Pages

Thursday 14 May 2015

தற்காலத் தமிழகத் தமிழும் அயலகத் தமிழும்



பி.ஏ.. தமிழிலக்கியம் முதல் பருவம் - (20132014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 2
தற்காலத் தமிழகத் தமிழும் அயலகத் தமிழும்
 ( இணையத்தில் கிடைப்பவை)



அலகு 1 :கவிதைகள்

            1.கவிமணியின் ஆசிய ஜோதி 2. மலேசியக் கவிதைகள் 2 (ரெ. சண்முகம் மற்றும் செ.சீனி நைனா முகம்மதுவின் கவிதைகள்) 3. சிங்கப்பூர் கவிதைகள் 2 (லதா மற்றும் முகம்மது கபீர் கவிதைகள்) 4. இலங்கைக் கவிதைகள் 2 (சிவரமணி மற்றும் சேரன் கவிதைகள்)

 அலகு 2 :சிறுகதைகள்

            தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டுச் சிறுகதைகள் 7, மலேசியா 1, சிங்கப்பூர் - 1, இலங்கை 1. (சிறுகதை நூல்கள் வானவில் கூட்டம், வானதி சிறுகதைகள் மற்றும் அயலகத் தமிழ் இலக்கியம்.)

 அலகு 3 :நாவல்கள்

    நாகம்மாள் ஆர். சண்முகசுந்தரம் (தமிழகம்)
http://www.chennailibrary.com/ebooks/ebooks.html நாகம்மாள்
    காதலினால் அல்ல ரெ. கார்த்திகேசு (மலேயா)
http://searchko.in/literature/ta-cached.jsp?idx=0&id=206 "காதலினால் அல்ல!"  (ஒரு நாவல்)ரெ.கார்த்திகேசு
 
 அலகு 4 :நாடகங்கள்

    குன்றுடையான் - ஜலகண்டபுரம் கண்ணன் (தமிழகம்) (வரலாற்று நாடகம்)
http://www.openreadingroom.com/?p=885
http://archive.org/stream/Kundrudaiyaan/Kundrutaiyaan#page/n7/mode/2up
    கந்தன் கருணை எஸ்.கே. ரகுநாதன் (இலங்கை) (சமூக ஓரங்க நாடகம்) http://noolaham.net/project/01/26/26.txt

 அலகு 5 :கட்டுரைகள்

            1.தற்காலக்கவிதைப் போக்கு 2. நாவலின் அண்மைக்காலப் போக்குகள் 3. சிறுகதை வளர்ச்சியில் காரணிகளின் பங்கு 4. தமிழில் சிறார் இலக்கியம் 5. தமிழில் பயண இலக்கியம் 6. தற்காலத் தமிழறிஞர் மூவர் (திரு.வி.க., பாவாணர், அப்பாத்துரையார்) 7.தற்கால மலேசியக் கவிதை 8. சிங்கப்பூரில் நாடகக்கலை 9. இலங்கையில் நாவல் வளர்ச்சி 10.அரவாணிகளும் மனிதர்களே!





அலகு 1 :கவிதைகள்2. மலேசியக் கவிதைகள் 2 (ரெ. சண்முகம் மற்றும் செ.சீனி நைனா முகம்மதுவின் கவிதைகள்)1.சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே!
மலேசிய மரபுக்கவிதை
ரெ.ச என்று எல்லோராலும் அன்பொழுக அழைக்கப்படும் ரெ.சண்முகம் அவர்களின் பாடலை இந்தத் தொடரில் பதிவு செய்கிறேன்.

பாடகர், இசையமைப்பாளர், பாவலர், பாடலாசிரியர், மேடை நாடகாசிரியர், வானொலி நாடக ஆசிரியர், நடிகர், இயக்குநர், கட்டுரையாசிரியர், சிறுகதை எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல்பெற்ற அரும்பெறல் கலைஞர் ரெ.சண்முகம். மலேசிய வானொலி அறிவிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது இவருடைய மற்றொரு வரலாறு.இவருடையசெந்தாழம் பூவாய்பாடல் திரைப்பாட்டுகளுக்கே வெல்விளி (சவால்) விடும் அளவுக்கு மிகச் சிறந்த பாடலாக புகழ்பெற்றது. இவருடைய குரலுக்கு மயங்கியோர் நாட்டில் பலர் உள்ளனர்.

