன்.
6.கரி
மனத்துள் நின்று மனதையுருகச் செய்யும் வைணவம் ஆகிய உயர்ந்த
மதம் பெருகவும், திருமகள் அழகிய கொம்பும் துதிக்கையும் ஆகச் சேரவும்,
நெருக்கமான பகுதிகள் ஒத்திருக்கின்ற வைகானதம், பாஞ்சராத்திரம் என்ற
ஆகமங்களின் (சமய நூல்களின்) ஒலியாகிய மணியோசை முழங்கவும், ஆசை நீங்கும்
வரையும் விடாமற் கட்டுகின்ற வடகலை தென்கலை என்ற மணிகட்டிய கயிறுகளும்
எப்போதும் நீங்காத ஆனந்தமயமாகிய தாமரைப் பூப்போன்ற திருமால்
பாதங்களைக்கண்ட "அத்துவிதானந்தம்" என்ற பெயர் கொண்ட யானை யுடையவன்.
7.பரி
  அழகான சேணம் கடிவாளம் என்பவை பூண்டு எழுந்து வாயால்
நுரைகளைக் கக்கி்க் குதிரை என்ற வடிவத்தின் நலத்தை எல்லார்க்குமகாட்டிப்
போர்க்களத்தில் எதிர்த்தவர் வானுலகஞ் செல்ல வழிகாட்டி, எங்கும்
தூசிகளையுண்டாக்கிப் பல மான்களையும் ஓட்டத்தில் வென்று விரைந்து சென்று,
நான்கு கால்கள், வால், வாய் என்ற ஆறு உறுப்புக்களையும் போர் செய்யும்
உறுப்புக்களாகக் கொண்டு முன்னணியிற் போற்றப்படுகின்ற குதிரை எனவும், அந்த
எழுத்தின் இனத்தோடு கூடி ஒலியெழ மனிதர் வாய்ச்சொல்லைக் கடந்து கோயிலின்
அமைப்பின் அழகைக் காட்டி முத்தியுலகம் செல்வதற்கு வழி காட்டி அடையும்
உயிர்களையும் காட்டிப் பெருமை தரும் பல நூல்களையும் தோற்றுவித்து ஆறு
அங்கங்களையும் தன் அங்கமாகக் கொண்டு உலகத்தில் எவராலும் போற்றப்படுகின்ற
வேதம் எனவும் இருபொருள் கொள்க. குதிரைக்கும் வேதத்திற்கும் சிலேடை இது.
வேதமாகிய குதிரையையுடையவன் என்க.
8.கொடி

முற்காலத்தில் அமுதங்கடைவதற்காகத் திருப்பாற்கடலில் போய்ச்
சேர்ந்த ஒரு மந்தரமலையும், பூமியும், பம்பரமும், சக்கரமும் போலத் தலைசுழன்று
கூடிய வேகம் குறைந்தபோது வீழ அவ்வமையம் பார்த்து வாசுகியையும் சேடனையும்
வாயாற் கௌவிக்கொண்டுபோகும் திறல் வாய்ந்த கருடனாகிய கொடியையுடையவன்.
9.முரசம்
சூழ்ந்த திருமாலிருஞ்சோலையாகிய தனது மலையில் உள்ள
சிங்கத்தின் முழக்கமும், யானையின் ஒலியும், மேகத்தின் முழக்கமும் நின்று ஆரவாரஞ்
செய்வதால் கோயிலின் முற்றத்தில் எஞ்ஞான்றும் முழங்குகின்ற அந்த மூன்று
முரசங்களை யுடையவன்.
10ஆணை
எக்காலத்திலும் "அவன் அசையாமல் ஓர் அணுவும்கூட அசையாது"
என்ற பழமொழிப்படி தவத்தால் நிலைபெற்ற ஆணையையுடையோன்.
--------------------------------------------------------------------------------------







                     
















No comments:

Post a Comment