இவர் சில நூல்களையும் எழுதி மலேசிய எழுத்துலகைச் செழிக்கச் செய்துள்ளார். அவற்றுள் ரெ.ச.இசைப்பாடல்கள், பிரார்த்தனை (கவிதை), நல்லதே செய்வோம் (கட்டுரை), இந்த மேடையில் சில நாடகங்கள் (சுய சரிதை) ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன.மலேசிய தமிழ் இசைக்கலை வாழ்விலும் வளர்ச்சியிலும் ரெ.ச எனும் பெயர் இரண்டறக் கலந்திருக்கிறது. இவருடைய அரும்பணிகளைப் பாராட்டும் வகையில் செவ்விசைச் சித்தர்எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்களிடையே சாதனை மாந்தராகத் திகழும் செவ்விசைச் சித்தர் ரெ.ச அவர்களின் பாடலொன்று இங்கே பதிவாகிறது. பொருள் விளக்கமே தேவையில்லாமல் புரிந்துகொள்ளும் அளவுக்கு மிக எளிமையான பாடல் இது. மலேசியத் தமிழர்களின் அன்றைய வரலாறு, இன்றைய நிலைமை ஆகிய இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் சித்தர்பாட்டு இது.
Image result for ரெ.சண்முகம்

**********************


சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே - இன்னைக்கும்
சரியாக அமையலயே தாண்டவக் கோனே
மிஞ்சிப்போயி நிக்குதையா தாண்டவக் கோனே - கொஞ்சம்
மிதிக்கத்தானே பாக்குறாங்க தாண்டவக் கோனே

காரினிலே பறக்குறவங்க தாண்டவக் கோனே நல்ல
கனவிலயும் மிதக்குறாங்க தாண்டவக் கோனே
தாருபோட்டு ரோடு போட்டவன் தாண்டவக் கோனே இன்னும்
தரையினிலே தவழுறானே தாண்டவக் கோனே

இவனுக்குள்ளயே ஏமாத்துறான் தாண்டவக் கோனே அத
எதுத்துபுட்டா திரும்பஒத தாண்டவக் கோனே
கவனத்தோட வாழலயே தாண்டவக் கோனே இன்னும்
கன்னிகழி யாதவந்தான் தாண்டவக் கோனே


புள்ளைங்கள்ளாம் படிக்கிறாங்க தாண்டவக் கோனே அங்கே
போடுறதுல கையவச்சான் தாண்டவக் கோனே
அள்ளி அள்ளி ஊட்டுறானே தாண்டவக் கோனே எதுக்கும்
ஆகாத முண்டங்களுக்குத் தாண்டவக் கோனே

கோடரிக்கும் காம்புபோல தாண்டவக் கோனே இவன்
கோளுவச்சான் குடிகெடுத்தான் தாண்டவக் கோனே
மாடுபோல பாடுபட்டான் தாண்டவக் கோனே இன்னும்
மனுசனாக மாறலியே தாண்டவக் கோனே

ரெண்டாயிரம் வந்திடுச்சி தாண்டவக் கோனே இன்னும்
ரெண்டு ரெண்டா பிரிஞ்சுருக்கான் தாண்டவக் கோனே
மண்டுத்தனமா வாழுறத தாண்டவக் கோனே இவன்
மகத்துவமா நினைக்கிறானே தாண்டவக் கோனே

        
பிரித்தானிய ஆட்சியின்போது தமிழகத்திலிருந்து ஒப்பந்தக் (சஞ்சி) கூலிகளாகத் தமிழ் மக்கள் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட வரலாற்றிலிருந்து பாடல் தொடங்குகிறது. இங்கு வந்த தமிழர்கள் காட்டுலும் மேட்டிலும் உழைத்து நாட்டைக் கட்டியெழுப்பிய கதைப் போகிற போக்கில் சொல்லிப் போகிறார் கவிஞர். கூடவே, மலேசியத் தமிழர்களின் இன்றைய அவலங்களையும் பாடிக் காட்டுகிறார்.தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியைப் பக்குவமாகச் சொல்லிச் செல்லுவது கவரும்படியாக உள்ளது.மலேசிய அரசியல் சூழல் இன்று மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த மாற்றத்தின் காரணமாக அரசியல் பிழைப்போரிடமும் மேல்மட்டத் தலைவர்கள் தொடங்கி குட்டி குட்டி தலைவர்கள் வரையில் தன்னலப் போக்கு வரம்புமீறி போய்க்கொண்டிருக்கிறது. தன்னலத்துக்காக தன் இனத்தையே அழிக்கும் அளவுக்கு இன்று தமிழர்கள் துணிந்துவிட்டார்கள். இது அரசியல் நிலை என்றால், குடும்ப அளவிலும் இன்று இதே நிலைமைதான். ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் முதலிய பண்புகள் நலிந்துபோய்விட்டன. தமிழர்கள் தங்களுக்குள்ளேயே பிளவுபட்டதும் அல்லாமல் அடித்துக்கொள்வது பேரவலமாக இருக்கின்றது.

  • மலேசிய  மரபுக்கவிதை
Image result for செ.சீனி நைனா முகம்மது மலேசியாவில் தமிழ் தமிழாக நிலவுவதற்கும் நிலைபெறுவதற்கும் அரும் பாடாற்றி வரும் விரல்விட்டுச் சொல்லத் தகுந்தவர்களில் குரல்விட்டுச் சொல்லத்தக்கவர் கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள். தமிழே தம் மூச்சாக வாழ்ந்து வருபவர் இவர். இதழியல் துறையில் மிக ஆழ்ந்த ஈடுபாடும் நீண்ட பட்டறிவும் கொண்டவர்.


தமிழ் இலக்கணத்தின் மரபியலையும் மரபுக் கவிதையின் மாண்பியலையும் தனியராகவே முயன்று காப்பதோடு, இவ்விரண்டையும் இளையோருக்குப் பயிற்றுவிக்கும் அரிய பணியையும் அயராது மேற்கொண்டு வருபவர். அதற்காகவே, நாடெங்கிலும் பம்பரமாகச் சுற்றிச்சுழன்று வகுப்புகள், பட்டறைகள், பயிலரங்குகள் என செயற்கரிய செய்பவர். இலக்கணமும் மரபுக் கவிதையும் கடுமையானது என்ற பொய்யான பரப்புரைகளை அடித்து நொறுக்கி அவை இரண்டையும் எளிதாகவும் இனிதாகவும் ஆக்கிக்காட்டிய பெருமை இவரையே சாரும்.

இவருடைய தொல்காப்பியத் திருப்பணியைப் போற்றி, தமிழகத்தின் தமிழ்ச்சுரங்கம் அமைப்பு கடந்த 2007ஆம் ஆண்டில் இவருக்கு தொல்காப்பிய விருதுவழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இறையருட்கவிஞர் நல்லார்க்கினியர் என்று எல்லாராலும் அன்பொழுக அழைக்கப்பெறும் இவர் உங்கள் குரல்மாதிகையின் ஆசிரியராகவும் இருந்து நல்லதமிழ் வாழ்வுக்கும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் வருந்தி உழைக்கின்றவர். கடந்த 2008இல் தனியொருவராக இருந்து உலக அளவில் முதன்முதலாக தமிழ்ச் செம்மொழி சிறப்புமலரைவெளியிட்டு சாதனையை நிகழ்த்திக் காட்டியவர்; மலேசியத் தமிழ் வரலாற்றில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியவர்.
***************

இவனா தமிழன்? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்கும் கூடப் பொறுக்காது இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைபேறு!


தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ்மர பெல்லாம் மீறுகிறான் அதை
தடுத்தால் பாம்பாய்ச் சீறுகிறான்!

வடமொழி சொல்லைப் போற்றுகிறான்
வம்புக்கு தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!

வடமொழி சொல்லைப் போற்றுகிறான்
வம்புக்கு தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!

தானும் முறையாகப் படிப்பதில்லை
தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை
தானெனும் வீம்பில் தாங்கிய பணியில்
தன்கடன் பேணி நடப்பதில்லை நல்ல
தமிழே இவனுக்குப் பிடிப்பதில்லை!

இவனுக்கு முன்னே பலபேர்கள்
இவனுக்கும் பின்னே வருவார்கள்
தவணைகள் தீரும் தவறுகள் மாறும்
தமிழுக்கு நன்மை புரிவார்கள் இவன்
தந்ததைத் தெருவில் எறிவார்கள்!

தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்
அமுதென நஞ்சை அருந்துவர் போலே
அழிவினைக் கூவி அழைப்பவனே தான்
அடந்ததை எல்லாம் இழப்பவனே!


டுத்த எடுப்பிலேயே இவனா தமிழன்? என்று நச்சென்று தொடங்கும் சீர்களில் கொப்பளிக்கும் அறச்சீற்றம் கவிதையை ஆறவமர இறுதிவரை படிக்கச் செய்துவிடுகிறது. சொல்லுக்குச் சொல் தமிழுக்கு எதிரான கேடுகளையும் மொழிமானங்கெட்டக் கேடர்களையும் தாக்குகிறார் கவிஞர்.தமிழ்மரபுவழி வந்த தமிழர்களே இன்று கோடரிக் காம்புகளாக மாறி, தமிழையே வெட்டிச் சாய்க்கவும் வெறித்தனமாக சிதைக்கவும் செய்கின்றனர். சொந்த மொழிக்கு எதிராக இப்படியொரு ஈவிரக்கமற்றச் செயலை எப்படித்தான் செய்கிறார்களோ? என்று நாம் நினைப்பதற்குள் இப்படித்தான் செய்கிறார்கள் என்று கவிஞரே சொல்லிவிடுகிறார்.மலேசியாவைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கான அரசுப்பணிகள் பெரும்பாலும் தமிழ்ப் படித்ததன் பயனாகவே கிடைக்கிறது. தமிழ் போட்ட பிச்சையால் பிழைப்பு நடத்திக்கொண்டே நன்றிகெட்டத்தனமாகத் தமிழுக்கு இரண்டகம் செய்கிறார்கள்.  இந்த நோவும் வருத்தமும் இத்தோடு நின்றதா? என்றால் இல்லை. இன்னும் தொடர்கிறது இப்படி,    வேண்டுமென்றே, வேண்டாத சொற்களைத் தமிழில் கலப்பது இன்று நவினமாகிவிட்டது. மக்கள் பேசுகிறார்கள், தோட்டத்தில் பேசுகிறார்கள், நகர மக்களுக்கு இதுதான் புரிகிறது, இதுதான் நடப்பியல் என்றெல்லாம் நியாயங்கள் கூறிக்கொண்டு ஆங்கிலம், மலாய், சமற்கிருதம் என இன்னும் பிற அன்னிய மொழிகளை அளவுக்கதிகமாகக் கலந்து தமிழைச் சீரழிக்கின்றனர்.
இதைவிட கொடுமை ஒன்றும் உண்டு. ஒருதரப்பினர் இப்போது கொச்சை மொழிகளையும் பச்சைப் பச்சையாகவும் எழுதத் தொடங்கிவிட்டனர். இவற்றால், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் எதிர்விளைவுகளை இவர்கள் அறிந்தார்களில்லை. யாராவது அதனை எடுத்துச்சொன்னாலும் கொஞ்சமும் காதுகொடுப்பதே இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் நம் கண்முன்னாலேயே தாய்மொழி அழியும் என்றால் பொய்யில்லை. ஆனால், இவர்கள் இதனை நம்புவதே இல்லை. சரி, இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் தெரியுமா?இப்படியெல்லாம் தமிழை அழிக்கிறார்களே என வருந்தி அழுதுகொண்டிருக்கும் உணர்வாளர்கள் பற்பலர். அவர்களுக்கெல்லாம் கவிஞர் ஓர் ஆறுதலையும் சொல்லிவைக்கிறார்.


         
தமிழுக்கு எதிராகக் கேடுகளும் கீழறுப்புகளும் நடப்பது வரலாற்றில் புதிதல்ல. ஒரு காலத்தில் முக்கால் பங்கு வடமொழி கலந்து எழுதப்பட்ட மணிப்பிரவாளம்இன்று சுவடு இல்லாமல் அழிந்துபோயிருப்பது இதற்கொரு நற்சான்று. காலந்தோறும், கெடுபுத்திகொண்டு தமிழுக்கு கேடிழைத்த கேடர்கள் செத்தொழிந்தார்களே அன்றி தமிழ் இன்றும் வளமோடு வாழுகின்றது. இன்று அப்படியே ஆங்கிலம் போன்ற அன்னிய மொழிகளைக் கலந்தெழுதும் கயவர்களும் காலத்தால் காணாமல் போய்விடுவர்; அவர்களின் படைப்புகளும் கரைந்துபோய்விடும் என்று கவிஞர் உணர்த்துவதாகவே தோன்றுகிறது.



6.தற்காலத் தமிழறிஞர்கள்

அ.பாவாணர் வாழ்க்கைக் குறிப்புகள்


தேவநேயப்பாவாணர்Image result for பாவாணர்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரநயினார் கோயில் என்னுமிடத்தில் ஆங்கில ஆண்டு 07.02.1902 அன்று பிறந்தார்.  ஞானமுத்தர் பரிபூரணம் தம்பதியருக்கு மகனாய்த் தோன்றியவர்.  தந்தை கிறித்துவ மதத்தைத் தழுவினார்.  இதன் விளைவாகத் தன் பெயரின் இறுதியில் தோக்கசு என்னும் பின்னொட்டைச் சேர்த்துக்கொண்டார்.  அஃதாவது `ஞானமுத்து தோக்கசு என்று அழைக்கப்பட்டார்.  தோக்கசு அவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியராகச் சில காலம் பணிபுரிந்தார்.  முதல் மனைவி ஈழத்துக்குப் பிரிந்து சென்றுவிட்டார்.  இதனால்  தன்னுடைய முதல் மனைவியை பிரிய நேரிட்டது. இரண்டாவதாக மணக்கப்பெற்றவர் தான் பரிபூரணம் அம்மையார்.  அம்மையார் அவர்கள் கோயில்பட்டிக்கு அருகிலுள்ள பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்தவர்.பத்துப் பிள்ளைகள் இத்தமபதியருக்குப் பிறந்தனர்.  பத்தாவது மகனாகத் தோன்றியவரே பாவாணர்.

இளமைப் பருவம்:

பாவாணரின் இளம் பருவம் மகிழ்வூட்டுவதாய் இல்லை.  ஐந்து அகவையை எட்டும் பொழுது தந்தை இறக்க நேரிட்டது.  பின்னாளில் தாயும் மறைந்தார்.  எவர் வளர்ப்பர் என்று ஏங்கிய பாவாணரை அவருடைய தமக்கையார் வளர்க்கத் தொடங்கினார்.  இருப்பினும் சில காலமே தன் தமக்கையாரிடம் இருந்தார்.  கல்வி கற்க வேண்டி அவரிடமிருந்து பிரிந்து சென்றார். 
இவர் கல்வி கற்க `யங் என்பவர் பொருளுதவி செய்தார்.  இப்பொருளுதவியைப் பாவாணர் கடனாகவே பெற்றார்.  ஆம்பூரில் எட்டாம் நிலை வரை பயின்ற பின்னர் யங் அவர்களின் உதவியுடன் பாளையங்கோட்டைக்குச் சென்று ஒன்பதாம் நிலை முதல் பதினோராம் நிலை வரை கல்வி பயின்றார். 
பாவாணருக்கு ஆங்கில மொழியின் பால் அதிக ஈடுபாடு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  இதற்குச் சான்றாக அவர்கள் கூறுவது யாதெனின்.  ``பாவாணர் அப்பொழுதே ஆங்கில மன்றங்களில் உறுப்பினராகிச் செயலாளராகச் செயல்பட்டார்’’ என்பது தான். 

கல்வி:

சீயோன் மலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.  தம் அறிவை மேன்மேலும் விசாலப்படுத்திக்கொள்ள விழைந்து தமிழ்ப்புலமைக்கான கல்வியைக் கற்றார்.  1942ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் பட்டமும் 1926 ஆம் ஆண்டு திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கப்புலவர் பட்டமும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் பட்டமும் பெற்றார்.பாவாணர் தன்னுடைய வாழ்நாளில் தமிழுக்காக அளவிறந்த நேரங்களைச் செலவிட்டிருக்கிறார்.  எவர் தமிழுக்காக நேரத்தைச் செலவிடத் துணிகிறாரோ அவரை நன்னிலையடையச் செய்துவிடுகிறாள் நந்தமிழ் மகள். அவ்வகையில் பாவாணர் அவர்களின் `செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி முயற்சி இங்கு நினைவுகூரத்தக்க ஒன்று.  பிற மொழிகளின் துணையின்றி தமிழ் தனித்து வழங்கப்பெறும் என்னும் கூற்றை நிறுவுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிக்குப் பல தடைக் கற்கள் சவால்விட்டு எதிர்நின்றன.

ஆய்வு:

``
குமரிநாடே திராவிட மரபு தோன்றிய இடம் என அவர் வரையறுத்துச் சொன்னார்.  ஆனால் அப்போது அது மறுக்கப்பட்டது.  ஆம் பாவாணர் அவர்கள் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக ஆய்ந்து சொன்ன உண்மை இது.  திராவிடர்கள் வேறு நாட்டிலிருந்து இங்கு வந்து நிலைத்தனர் என்னும் கருத்தை அவ்வேட்டில் அவர் மறுத்துத் தெள்ளிதின் விளக்கியிருந்தார்.  அப்பொழுது அதிகாரத்தில் இருந்த ஆதிக்கச் சக்திகள் பாவாணரின் கொள்கையை ஆய்வை ஏற்க மறுத்தன.  இதனால் பாவாணர்க்கு முனைவர் பட்டம் கை நழுவிப் போயிற்று.  எத்தனையோ மாணவர்கள் இன்று  அவருடைய கொள்கைகளை எடுத்தாய்ந்து முனைவர் பட்டம் பெறுகின்றனர்.  அனால் அவரோ அப்பட்டத்தை அன்று அடைய முடியவில்லை.  இது முனைவர் தமிழமல்லன் அவர்களின் பாவாணர் குறித்த அன்பு மேலீட்டு வரிகளாகும்.  இதற்குக் காரணம் தமிழ் மறுப்பு, தமிழ் மொழி நிலைக்கக் கூடாது,  அதன் உண்மை நிலை மறைக்கப்பட்டு வடமொழி வளம் பெற வேண்டும் என்னும் எண்ணங்கள் தான்.மொழி குறித்து அவர் செய்த ஆய்வுகள் இன்றும் பலரால் வியந்து போற்றத்தக்கதாய் உள்ளன.  ஆம் அப்படித் தான் போற்ற வேண்டும் ஏனெனில் 23 மொழிகளைக் கற்றுத் தேர்ந்த மொழி வல்லாளரின் ஆய்வு பிரமிக்கத்தானே வைக்கும்.  பன்மொழி அறிவு வாய்க்கப்பெற்றதாலேயே பாவாணரின் மொழியாய்வு சாத்தியமாயிற்று.


திரு.வி.க. சில குறிப்புகள்

Image result for திரு வி க

ஆ.திரு.வி.கலியாணசுந்தரனார்


1883 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 அன்று பிறந்தார். விருத்தாசலம் முதலியாருக்கும் சின்னம்மாளுக்கும் ஆறாவது குழந்தையாகத் தோன்றினார்.  1891 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் தொடக்கக் கல்வி கற்றார்.  1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.  சேர்ந்த சில மாதங்களில் கை கால் முடக்கம் ஏற்பட்டது.  இதனால் கல்வி தடைப்பட்டது.  நான்கு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லவில்லை.மீண்டும் 1898 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் வரை பயின்றார்.  ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை சார்பாக நீதிமன்றத்துக்குப் போனதால், இறுதித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து நின்றார்.  1901 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் இலக்கியம், சைவ சாத்திரங்கள் பயின்று தேர்ந்தார்.   
1907 இல் கதிரைவேலர் மறைவு நிகழ்ந்தது.  விபின் சந்திர பால் சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது அதுமுதல் தேசியத்தின் பொருட்டுப் போராடத் துணிந்தார்.  1907 முதல் 1908 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஸ்பென்சர் கம்பெனியில் பணி செய்தார்.  அங்கே இந்திய உரிமைகளைப் பற்றி சக ஊழியர்களிடம் படித்துக்காட்டுவார்.  இதனால் அக்கம்பெனியின் மேலாளர் திரு.வி.க வை எச்சரிக்க நேர்ந்தது.  இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாத திரு.வி.க அப்பணியைத் துறந்தார்.  1908 ஆம் ஆண்டு ஜஸ்டின் சதாசிவ ஐயருடன் தொடர்பு ஏற்பட்டது.  1910 ஆம் ஆண்டு அன்னிபெசண்ட் அம்மையாரைச் சந்தித்தார்.  அம்மா என்று தான் திரு.வி.க பெசண்டை அழைத்து மகிழ்வார்.  1910 முதல் 1916 வரை வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1912 ஆம் ஆண்டு கமலாம்பிகை என்னும் அம்மையாரை மணந்தார்.  மணவாழ்க்கை அவருக்கு இனிப்பூட்டுவதாய் இருந்தது.  தன்னிடமிருந்த மிருகப் போக்கை மாற்றியடு மணவாழ்க்கை தான் என்று தன்னுடைய குறிப்பில் திரு.வி.க குறிப்பிட்டுள்ளார். (அவருடைய மண வாழ்க்கைக் குறித்து மற்றொரு கட்டுரையில் விரிவாக அலசலாம். )
1914 ஆம் ஆண்டு சுப்புராய காமத், எஸ்.சீனிவாச ஐயங்கார் தொடர்பு ஏற்பட்டது.  1916 ஆம் ஆண்டு வெஸ்லி கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.  1917 ஆம் ஆண்டு பி.பி. வாடிய உடன் தொடர்பு ஏற்பட்டது.  பின்னாளில் திரு.வி.க தொழிற்சங்கம் தொடங்குவதற்கு வாடியாவின் தொடர்பு தான் காரணமாக இருந்தது.1917 ஆம் ஆண்டு தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டி பணியை விடுத்தார்.  திசம்பர் 7ஆம் நாள் தேசபக்தன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.  அவ்விதழ் தான் அவரை அதிகம் சமூகத்துடன் தொடர்புகொள்ளச் செய்தது.  நாடு, நாட்டு மக்கள் என்று தன்னுடைய பார்வையை விசாலப்படுத்திக் கொண்டார்.  தேசபக்தனில் இரண்டரை அண்டுகள் பணியாற்றினார் அதன் பின்னர் அவ்விதழின் செயலாளருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக இதழ்ப்பணியை விடுத்தார்.  பின்னர் நவசக்தி என்னும் இதழை நண்பர்களின் துணையுடன் தொடங்கி நடத்தி வந்தார்.
1918 இல் இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்சங்கம் தொடங்கினார்.  சென்னைத் தொழிலாளர் சங்கம் என அதற்குப் பெயரிட்டார்.  இச்சங்கத்திற்கு திரு.வி.க துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார்.  இதே ஆண்டில் தான் அவரின் துணைவியார் இயற்கை எய்தினார்.  உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்த நேரிட்டது.
1919 ஆம் ஆண்டு முதன் முதலாகக் காந்தியடிகளைச் சந்தித்தார்.  இவ்வாண்டில் தான் பெரியாரின் நட்பும் திரு.வி.கவுக்குக் கிடைக்கப்பெற்றது.  திலகரை வ.உ.சி உடன் சென்று சந்தித்தார்.  1920 ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் சங்கம் தோற்றம் பெற்றது.  இவ்வாண்டு அக்டோபர் திங்களில் நவசக்தி என்னும் இதழைத் தொடங்கினார்.1921 ஆம் ஆண்டு ஆளுநர் வெலிங்டன் பிரபு இவரை அழைத்து நாடுகடத்திவிடவதாக மிரட்டினார்.  ஆனால் அதற்கு திரு.வி.க அஞ்சவில்லை.  சர். தியாகராய செட்டியாரின் உதவியால் நாடுகடத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டது. 
1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் தனிச்சிறப்புடைய மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது.  தலைவர் திரு.வி.க வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்காமல் தள்ளியதால் பெரியார் ஈ.வே.ரா மாநாட்டிலிருந்து வெளியேறினார்.  இதனால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.
1944 ஆம் ஆண்டு திரு.வி.க வின் வாழ்க்கைக் குறிப்பு வெளிவந்தது.  1947 ஆம் ஆண்டு திசம்பர் 7 வரை காங்கிரஸ் ஆட்சியில் திரு.வி.கவுக்கு வீட்டுச் சிறைவாசம் விதிக்கப்பட்டது.  1949 இல் தன்னுடைய ஒரு கண் பார்வையை இழந்தார், பின் இரு கண்களுமே இழக்க நேரிட்டது.  1953 செப்டம்பர் 17 அன்று மறைந்தார்.
இ.பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்
பி.தயாளன்
Image result for அப்பாதுரையார்
ஆய்வறிஞர் அப்பாதுரையார் எடுக்க எடுக்கக் குறையாத ஓர் அறிவுச் சுரங்கம்; பன்மொழிப் புலவர்; தென்மொழி தேர்ந்தவர்; யாரும் செய்ய முடியாத சாதனையாகப் பலதுறைகள் பற்றிய நூற்றுக் கணக்கான நூல்களைத் தமிழுக்குத் தந்தவர்; அகராதி தொகுத்தவர்; அக்கலையில் ஆழம்கால் கொண்டவர்; சிறந்த சிந்தனையாளர்; பகைவர் அச்சுறும்படி சொல்லம்புகளை வீசும் சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர்" என்று இவ்வாறெல்லாம் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனால் போற்றிப் புகழ்ந்திட்ட பூந்தமிழ் அறிஞர் கா.அப்பாதுரையார். 

கா.அப்பாதுரையார், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில், காசிநாதப்பிள்ளை - முத்துலெட்சுமி அம்மாள் வாழ்விணையருக்கு 1907ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் "நல்லசிவம்" என்பதாகும். தொடக்கக் கல்வியை ஆரல்வாய் மொழியிலும், பள்ளிக் கல்வியை நாகர்கோவிலிலும், கல்லூரிக் கல்வியை திருவனந்தபுரத்திலும் பயின்றார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  இந்தி மொழியில் "விஷாரத்" தேர்ச்சியடைந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டதாரியானார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார்.  திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். காரைக்குடி, அமராவதி புதூர் குருகுலப் பள்ளியில் அப்பாதுரையார் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய போது, இவரிடம் கல்வி பயின்ற மாணவர் கவிஞர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது. 
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மத்திய அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 வரை பணியாற்றினார். அப்போது, "இந்தியாவின் மொழிச்சிக்கல்" என்ற ஆங்கில நூலை எழுதியதால் தனது வேலையை இழந்தார்.  சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகப் பணி செய்தார். மேலும் தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார்.  திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், இலிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் முதலிய இதழ்களில் இவரது எழுத்துப் பணி தொடர்ந்தது.  அப்பாதுரையார் இந்தி மொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர். ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட்டபோது, 1938 - 39ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டார். 
  • குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
  • தென்னாட்டுப் போர்க்களங்கள்
  • சரித்திரம் பேசுகிறது
  • சென்னை நகர வரலாறு
  • ஐ.நா.வரலாறு
  • கொங்குத் தமிழக வரலாறு
முதலிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
  • திராவிட நாகரிகம்
  • திராவிடப் பண்பு
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிட மொழி
என்பனவற்றுக்கெல்லாம் மிகப் பொருத்தமான விளக்கங்களைத் தம் வரலாற்று நூல்களில் அளித்துள்ளார். அப்பாதுரையாரின், தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற வரலாற்று நூல், போர்க்களங்களில், பட்டியலன்று,
  • போர்க்காரணங்கள்
  • போர்களின் பின்புலங்கள்
  • போர்ச் செயல்கள்
  • போரின் விளைவுகள்
  • போர்களின் வழியாக புலப்படும் அரசியல் நெறிகள்
ஆகியவற்றையெல்லாம் ஆராயும் நூலாக அமைந்துள்ளது என வரலாற்று அறிஞர்கள் அந்நூலைப் போற்றுகின்றனர். தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூல் குறித்து அறிஞர் அண்ணா, "இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்" என்று வியந்து கூறியுள்ளார்! 


  • கிருஷ்ண தேவராயர்
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
  • டேவிட் லிவிங்ஸ்டன்
  • அரியநாத முதலியார்
  • கலையுலக மன்னன் இரவி வர்மா
  • வின்ஸ்டன் சர்ச்சில்
  • அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
  • அறிவுலக மேதை பெர்னாட்ஷா
  • கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

மற்றும்,
  • ஆங்கிலப் புலவர் வரலாறு
  • சங்க காலப் புலவர் வரலாறு
  • அறிவியலாளர் பெஞ்சமின் ஃபிராங்கிளின்
உள்பட பலரின் வாழ்க்கை வரலாறுகளை அரிய பல நூல்களாகப் படைத்துள்ளார்.
மேலும் சங்க காலப் புலவர்களில்,

  • பிசிராந்தையார்
  • கோவூர்கிழார்
  • ஒளவையார்
  • பெருந்தலைச் சாத்தனார்

முதலிய நால்வர் பற்றியும் எழுதியுள்ளார் அப்பாதுரையார். 
  • அலெக்ஸாண்டர்
  • சந்திரகுப்தர்
  • சாணக்கியர்
ஆகிய மூவரைப் பற்றி ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய நூலை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.இளைஞர்கள் பயிலும் பாடநூல்களுக்காகவே, சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிக் குவித்துள்ளார்.திருக்குறளுக்கு விரிவும் விளக்கமுமாக பல்லாயிரம் பக்கங்கள் ஓயாமல் எழுதிக் குவித்தவர். அவரது "திருக்குறள் மணி விளக்க உரை" என்ற தலைப்பில் அமைந்த நூல், ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கவியரசு கண்ணதாசன் நடத்திய "தென்றல்" வார இதழிலும், "அன்னை அருங்குறள்" என்ற தலைப்பில் புதிய குறள்பா படைத்துள்ளார். திருக்குறள் உரைக்கெனவே "முப்பால் ஒளி" என்ற இதழை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டார். அவரது திருக்குறள் விளக்க உரையில், உலகின் பல மொழிகளில் உள்ள அறிவார்ந்த அற நூல்களோடு ஒப்பிட்டு, திருக்குறளைக் காணும் காட்சி மிகப் புதியது எனலாம். 
 உலக இலக்கியங்கள்" என்ற நூலில்,

  • பிரெஞ்ச்
  • சீனம்
  • உருசியா
  • உருது
  • பாரசீகம்
  • கன்னடம்
  • தெலுங்கு
  • ஜெர்மனி
  • வடமொழி
  • கிரேக்கம்

எனப் பத்து மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து அரிய பல செய்திகளைத் தந்துள்ளார். 

  • வரலாறு
  • வாழ்க்கை வரலாறு
  • மொழிபெயர்ப்பு
  • இலக்கியத் திறனாய்வு
  • சிறுகதை
  • நாடகம்
  • பொது அறிவு நூல்
  • அகராதி
  • உரைநூல்
  • குழந்தை இலக்கிய நூல்

என எத்துறைக்கும் ஏற்றதான நூற்று இருபது அரிய நூல்களைப் படைத்த ஆழ்ந்தகன்ற தமிழறிஞர் அப்பாதுரையார். இப் பன்மொழிப் புலவர் 1989ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். எனினும், அவனியை விட்டு என்றென்றும் நீங்காமல் அவரது புகழும், அவரது படைப்புகளும் நின்று விளங்கும்.


No comments:

Post a Comment